பி.சி.சி.ஐ. நிராகரிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

Published On:

| By Balaji

ஐ.பி.எல். தொடர் தொடர்ச்சியாக 10 வருடங்கள் நடைபெற்று ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்த வருடத்திற்கான தொடர் ரசிகர்களிடையே அதிக ஆவலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தடைவிதிக்கப்பட்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிகள் இந்த முறை விளையாடும் என்பது தான் அதற்குக் காரணம் என்றே கூறலாம். ரசிகர்கள் தோனியை மீண்டும் கேப்டனாகக் காணும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றனர். புதிதாக அணி வீரர்களைத் தேர்வு செய்ய விரைவில் ஏலம் நடைபெறவிருப்பதாகவும் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இதனிடையே அணியின் பெயரை மாற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பி.சி.சி.ஐக்கு கோரிக்கை வைத்துள்ளது. அதற்கான பதிலை பி.சி.சி.ஐ தெரிவிக்கவில்லை.

அதேபோல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அதன் உள்ளூர் மைதானமான மொஹாலியில் இருந்து மாற்றம் செய்ய கோரிக்கை வைத்துள்ளது. இது போன்ற மாற்றத்திற்கு கிங்க்ஸ் லெவன் அணி முறையிடுவது முதல் முறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணத்தை கிங்ஸ் லெவன் அணியின் நிர்வாகம் தெரிவித்தபோது **ரசிகர்களின் வரவேற்பு மொஹாலி மைதானத்தில் குறைவாக உள்ளது. ஆனால் புனே மற்றும் இந்தூர் மைதானத்தில் எங்களுக்கான ஆதரவு அதிகமாக உள்ளது** என்று தெரிவித்தனர்.

ADVERTISEMENT

சுமார் ரூ.480 கோடிக்கு கடந்த 2007ஆம் ஆண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் பெறப்பட்டது. அப்போது அதன் உள்ளூர் மைதானமாக மொஹாலி அறிவிக்கப்பட்டது. புதிய மைதானம் மாற்றம் செய்ய வேண்டும் என்பதற்காக பி.சி.சி.ஐக்கு பணம் வழங்கவும் தயாராக இருப்பதாக கிங்ஸ் லெவன் அணி கூறியதற்கு பிறகும் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தமுறை அளித்த கோரிக்கையையும் நிராகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share