பசுக்களுக்கு முன்னுரிமை: ராஜஸ்தான் வாலிபர் மரணம்!

Published On:

| By Balaji

ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் பசு பாதுகாவலர்களால் தாக்கப்பட்ட வாலிபர் மரணமடைந்த விவகாரத்தில், போலீசார் அவரை மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகப் புகார் எழுந்துள்ளது. இடைப்பட்ட நேரத்தில், அவரிடம் இருந்து மீட்கப்பட்ட இரு பசுக்களுக்குப் போலீசார் பாதுகாப்பு அளித்தது தெரிய வந்துள்ளது.

கடந்த 20ஆம் தேதியன்று, ஹரியானா மாநிலத்தில் இருந்து ராஜஸ்தானிலுள்ள மேவாட் மாவட்டத்துக்குத் தன் நண்பர் அஸ்லாமுடன் சென்றார் ரக்பர் கான். இரண்டு பசுக்களையும், அவர்கள் தங்களுடன் கொண்டு சென்றனர். அல்வார் என்ற இடத்தைக் கடக்கும்போது, அவர்களைச் சில நபர்கள் தாக்கினர். பசுக்களை அவர்கள் கடத்திச் செல்வதாக நினைத்து, இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதுபற்றி டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

தாக்குதல் நடந்தபோது, அஸ்லாம் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சுமார் 12.15 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்துள்ளது. அங்கிருந்தவர்கள் ரக்பர் கானைத் தாக்கிய விவரம், அந்தப் பகுதியைச் சேர்ந்த விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த நாவல் கிஷோர் சர்மா என்பவருக்குச் சொல்லப்பட்டது. அவர், இதனை ராம்கர் காவல் துறையினருக்குத் தெரிவித்துள்ளார்.

ராம்கர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் ரக்பர்கானைத் தேடுவதில் சிரமம் ஏற்பட்டதால், சம்பவம் நடந்த இடத்துக்குச் செல்ல அவர்களுக்கு நாவல் கிஷோர் வழிகாட்டியுள்ளார். சுமார் 1.30 மணியளவில் போலீசார் ரக்பர்கானைப் பார்த்துள்ளனர். அப்போது, அவர் மிக மோசமான நிலையில் காயமடைந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள ராம்கர் சமுதாய சுகாதார மையம் உள்ளது. அங்கிருந்து 5 நிமிடங்களில் கிளம்பிய போலீசார், அதிகாலை 4 மணியளவில் ரக்பர்கானை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அப்போது, அவர் மரணமடைந்ததாகத் தெரிவித்துள்ளனர் அங்கிருந்த மருத்துவர்கள்.

ADVERTISEMENT

இடைப்பட்ட நேரத்தில் சில போலீசாரின் உதவியோடு, மீட்கப்பட்ட பசுக்களை கோசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார் நாவல் கிஷோர். அவர் திரும்பிவந்தபோது, ரக்பர் கான் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர் ராம்கர் போலீசார். அதோடு, ரக்பர் கானைத் தாக்கியதாக தர்மேந்திர யாதவ் மற்றும் பரம்ஜித் சிங் என்ற இருவரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

இதுபற்றிப் பேசிய நாவல் கிஷோர், ராம்கர் காவல் நிலைய அதிகாரிகள் ரக்பர்கானை அழைத்துக்கொண்டு இரவு 1.30 மணிக்கே கிளம்பியதாகத் தெரிவித்துள்ளார். அவர்கள் மூன்று மணி நேரம் தாமதமாக, அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியமென்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். “பசு பாதுகாவலர்களால் ரக்பர் கான் கடுமையாகத் தாக்கப்படவில்லை. தாக்கப்பட்ட பின்பும், அவர் பேசும் நிலையில் இருந்தார். காலில் வலி இருந்ததால், போலீஸ் ஜீப்பில் ஏற முடியவில்லை என்று அவர் தெரிவித்தார். சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்ட தர்மேந்திர யாதவ் தான், அவருக்குச் சட்டை கொண்டுவந்து கொடுத்தார்” என்று தெரிவித்துள்ளார் நாவல் கிஷோர்.

ADVERTISEMENT

பசு பாதுகாவலர்களால் ரக்பர் கான் இறந்ததாகத் தகவல் வெளியானதால், கடந்த இரண்டு நாட்களாக வடமாநிலங்களில் அசாதாரணமான சூழல் நிலவுகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும், பலியான ரக்பர் கான் குடும்பத்தினருக்குச் சுமார் 8 லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், போலீஸ் பாதுகாப்பின்போதே ரக்பர் கான் இறந்ததாக ஊடகங்களில் தகவல் வெளியானது ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share