பன்னீர் அணியினர் பகல்கனவு காணுவதை விடுத்து இரவில் ஓய்வெடுக்க வேண்டுமென, எடப்பாடி அணி எம்.எல்.ஏ. குணசேகரன் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் முதல்வர் வீட்டில் நடைபெற்ற ஆலோசனையில் அதிமுகவிலிருந்து தினகரன் மற்றும் குடும்பத்தினர் ஒதுக்கபடுவதாகவும், இரு அணிகளும் இணைய வேண்டி பேச்சுவார்த்தை நடத்தக் குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர்கள் அறிவித்தனர்.இரு அணிகள் சார்பிலும் பேச்சுவார்த்தைக்கு குழுக்களும் அமைக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை எவ்வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மாறாக இரு அணிகளும் முரண்பட்டக் கருத்துக்களையே தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செல்வதகாக் கூறி பன்னீர் அணியினர் மே 5ஆம் தேதி காஞ்சிபுரத்தில் பயணத்தைத் தொடங்கினர். மேலும் சமீபத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் பேசிய முதல்வர் பழனிச்சாமி’ பன்னீர் அணியினர் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால் பராவாயில்லை’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில், மே 6ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன்,’ பன்னீர் அணியினர் பகல் கனவு காணாமல் இரவில் ஓய்வு எடுக்க வேண்டும். பன்னீர்செல்வம் உடனிருப்பவர்கள் பேச்சைக் கேட்டு செயல்படுகிறார். அவர்களுடைய பேச்சைக் கேட்காமல் ,உடனடியாக பன்னீர் பேச்சவார்த்தையில் ஈடுபடவேண்டும். மேலும் இரு அணியினரும் இணைந்து பொதுக்குழு கூட்டினால்தான் சசிகலா பதவி குறித்து நடவடிக்கை எடுக்க முடியும். எனவே இரு அணிகளும் இணைய வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இவர்தான் கடந்த மாதம் அரசு அதிகாரிகளைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.�,