`பிளே ஸ்டோர் டவுன்லோடு: இந்தியா டாப்!

Published On:

| By Balaji

கடந்த ஏழு ஆண்டுகளில் கூகுள் பிளே ஸ்டோரில் அதிகம் தரவிறக்கம் செய்த நாடாக இந்தியா உள்ளது.

கூகுள் பிளே ஸ்டோர் அறிமுகப்படுத்தப்பட்டு பத்தாண்டுகள் ஆனதையொட்டி, மொபைல் செயலிகள் ஆய்வு நிறுவனமான *ஆப் அன்னி* ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் பிளே ஸ்டோரில் அதிக முறை தரவிறக்கம் செய்த நாடுகள், அதிகமாகத் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள், அதிகப் பணம் செலுத்தி தரவிறக்கம் செய்யப்பட்ட செயலிகள் உள்ளிட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 330 பில்லியன் முறை கூகுள் பிளே ஸ்டோரில் செயலிகள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஜனவரி 2012 முதல் ஆகஸ்ட் 2018 வரையில் 36.9 பில்லியன் முறை இந்தியர்கள் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துள்ளனர். உலகின் ஒட்டுமொத்த தரவிறக்கத்தில் இந்தியாவின் பங்கு 11.2 விழுக்காடாக உள்ளது. இரண்டாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் 35.1 பில்லியன் தரவிறக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

25.2 பில்லியன் தரவிறக்கங்களுடன் பிரேசில் மூன்றாவது இடத்திலும், 15.9 பில்லியன் தரவிறக்கங்களுடன் ரஷ்யா நான்காவது இடத்திலும், 14.6 பில்லியன் தரவிறக்கங்களுடன் இந்தோனேசியா ஐந்தாவது இடத்திலும், 12.7 பில்லியன் தரவிறக்கங்களுடன் மெக்சிகோ ஆறாவது இடத்திலும், 12.5 பில்லியன் தரவிறக்கங்களுடன் தென்கொரியா ஏழாவது இடத்திலும், 10.5 பில்லியன் தரவிறக்கங்களுடன் துருக்கி எட்டாவது இடத்திலும், 8.1 பில்லியன் தரவிறக்கங்களுடன் தாய்லாந்து ஒன்பதாவது இடத்திலும், 7.1 பில்லியன் தரவிறக்கங்களுடன் ஜெர்மனி பத்தாவது இடத்திலும் உள்ளன.

அதேநேரத்தில் இந்தியர்கள் பெரும்பாலும் இலவச செயலிகளை மட்டுமே தரவிறக்கம் செய்கின்றனர். அதனால் பணம் செலுத்தி செயலிகளைத் தரவிறக்கம் செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் பத்து இடங்களில் இல்லை. அதிகபட்சமாக 25.1 பில்லியன் டாலர் தொகையைச் செயலிகள் தரவிறக்கத்துக்காகப் பயன்படுத்தி ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 19.3 பில்லியன் டாலர்களையும், தென்கொரியா 11.2 பில்லியன் டாலர்களையும், ஜெர்மனி 3.1 பில்லியன் டாலர்களையும், தைவான் 2.7 பில்லியன் டாலர்களையும் செயலிகள் தரவிறக்கத்துக்காகச் செலவிட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் குறைவான ஸ்டோரேஜ் வசதிகள் கொண்டவையாக உள்ளன. தோராயமாக 62 செயலிகளை மட்டுமே இந்திய மொபைல்களில் தரவிறக்கம் செய்ய இயலும். மாதம் ஒன்றுக்கு 35 செயலிகள் வரையில் இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியர்கள் முதலிடத்தில் உள்ளனர். அவர்களின் மொபைல்போன்களில் தோராயமாக 103 செயலிகள் வரை தரவிறக்கம் செய்யலாம். ஒவ்வொரு மாதமும் 39 செயலிகள் வரையில் அவர்கள் பயன்படுத்துகின்றனர். அமெரிக்கர்கள் 37 செயலிகள் வரையில் ஒவ்வொரு மாதமும் பயன்படுத்துகின்றனர்.

எல்லாக் காலகட்டத்திலும் உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டு செயலிகளாக சப்வே சஃபர்ஸ், கேண்டி கிரஷ் சாகா, மை டாக்கிங் டாம், டெம்பிள் ரன் 2, ஃப்ரூட் நிஞ்சா உள்ளிட்ட செயலிகள் இருந்துள்ளன. உலக அளவில் அதிகம் தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக ஃபேஸ்புக் உள்ளது. இரண்டாவது இடத்தில் வாட்ஸ் அப்பும், மூன்றாவது இடத்தில் ஃபேஸ்புக் மெசெஞ்சரும், நான்காவது இடத்தில் இன்ஸ்டகிராமும், ஐந்தாவது இடத்தில் கிளீன் மாஸ்டரும், ஆறாவது இடத்தில் யூ.சி.பிரவுசரும், ஏழாவது இடத்தில் ஸ்கைப்பும், எட்டாவது இடத்தில் ஸ்னேப்சாட்டும், ஒன்பதாவது இடத்தில் ஷேர் இட்டும், பத்தாவது இடத்திலும் லைன் செயலியும் உள்ளன.

அதிகளவில் பணம் செலுத்தி தரவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக லைன் உள்ளது. டிண்டெர், மியூசிக், லைன் மங்கா, நெட்ஃப்ளிக்ஸ், கக்கோடாக், லைன் பிளே மற்றும் ஹெச்.பி.ஓ நவ் ஆகிய செயலிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share