இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் வரும் 23ஆம் தேதி தொடங்கவுள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையேயான பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது. ஹார்திக் பாண்டியா தலைமையில் இந்திய ஏ அணி களமிறங்கியது. நேற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் விரைவாக விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஷான் மார்ஸ் மற்றும் கேப்டன் ஸ்மித் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். நேற்று ஆட்டம் முடிவில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களை கடந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று மீண்டும் விளையாடத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 400 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பெற்றனர். அதன் பின்னர் உணவு இடைவேளை அளிக்கப்பட்ட நேரத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 469 ரன்களை சேர்த்து டிக்ளர் செய்தது. அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் நிதானமாக விளையாடினர். இருப்பினும் அகில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அதன் பின்னர் இந்திய அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் விழத் தொடங்கின. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை சேர்த்துள்ளது.

அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 50 ரன்களை அடித்தார். நாளை ஒரு நாள் மட்டுமே மீதமுள்ள நிலையில் இந்திய அணி நிலைத்து நின்று போட்டியை சமன் செய்யுமா என்பது சந்தேகமாக உள்ளது.
