ரேபிடோ பைக் டாக்ஸி சேவை தொடர்ந்து செயல்படச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
போக்குவரத்து நெரிசல், பெட்ரோல் – டீசல் விலையேற்றம் போன்ற காரணங்களால் சென்னை வாசிகள் ஓலா, உபேர் உள்ளிட்ட டாக்ஸி சேவையை அதிகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். டாக்ஸி சேவையைத் தொடர்ந்து ரேபிடோ செயலி வாயிலாக அறிமுகம் செய்யப்பட்ட ‘பைக் ஷேரிங்’ சேவையும் சென்னையில் பிரபலமானது. இந்த ரேபிடோ மொபைல் செயலியின் வாயிலாக முன்பதிவு செய்தால் நாம் செல்ல வேண்டிய இடத்துக்கே இருசக்கர வாகனத்தில் வந்து இறக்கிவிடும் வசதி உள்ளதால் இது அதிக வரவேற்பைப் பெற்றது. ஆனால், தனிநபர் பயன்பாட்டுக்கான இருசக்கர வாகனங்களை வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது என்று புகார்கள் எழுந்ததால் இச்சேவையைப் பயன்படுத்த வேண்டாம் என்று போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியது.
ரேபிடோ செயலியைக் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் போன்ற தளங்களிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இத்தடையை எதிர்த்து பைக் ஷேரிங் சேவை வழங்கும் *ரோப்பென் டிரான்ஸ்பொர்டேசன் சர்வைசஸ் பிரைவேட் லிமிடெட்* நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆகஸ்ட் 1ஆம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பிலிருந்து பைக் ஷேரிங் தொடர்பான முறையான சட்டங்கள் வகுக்கப்படும் வரை டாக்ஸி சேவைக்கு விதித்த தடையை ரத்து செய்வதாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம் புதிய சட்டங்கள் அமலாகும் வரை ரேபிடோ பைக் டாக்ஸி சேவையைத் தொடரலாம்.
இந்த வழக்கு விசாரணையில் வினீத் கோத்தாரி, சி.வி.கார்த்திகேயன் அடங்கிய அமர்வு, ஆப்பிள் ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோர் தளங்களிலிருந்து ரேபிடோ செயலியை நீக்குவதற்கு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கும் இடைக்காலத் தடை விதித்துள்ளது. முன்னதாக ஜூலை 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் பைக் ஷேரிங் சேவையைத் தடை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் பைக் டாக்ஸி சேவை தொடர்ந்து செயல்படவுள்ளது.
**
மேலும் படிக்க
**
**[வானம் கொட்டட்டும்: மணிரத்னம் சர்ப்ரைஸ் விசிட்!](https://minnambalam.com/k/2019/08/02/3)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக இல்லாமல் 100 எம்.எல்.ஏ.க்கள் – அழகிரி பேச்சு!](https://minnambalam.com/k/2019/08/01/71)**
**[சித்தார்த்தா ஏன் வெளிநாடு தப்பிச் செல்லவில்லை?](https://minnambalam.com/k/2019/08/02/51)**
**[பிக் பாஸ்: சாக்ஷி கோர்ட்டில் கவின் மட்டுமா அக்யுஸ்டு?](https://minnambalam.com/k/2019/08/02/27)**
**[சொமட்டோ: அமித் சுக்லாவுக்கு போலீஸ் எச்சரிக்கை!](https://minnambalam.com/k/2019/08/02/24)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**






