கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரப்பகுதியில் நேற்று முன்தினம் (ஜூன் 23) இரவு தொழிலதிபரை வழிமறித்துக் கடத்தியுள்ள சம்பவம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் லிங்க் ரோடு காமராஜர் நகரில் விஜயரங்கன் என்ற காங்கிரஸ் பிரமுகர் வசித்து வருகிறார். இவர் பண்ருட்டி நகர மன்ற முன்னாள் துணைத் தலைவராகப் பதவி வகித்தவர். பண்ருட்டி காவல் நிலையம் எதிரில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு கடையை மூடிவிட்டு டூவீலரில் வீட்டுக்குத் திரும்பியபோது விஜயரங்கனை வழிமறித்துத் தாக்கி ஒரு மர்மக்கும்பல் கடத்தியுள்ளது. இந்தத் தகவல் போலீஸாருக்குத் தெரிந்தவுடன் எஸ்பி விஜயகுமார் தலைமையில் விசாரணை தொடங்கியது. இரவே எஸ்பி விஜயகுமார் சம்பவம் நடைபெற்ற இடத்துக்குச் சென்று கடையையும் பார்வையிட்டு டி.எஸ்.பி.சுந்தரவடிவேல், இன்ஸ்பெக்டர் ஆரோக்யராஜ் ஆகியோர் கொண்ட குழுவுடன் பல கோணங்களில் விசாரணை நடத்தினார்.
நாமும் தொழிலதிபர் விஜயரங்கனைக் கடத்தியது பற்றி விசாரித்தோம், யாரிடமும் மோதலை உருவாக்கிக் கொள்ள மாட்டார், மற்றவர்களிடம் பிரச்சினைகளுக்குப் போகாதவர். இரவுக் கடையை மூடிவிட்டு 9.05 மணிக்கு ஹோண்டா டூவீலரில் வீட்டுக்குப் போகும் வழியில் வெள்ளை கலர் சபாரி கார் ஒன்றிலும், டூவீலர் ஒன்றிலும் வந்த சில மர்ம நபர்கள் அவரை நோட்டம் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது விஜயரங்கன் டூவீலரில் நெருங்கும்போது காத்திருந்த கடத்தல் கும்பல் வழிமறித்து மரக்கட்டையால் அடித்துள்ளனர். அவர் மயங்கி விழுந்ததும் அவரைக் காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு அவர் வந்த டூவீலரையும் எடுத்துக்கொண்டு தப்பித்துவிட்டார்கள்.விஜயரங்கனை கடத்தி சென்ற காரை மாற்றிவிட்டு வேறொரு காரில் அவர்கள் தப்பித்துள்ளனர். அவர்கள் மாவட்டத்துக்குள்ளே பதுங்கியிருக்கலாம். இதில் அரசியல் தொடர்புடைய நபர் பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக போலீஸார் கூறியுள்ளனர்.
கடத்தல் கும்பலை பிடிப்பதைவிடக் கடத்தல் கும்பலுக்குப் பின்னணியில் இருப்பவர்களைப் பிடித்தால், ஆறு வருடத்துக்கு முன்பு பண்ருட்டியில் செட்டியாரைக் கொலை செய்துவிட்டு சுமார் நூறு கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்தவர்களையும் பிடித்துவிடலாம் என்று அந்தப் பகுதியிலுள்ள வர்த்தகச் சங்கப் பிரமுகர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் திடீர் திருப்பமாக, கடத்தப்பட்ட விஜயரங்கன் போலீஸாரிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் தன்னைக் கடத்தியவர்கள் ஒரு சிறு பாலத்திற்கு அருகில் வைத்து அடித்து போட்டுவிட்டுப் போய்விட்டதாகவும் தன்னிடம் பணம் எதுவும் கேட்கவில்லை என்று கூறியுள்ளார். தற்போது விஜயரங்கன் தனது வீட்டுக்குத் திரும்பி வந்து விட்டார். அவரது தலையில் காயம் உள்ளது. போலீஸார் விஜயரங்கன் கூறியதை நம்பவில்லை. அவரைத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.,