புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதியில் இருந்து மக்கள் போராட்டம் தொடங்கி இன்றும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்… நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சுற்று வட்டாரத்தின் மண்ணும் கடுமையாக பாதிக்கப்படும், மக்களும் பல்வேறு சுகாதாரப் பிரச்னைகளால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் என்று கடந்த மார்ச் 10 ஆம் தேதி ராஜ்யசபாவில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பிரச்னை எழுப்பி அரசிடம் சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.
அதற்கு கடந்த 18 ஆம் தேதி மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் தர்மேந்திர பிரதான்… திருச்சி சிவாவுக்கு ஒரு கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார்.
அதில்..
‘’நம் நாட்டுக்கு எரிசக்தி தேவை அதிக அளவில் உள்ளது. அதற்கான பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நமது அரசின் எண்ணெய், எரிவாயு நிறுவனங்களால் நெடுவாசல் பகுதியில் எரிசக்தி வளம் இருப்பது நீண்ட நாட்களுக்கு முன்பே கண்டறியப்பட்டது. ஆனால், அது பல காரணங்களால் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இந்தத் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பையும் மத்திய அரசு அழைப்பு விடுத்து அதற்கான பணிகளில் இறங்கியது. அந்த வகையில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பது நமது எரிசக்தி தேவையை பூர்த்தி செய்வதற்கு மட்டுமல்ல… வேலை வாய்ப்பையும், மாநில அரசுக்கான வருவாயையும் இந்த திட்டம் அதிகரிக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சரின் இந்த பதிலை அறிந்து நெடுவாசல் மக்கள் மேலும் கோபம் அடைந்துள்ளனர்.
