அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான அறிவிப்பு நாளை வெளியாகுமென்று தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய ரூ.6,800 கோடி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும், பழிவாங்கும் நோக்கில் தொழிலாளர்கள் பணியிடை நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்வது போன்ற நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும் என்பது உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்டங்கள் நடத்தி வந்தன.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது தொடர்பான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நேற்று (அக்டோபர் 31) சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இது தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பான அறிவிப்பு நாளை (நவம்பர் 2) வெளியிடப்படும் என்று தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இது குறித்து மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர் வேலைநிறுத்தம் தொடர்பாக, இன்று (நவம்பர் 1) செய்தியாளர்களிடம் பேசினார் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகி சவுந்தரராஜன். “போக்குவரத்துத் தொழிலாளர்களை வஞ்சிக்கும் நோக்குடன் அரசு நடந்துகொள்கிறது. 7,000 கோடி ரூபாய் நிலுவைத்தொகையில் 1,000 கோடி ரூபாய் தருவதாகக் கூறுகிறது தமிழக அரசு. தீபாவளி முன்பணம் கூட தர மறுக்கிறது. அரசு ஊழியர்களுக்கும், மின்வாரியத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு ஊழியர்களுக்கும் பிரச்சினை இல்லாமல் வழங்குகிறார்கள். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மட்டும் பணத்தை வழங்காமல், பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள்” என்று தெரிவித்தார். வேலைநிறுத்தம் தொடர்பான அறிவிப்பை நாளை தெரிவிக்கவிருப்பதாகக் கூறினார்.
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 5ஆம் தேதியும் விடுமுறை என்று அரசு அறிவித்துள்ளதால், பெருநகரங்களில் இருந்து சொந்த ஊருக்குச் செல்பவர்கள் வரும் வெள்ளிக்கிழமை முதல் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பர். நவம்பர் 2, 3, 4, 5 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கிய நிலையில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடர்பான அறிவிப்பு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
