பணப்பரிவர்த்தனை மோசடியில் ஈடுபட்டு பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.10,300 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடிக்குப் போலி நிறுவனங்களுடன் தொடர்பு இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியும், கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் தலைவர் மெஹுல் சோக்சியின் மருமகனுமான நீரவ் மோடி வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாகப் பரிவர்த்தனை செய்து நாட்டின் இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.10,300 கோடி வரை இழப்பு ஏற்படுத்தியுள்ளதாக அந்த வங்கி மும்பைப் பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கை மூலம் தெரியவருகிறது. இதையடுத்து அவர் மீதும், மேஹுல் சோக்சி மீதும், நீரவ் மோடியின் மனைவி மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், நீரவ் மோடிக்கு 150 போலி நிறுவனங்களுடன் தொடர்பிருந்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மூத்த அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “நாட்டின் மிகப்பெரிய வங்கி மோசடியில் ஈடுபட்ட நீரவ் மோடிக்கு 150 போலி நிறுவனங்களுடன் தொடர்பு இருந்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் மத்திய பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன” என்றார்.
பொதுவாகவே போலி நிறுவனங்கள் சட்டவிரோதமான பணத்தைப் பயன்படுத்தியே நிறுவனங்களை இயக்கி வருகின்றன. பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனம் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபியால் கண்காணிப்பு வளையத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
