நட்சத்திரப் பேச்சாளர்கள்: திமுக பட்டியலில் ராதாரவி

Published On:

| By Balaji

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய 838 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதி வழங்கி தமிழகத் தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 31) அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையமும் செய்து வருகின்றன. தமிழக முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் உட்படக் கட்சி பிரபலங்கள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில் தேர்தல் ஆணையம் நட்சத்திர வேட்பாளர்கள் பட்டியலை நேற்று [வெளியிட்டிருக்கிறது]( http://www.elections.tn.gov.in/vote/LokSabha2019/Star_Compainer.pdf). அதில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய, மாநிலக் கட்சிகள் சார்பில் 838 பேரின் பெயர் இடம்பெற்றிருக்கிறது.

அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் என 40 பேரின் பெயர்களும், திமுக சார்பில் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உட்பட 40 பேரின் பெயர்களும் இடம் பெற்றிருக்கின்றன. இதில் என்ன வேடிக்கை என்றால் அண்மையில் நடிகை நயன்தாரா விவகாரத்துக்காக என திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட நடிகர் ராதாரவி பெயர், திமுகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ADVERTISEMENT

காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பெயரும், பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித் ஷா உட்பட 40 பேரின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. 838 நட்சத்திரப் பேச்சாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தும்கூட குறைந்த அளவிலேயே பேச்சாளர்களைக் களத்தில் காண முடிவதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அனுமதி வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள், பிரச்சாரத்துக்குச் செல்லும்போது, அவர்களின் போக்குவரத்து செலவு வேட்பாளருடைய செலவு கணக்கில் சேர்க்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share