நிபந்தனைகளின் அடிப்படையில் தமிழக மீனவர்களின் படகுகளை படிப்படியாக விடுவிப்போம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே சில நாட்களுக்கு முன்பு டெல்லி வந்தார். அப்போது பிரதமர் மோடி, வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் ஆகியோரை சந்தித்து பேசினார். அப்போது இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இலங்கையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 143 படகுகளையும் விடுவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் பிரதமரும், வெளியுறவுத்துறை மந்திரியும் வலியுறுத்தினர்.
இலங்கையில் நடைபெறவுள்ள புத்த மதம் தொடர்பான விழா ஒன்றுக்கு இந்தியப் பிரதமர் மோடி இலங்கை செல்லவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக இலங்கையில் வரும் மே மாதம் 12ஆம் தேதியில் இருந்து 14ஆம் தேதிவரை புத்த மதம் தொடர்பான சர்வதேச விழா இரண்டு நாள்கள் இலங்கையில் நடைபெற உள்ளது.
இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விடுத்த அழைப்பை ஏற்று இந்தியாவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விழாவில் கலந்து கொள்ளவிருக்கிறார். அப்போது இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் கைதிகளாக இருக்கும் 48 தமிழக மீனவர்களை விடுவிப்பது மற்றும் இலங்கை அரசால் சிறை பிடிக்கப்பட்ட 122 படகுகளை மீட்பது உள்பட பல்வேறு பிரச்னைகள் குறித்த பேச்சுவார்த்தையை இலங்கை அரசுடன் மோடி நடத்துவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இது குறித்து நாம் மின்னம்பலம் இன்றைய காலை செய்தியில் [எழுதியிருந்தோம்](https://minnambalam.com/k/2017/04/30/1493490630)
இந்நிலையில், இலங்கை மீன்துறை அமைச்சர் மகிந்த அமரவீரா இன்று (30.4.2017) ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “தமிழகத்தில் இருந்து சிறைப்பிடிக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்க வேண்டுமானால் மீனவர்கள் இனி எல்லை தாண்டி வரமாட்டோம் என்று உறுதி அளிக்க வேண்டும். மேலும் சேதமான படகுகளை அவரவர்களே சரி செய்துகொள்ள வேண்டும். இந்த நிபந்தனைகளின் அடிப்படையில் பகுதி, பகுதியாக தமிழக மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும். முதலில் 20 படகுகளை விடுவிக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்புக்கு தமிழக மீனவர் சங்கத் தலைவர்கள் என்.ஜே.போஸ், எமரிட், தேவதாஸ் ஆகியோர் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர். ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு 143 படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
