போலி ஐஏஎஸ் அதிகாரி: அவகாசம் கோரிய அரசுத் தரப்பு!

Published On:

| By Balaji

போலி ஐஏஎஸ் அதிகாரி குறித்து தலைமைச் செயலக அதிகாரிகளிடம் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மத்திய குற்றப் பிரிவு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் துணைச் செயலாளராகப் பணியாற்றுவதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, திருவண்ணாமலையைச் சேர்ந்த நாவப்பன் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் மீது விசாரணை நடத்தக் கோரி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

ADVERTISEMENT

“தன்னை ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறிக்கொண்ட நாவப்பன், ஏற்கனவே 50 பேரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். இது பற்றிய செய்தியைப் பார்த்த பின்னர் தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், எங்களுக்கு ரூ.2 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும். முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்று அவர் தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.

நேற்று (மார்ச் 9) இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்தில் ஆஜரானார் சென்னை மத்திய குற்றப் பிரிவு ஆய்வாளர். இந்த வழக்கு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக நீதிபதியிடம் தெரிவித்தார்.

ADVERTISEMENT

போலி ஐஏஎஸ் அதிகாரி குறித்து தலைமைச் செயலக அதிகாரிகளிடம் விசாரணை நடத்துவதற்கான நடவடிக்கையை எடுக்கப் போவதாகவும், அது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் எனவும் அரசுத் தரப்பு வழக்கறிஞர் கோரினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை இரண்டு வாரக் காலத்துக்குத் தள்ளிவைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share