கடைசி நேரத்தில் மிட்செல் ஸ்டார்க்கின் அசத்தலான அரை சதத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணி 282 ரன்னை இலக்காக நிர்ணயித்தது.
புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா அணிகள் இடையிலான இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 212 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி, 138 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 73 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
எனினும் அலெக்ஸ் கேரியின் (43) பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 100 ரன்களை கடந்தது.
நேற்றைய ஆட்ட நேர முடிவில் கைவசம் 2 விக்கெட்டுகள் இருக்க அந்த அணி 218 ரன்கள் முன்னிலையுடன் களத்தில் இருந்தது. ஸ்டார்க் மற்றும் லியன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியதும் லியன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து 10வது விக்கெட்டுக்கு சேர்ந்த ஸ்டார்க் ஹெசில்வுட் ஜோடி பொறுமையாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
ஸ்டார்க்கும் அரைசதம் அடிக்க, இந்த ஜோடியும் 50 ரன்கள் கடந்த நிலையில், கடைசி விக்கெட்டாக ஹெசில்வுட்டும் மார்க்ரம் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடர்ந்து 282 ரன்கள் இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.
