ADVERTISEMENT

புதிய தமிழகம் கட்சியை வேட்டையாடத் தொடங்கிய திமுக!

Published On:

| By Balaji

அதிமுக அணியில் இணைந்து ஒரு சீட் பெற்றிருக்கும் டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் இன்று (மார்ச் 9) திமுகவில் இணைந்தார்.

சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான முதல் கட்ட நேர்காணலை இன்று மதியம் ஒரு மணிக்கு முடித்த திமுக தலைவர் ஸ்டாலின் சாப்பிடக் கிளம்பினார். அப்போது நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் சிவ பத்மநாதன் தனது நெல்லை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகளை அழைத்துக் கொண்டு வந்தார்.

ADVERTISEMENT

புதிய தமிழகம் கட்சியின் நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமார், துணைச் செயலாளர் குற்றாலம், இளைஞரணி துணைச் செயலாளர் மங்கள் ராஜ் மற்றும் நெல்லை மாவட்ட புதிய தமிழகம் கட்சியின் பல்வேறு ஒன்றியங்களில் இருந்தும் முன்னாள் நிர்வாகிகள் உட்பட பலர் திமுகவில் இணைந்தனர்.

ஏன் புதிய தமிழகம் கட்சியில் இருந்து விலகினீர்கள் என்று நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெயக்குமாரிடம் மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகை சார்பாகக் கேட்டோம்.

ADVERTISEMENT

“நான் புதிய தமிழகம் கட்சியில் சுமார் 25 ஆண்டுகளாக உழைத்து வந்திருக்கிறேன். இங்கே என்னோடு திமுகவில் இணைந்திருக்கிற பலரும் பல ஆண்டுகளாக புதிய தமிழகம் கட்சியில் உழைத்தவர்கள். அங்கே உழைப்புக்கு மரியாதையோ அங்கீகாரமோ இல்லை. முரண்பட்ட கூட்டணியை வைத்துக் கொண்டு அந்த முடிவை எங்களின் மீதும் சமுதாய மக்கள் மீதும் திணிக்கப் பார்க்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி. கட்சியில் ஜனநாயகம் இல்லை. இரண்டாம் கட்டத் தலைவர்களாக யாரும் உருவாகாத வண்ணம் பார்த்துக் கொள்கிறார்.

என்னைப் போன்று இன்னும் நிறைய மாவட்டச் செயலாளர்கள் டாக்டர் கிருஷ்ணசாமி மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இன்று கூட ரயில் கிடைக்காத காரணத்தால் மேலும் பல நிர்வாகிகள் இன்று வர முடியவில்லை. விரைவில் அவர்களும் வருவார்கள்” என்றார் ஜெயக்குமார்.

ADVERTISEMENT

திமுக வட்டாரங்களில் இதுகுறித்து விசாரித்தபோது, “புதிய தமிழகம் கட்சி தென் மாவட்ட சட்டமன்ற இடைத்தேர்தல்களில் தனக்கு கை கொடுக்கும் என்று கருதிதான் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஒரு எம்பி தொகுதியை அளித்தது அதிமுக. ஆனால் பாஜக-அதிமுகவோடு கூட்டணி வைத்தது, எஸ்.சி. பட்டியலில் இருந்து வெளியேற வேண்டுமென்ற கிருஷ்ணசாமியின் கோரிக்கை ஆகியவற்றால் அக்கட்சியின் பல நிர்வாகிகள், அதிருப்தியில் உள்ளனர். இதை மோப்பம் பிடித்த திமுக நெல்லை மேற்கு மாசெ சிவபத்மநாதன் அதிருப்தியில் இருக்கும் புதிய தமிழகம் நிர்வாகிகளை வளைத்து திமுகவுக்குக் கொண்டுவந்துவிட்டார்.

தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் நிர்வாகிகளும் திமுகவுக்கு வரத் தயாராகிவிட்டார்கள். இதனால் அம்மாவட்டத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கும் ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் தொகுதிகளில் புதிய தமிழகத்தின் பழைய பலம் இருக்காது. இது புதிய தமிழகத்தை விட அதிமுகவுக்குதான் ஷாக் ஆக இருக்கும்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share