பணப்பட்டுவாடா குறித்து புகார் அளிக்க தொலைபேசி, வாட்ஸ் ஆப் எண்களைத் தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பறக்கும் படைகள், போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 14) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ, “தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது வரை தமிழகத்தில், 3 கோடியே 39 லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், உள்ளிட்ட பல இடங்களில் பணப்புழக்கம் தொடர்பாகத் தீவிரமாகக் கண்காணிக்க வருமான வரித்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.
இதுதவிர, பணப்பட்டுவாடா குறித்து 1800 425 6669 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். Itcontrol.chn@gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், இதேபோல் 94454 67707 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாகவும் தங்களது புகாரைப் பதிவு செய்யலாம் என சத்ய பிரதா சாஹூ குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “ தனிநபர் ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் வரை ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லலாம். அதற்கும் அதிகமாகப் பணம் எடுத்துச் செல்லும்போது உரிய ஆவணங்கள் தேவை. இல்லையென்றால் பணம் பறிமுதல் செய்யப்படும் என்றார். 10 லட்சத்துக்கும் மேல் உரிய ஆவணங்களுடன் பணம் எடுத்துச் சென்றால், அந்த பணம் பறிமுதல் செய்யப்படாது. எனினும் அதுகுறித்து வருமான வரித்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்படும் என்றார். பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் சோதனைகள் நடைபெறும் என்றும் குறிப்பிட்டார்.
