சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் வருகிற 2030ஆம் ஆண்டுக்குள் பேட்டரி கார்களுக்கு மாறுவதை மத்திய அரசு இலக்காக வைத்துள்ளது. இதைச் செயல்படுத்துவதன் மூலம் இந்தத் துறையில் 15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களில் வாகனப் புகையால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருகிறது. சுற்றுச்சூழல் மாசடைவதை கட்டுப்படுத்தும் விதமாக 2030ஆம் ஆண்டுக்குள் 100 சதவிகிதம் பேட்டரி கார்களுக்கு மாற இலக்கு வைத்துள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் பயன்பாடு வெகுவாகக் குறையும். இதன்மூலம் கச்சா எண்ணெய் இறக்குமதி கட்டணம் குறையும்.
சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில் பி.எஸ்-4 ரக வாகனங்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 2020ஆம் ஆண்டில் பி.எஸ்-5 ரக வாகனங்களைத் தயாரிக்க முயற்சிக்க வேண்டும் என்றும் கூறியது. இதற்குப் பிறகு இந்தியாவில் பேட்டரி கார்கள் தயாரிப்பு சற்று அதிகரித்து வருகிறது. 100 சதவிகிதம் பேட்டரி கார்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என்ற சூழலில் இத்துறையில் புதிதாக 15 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
