இமயமலையில் எட்டி எனும் பனிமனிதனின் காலடித்தடத்தைக் கண்டதாக இந்திய ராணுவம் ட்விட்டரில் வெளியிட்ட தகவல் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இமயமலையில் எட்டி எனும் பனிமனிதன் வாழ்ந்து வருவதாக, நேபாளத்திலுள்ள நாட்டுப்புறக் கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போதும் இமயமலைப் பிரதேசத்தில் வாழும் மக்களிடையே இந்த நம்பிக்கை இருந்து வருகிறது. ஆனால், அறிவியல்பூர்வமான ஆதாரங்கள் இல்லாததால் விஞ்ஞானிகள் இதனை ஏற்க மறுத்து வருகின்றனர். இமயமலைச் சிகரங்களை எட்டும் பயணத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் தாங்கள் பனிமனிதனைக் கண்டதாகக் கூறியுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் ஆதாரப்பூர்வமான தகவல்களாக இல்லாததால் புறக்கணிப்புக்கு உள்ளாகின.
இந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 29) இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் எட்டி எனும் பனிமனிதனின் காலடித்தடத்தைக் கண்டறிந்ததாகத் தகவல் வெளியானது. மாகலு – பரூண் எல்லையில் பனிமனிதனின் காலடித்தடம் கண்டதாகவும், அது 32×15 இஞ்ச் அளவு கொண்டதாகவும், ஏப்ரல் 9ஆம் தேதியன்று தங்கள் குழு அதனைக் கண்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்திய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது பற்றி ராணுவத்திடம் ஊடகத்தினர் கேள்விகள் எழுப்பினர். இதற்குப் பதிலளித்த ராணுவத் தரப்பு, சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்கள், புகைப்படங்கள், வீடியோக்களை வைத்தே இந்த தகவல் வெளியிடப்பட்டதாகத் தெரிவித்தது.
“அறிவியல்பூர்வமான விளக்கத்தில் கவனத்தைச் செலுத்தவும், அது பற்றிய ஆர்வத்தைத் தூண்டவும் மட்டுமே அந்த தகவல் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் சிலரிடம் கண்டிப்பாக அதற்கான ஆதாரங்கள் இருக்கும். அவர்கள் சொல்வது போலவே இயற்கை, வரலாறு, அறிவியல் எதிலும் முடிவு இதுதான் என்பதை வரையறுக்க முடியாது” என்று ராணுவத் தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

“எட்டி என்பது புராணம் சார்ந்தது. அதனை அறிவியல்பூர்வமாக இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார் சூழலியலாளரும் ஹெச்என்பி கார்ஹ்வால் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான டாக்டர் எஸ்.பி.சிங்.
எட்டி எனும் பனிமனிதன் இருப்பதற்கான சான்றுகளாக இதுவரை இமயமலைப் பகுதியில் கிடைத்த எலும்புகள், பல், தோல், முடி என்று அனைத்துமே ஆசியாவைச் சேர்ந்த கறுப்பு நிற கரடிகள், இமயமலை மற்றும் திபெத் சார்ந்த மாநிறக் கரடிகள் மற்றும் ஒரு நாயிடமிருந்து கிடைத்தவை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ராணுவத்தின் ட்வீட்டுக்கு பலரும் எதிர்வினை ஆற்றி வருகின்றனர். ஏன் ஒரு காலின் தடம் மட்டுமே உள்ளது என்றும், கிரேட் காளி இமயமலைக்கு வந்துவிட்டாரா என்றும், வரப்போகும் பனிக்கால பேஷன் ஷோவுக்காக இப்போதே எட்டி கேட்வாக் செய்ய ஆரம்பித்துவிட்டாரா என்றும் ட்விட்டரில் பலர் கிண்டலாக விமர்சித்துள்ளனர். ராணுவம் போன்ற ஒரு அரசு அமைப்பு இப்படியொரு தகவலை வெளியிடும் முன்பாக கவனத்துடன் இருக்க வேண்டுமென்றும், அந்த காலடித்தடம் ஒரு குரங்கினுடையதாகவோ அல்லது கரடியினுடையதாகவோ கூட இருக்கலாம் என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
