CBFC-யின் பஹலஜ் நிஹலனி தலைமையில் இயங்கிய சென்சார் குழு அபிஷேக் சௌபே இயக்கத்தில் அனுராக் கஷ்யப், ஏக்தா கபூர், ஷோபா கபூர் விக்ரமாதித்யா மோத்வானி, விகாஸ் பஹ்ல், சமீர் நாயர் ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள உட்தா பஞ்சாப் திரைப்படத்தின் டைட்டிலிலிருக்கும் ‘பஞ்சாப்’ என்ற வார்த்தையை நீக்கவேண்டும் என்று கூறியிருக்கின்றனர். இது என்ன பஞ்சாபுக்கு வந்த சோதனை? என்று பார்த்தால், இந்தப் படத்துக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை இப்படியாகச் செல்கிறது.
முதலில் படத்தைப் பார்க்கும் சென்சார் குழு, சில காட்சிகளையும் சில வசனங்களையும் நீக்கிவிட்டு படத்தை ரிலீஸ் செய்துகொள்ளச் சொல்கிறார்கள். இந்திய சினிமாவை உலக சினிமாவரை கொண்டுசென்று வியாபாரம் செய்யும் அனுராக் கஷ்யப் சும்மா இருப்பாரா? ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தை முறையிட்டு, அந்த மாற்றங்கள் வேண்டாம் என்ற ஒப்புதல்களைப் பெறுகிறார். சொன்னதைச் செய்யாமல், தங்களது ஆர்டரை மாற்றும் அனுராக் கஷ்யப்பை விடுவார்களா சென்ஸார் அதிகாரிகள்? இரண்டாம்முறை படம் பார்த்துவிட்டு, ‘இந்தப் படத்தை பஞ்சாபில் ரிலீஸ் செய்யவே கூடாது. பஞ்சாப் மக்களை போதைக்கு அடிமையானவர்களைப்போல் சித்தரித்திருக்கிறார்கள். வேண்டுமென்றால் கதையை பஞ்சாபில் நடைபெறுவதுபோல் இல்லாமல் மாற்றி, பஞ்சாப் என்ற வார்த்தையை படத்தில் பயன்படுத்தாமல், டைட்டிலிலிருந்தும் பஞ்சாப் என்ற சொல்லை நீக்கிவிட்டு ரிலீஸ் செய்துகொள்ளச் சொல்லிவிட்டார்கள். காட்சி, வசனத்தை நீக்குவதற்கே அமைச்சகம் வரை சென்ற கஷ்யப் கடுப்பாகிவிட்டார்.
பஞ்சாபில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகிக்கிடப்பது காலம்காலமாக நடக்கிற ஒன்று. கடந்த அரசாங்கமும் அதை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், அந்த சம்பவத்தைப்பற்றி படம் எடுத்தால் மட்டும் ‘டைட்டிலை மாற்று. ஊர்ப்பெயரை மாற்று’ எனச் சொல்கிறார்கள். பஞ்சாப் இந்தியாவில்தான் இருக்கிறது. பஞ்சாபில்தான் போதைப்பழக்கம் அதிகம் இருக்கிறது. உண்மையைத்தான் படமாக்கியிருக்கிறோம். வேண்டுமென்றால் பஞ்சாப் இந்தியாவில் இல்லை என்று சொல்லிவிடுங்கள், நாங்கள் படத்தின் டைட்டிலை மாற்றிவிடுகிறோம் என்று போர்க்குரல் கொடுத்திருக்கிறார் அனுராக் கஷ்யப்.
அனுராக் கஷ்யப்பின் நண்பரும், பல படங்களை இணைந்து தயாரித்தவருமான கரன் ஜோஹார் உட்தா பஞ்சாப் படத்துக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார். ‘போதைப்பழக்கத்துக்கு எதிராக உட்தா பஞ்சாப்பைவிட சிறந்த படம் இருக்க முடியாது. போதைப்பழக்கத்தை புரமோஷன் செய்வதற்கு சமம், உட்தா பஞ்சாப் திரைப்படத்தை எதிர்ப்பது’ என்று, தனது கருத்தை உரக்கவே பதிவு செய்திருக்கிறார். பாலிவுட்டின் புகழ்பெற்ற நடிகர் ராசா முராட், ‘இது என்ன ஜனநாயக நாடா அல்லது சர்வாதிகார நாடா?’ என்று அதிர்ச்சியடைந்து கேட்டிருக்கிறார்.
2017ம் ஆண்டு பஞ்சாபில் நடைபெறும் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு மத்திய அரசுடன் இணைந்து பஞ்சாபின் ஆளும்கட்சி செய்யும் அரசியல் இது. எப்படியாவது இந்தப் படத்தை சில மாற்றங்களுடன் ரிலீஸ் செய்யவைத்து போதைப் பழக்கமுடையவர்களின் ஓட்டுகளையும் சேர்த்து வாங்கிவிடலாம் என கணக்குப் போட்டு, காய் நகர்த்தி வருகின்றனர். இதுதான் சமயம் என்று ‘உட்தா பஞ்சாப் திரைப்படத்துக்கு எங்கள் ஆதரவு கண்டிப்பாக…’ என ஆரம்பித்த காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாயை ‘நீங்கள் சும்மா இருந்தாலே போதும். நீதிமன்றம், மக்கள் மன்றத்தின் உதவியுடன் நாங்கள் படத்தை ரிலீஸ் செய்துகொள்கிறோம்’ என அறிவித்துவிட்டார் அனுராக் கஷ்யப்.
உதயநிதி ஸ்டாலினின் மனிதன் திரைப்படத்துக்கு வரிவிலக்கு கொடுக்காததற்கு ஏன் என்று கேட்டபோது ‘மனிதன் என்பது தமிழ்ச்சொல்லே அல்ல’ என்று சென்ஸார் குழு ஒரு அணுகுண்டைத் தூக்கிப்போட்டார்களே, அதுபோலவே பஞ்சாப்பிலும் தற்போது ஒரு பிரச்னை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. பாலிவுட்டாவது லைட் இல்லாமல் செல்கிறது. கோலிவுட் சைக்கிளே இல்லாமல் சென்றுகொண்டிருக்கிறது.
