ADVERTISEMENT

பாஜகவில் போட்டியிட சேவாக் மறுப்பு!

Published On:

| By Balaji

முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் பாஜகவில் போட்டியிட மறுத்துவிட்டதாக, பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் துவக்க ஆட்டக்காரராகவும், அதிரடி பேட்ஸ்மேனாகவும் வலம் வந்தவர் சேவாக். இவரது அதிரடி ஆட்டத்துக்கு இந்தியாவைத் தாண்டி வெளிநாடுகளிலும் தனி ரசிகர் பட்டாளம் இருந்தது. முன்னாள் கிரிக்கெட் வீரரான இவரை பாஜக சார்பில் வேட்பாளராக நியமிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகக் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே செய்திகள் வெளியானது. குறிப்பாக, பிப்ரவரி 3ஆம் தேதி ஹரியானாவில் நடந்த பாஜக பொறுப்பாளர்கள் கூட்டத்தில் ஹரியானாவின் ரோஹ்தர் தொகுதியில் 3 முறை வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தீபெந்தர் சிங் ஹூடாவைத் தோற்கடிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர ஷேவாக்கை போட்டியிட வைக்க ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

ADVERTISEMENT

ஆனால் சேவாக் அப்போதே ட்விட்டரில், “சில விஷயங்கள் எப்போதும் மாறாது, இந்த வதந்திகள் போல. 2014இல் பரவிய வதந்திகளைப் போலவே இப்போதும் பரவுகிறது. இதில் புதுமை இல்லை. அப்போதும் ஆர்வம் இல்லை. இப்போதும் ஆர்வம் இல்லை” என்று கூறியிருந்தார். ஆனாலும் அதன்பிறகும் சேவாக்கை பாஜகவில் போட்டியிட வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தது. மேற்கு டெல்லியில் அவரை நிறுத்த பேச்சுவார்த்தைகள் நடப்பதாக செய்திகள் வந்தன. மேற்கு டெல்லியில் கடந்த முறை பாஜகவைச் சேந்த பர்வேஷ் ஷர்மா வெற்றி பெற்றிருந்தார்.

பாஜகவில் அடிப்படை உறுப்பினராகக் கூட இல்லாத சேவாக்கை, கிரிக்கெட் பிரபலம் என்ற அடையாளத்தைப் பயன்படுத்தி எளிதில் வெற்றி பெறச் செய்து விடலாம் என பாஜக நிர்வாகிகள் தரப்பில் கணக்கு போடப்பட்டது. ஆனால் சேவாக் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாக பாஜக வட்டாரத்திலிருந்தே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஒருவர் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ”பாஜக சார்பில் போட்டியிட சேவாக் மறுத்துவிட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காக தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அரசியலில் ஈடுபடுவதிலோ அல்லது தேர்தலில் போட்டியிடுவதிலோ அவருக்கு ஆர்வம் இல்லை” என்றார்.

ADVERTISEMENT

அதேபோல மற்றொரு வீரர் கவுதம் காம்பீரும் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வந்த நிலையில், “அதற்கு எந்தக் குறிப்பும் இல்லை. அவை வெறும் வதந்தி” என்று அவரும் மறுத்துவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share