மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, அனைத்து மாவட்டங்களிலும் பெண் போலீசார் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்க அம்மாநில அரசு முடிவுசெய்துள்ளது.
சமீப காலமாக மகாராஷ்டிராவில் பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, குடும்ப வன்முறை, கடத்தல் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுபோன்ற வழக்குகளை முழுமையாக விசாரணை நடத்தவும், சரியான நேரத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்யவும் சிறப்பு விசாரணைக் குழு தேவை என்று கருதப்பட்டது.
அதன்படி மாவட்டந்தோறும் 16 பேர் கொண்ட புலனாய்வு குழு அமைக்கப்படுகிறது. இதில் துணை போலீஸ் சூப்பிரண்டெண்டெண்ட் தலைமையில் 4 அதிகாரிகளும், 12 போலீஸ்காரர்களும் செயல்படுவார்கள். இந்தக் குழு பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்திக் குறிப்பிட்ட நேரத்தில் தன் அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்.
முன்னதாக, மாநில போலீஸ் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை கண்காணிக்கவும், விசாரிக்கவும், ஏழு முக்கிய மாவட்டங்களில்(மும்பை, தானே, புனே, நாக்பூர், புனே ரூரல், யவத்மல் மற்றும் அஹமத்நகர்) புலனாய்வுக் குழுக்களை அமைத்தது. ஆனால், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருவதால், மாவட்ட அளவில் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
இந்தக் குழு பெண்கள் தொடர்பான குற்றச் சம்பவங்களில் தண்டனை விகிதத்தை அதிகரிப்பது குறித்த பணிகளிலும் ஈடுபடவுள்ளார்கள். மேலும், முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளில் பெண்களுக்கு இக்குழு பயிற்சியளிக்கும். பெண்கள் மேம்பாட்டுக்காக அரசு சாரா அமைப்புகளுடன் சேர்ந்து இக்குழுக்கள் செயல்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.