நான் தோற்றால்? – முதல்வரின் எதிர்மறை பிரச்சாரம்!

Published On:

| By Balaji

தனது கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தால் மக்களுக்குத்தான் இழப்பு என்று தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

தெலங்கானா சட்டப்பேரவைக்கான தேர்தல் டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஆளும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கு எதிராக தெலுங்கு தேசம், காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை அமைத்துள்ளது. தேர்தலில் வெற்றிபெற்றால் 2 லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடன்கள் மற்றும் குத்தகை விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி.

ADVERTISEMENT

தெலுங்கானா தனி மாநில போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த சுமார் 1200 தியாகிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை, 10 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் 3 ஏக்கர் நிலம், இலவச லேப்டாப் வழங்கப்படும் என பல்வேறு வாக்குறுதிகளைத் தேர்தல் அறிக்கையில் தெலுங்கு தேசம் அறிவித்துள்ளது. தீவிர பிரச்சாரத்திலும் தெலுங்கு தேசம் கூட்டணி ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், கானப்பூர் தொகுதியில் நேற்று பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவரும் அம்மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ், “தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றால் உங்களுக்காக சேவை செய்வோம். தேர்தலில் எங்கள் கட்சி தோற்றாலும் எனக்கு இழப்பு இல்லை. வீட்டுக்குச் சென்று நான் ஓய்வெடுப்பேன், ஆனால் உங்களுக்கு (மக்களுக்கு)தான் இழப்பு” என்று குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

1956இல் தெலங்கானாவையும் ஆந்திராவையும் ஒன்றாக இணைத்தற்காக காங்கிரஸை விமர்சித்த அவர், கடந்த 1969ஆம் ஆண்டு தனி தெலங்கானா கேட்டு நடந்த போராட்டத்தை காங்கிரஸ் ஒடுக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே தோல்வி குறித்து சந்திரசேகர ராவ் பேசியுள்ளது, அவரது கட்சியினரிடையே குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share