நடைபாதை ஆக்கிரமிப்புகள்: அதிகாரிகள் மீது நடவடிக்கை!

Published On:

| By Balaji

என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்க வியாபாரிகளை அனுமதித்தால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், வியாசர்பாடியைச் சேர்ந்த ரகு என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘சென்னை மாநகரில் ஏராளமான ஓட்டல்களில் வாகனங்களை நிறுத்த இடவசதிகள் இல்லை. ஓட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களின் கார்கள், பொதுச் சாலையை மறித்து ஓட்டலுக்குமுன்பு நிறுத்தப்படுகின்றன. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஐகோர்ட் அருகேயுள்ள பூக்கடை, என்.எஸ்.சி.போஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது’ என்று கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த ஐகோர்ட், சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், போக்குவரத்துப் பிரிவு போலீஸ் அதிகாரிகளும் இணைந்து இப்பகுதிகளில் ஆய்வுசெய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது

இதன்படி, அதிகாரிகளும் தங்களது ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் ஏ.சிராஜுதீன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,

ADVERTISEMENT

‘‘ராஜாஜி சாலை முதல் (என்.எஸ்.சி.போஸ் ரோடு) பூக்கடை வரை, சாலை பராமரிப்புப் பணி நடந்துவருவதாகவும், இந்தச் சாலையில் மக்கள் நடந்துசெல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து வியாபாரிகள் பலர் கடைகளை அமைத்துள்ளதாகவும் மனுதாரர் தரப்பு வக்கீல் கூறினார். எனவே, நடைபாதைகளை மறைத்து கடை வைத்திருப்பவர்களை, அந்த இடத்திலிருந்து உடனடியாக அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும். நடைபாதையை ஆக்கிரமிக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. இதையும் மீறி நடைபாதைகளை ஆக்கிரமிக்க வியாபாரிகளை அனுமதித்தால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது கோர்ட் அவமதிப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்துப் பிரிவு போலீஸ் அதிகாரிகள் ஆகியோர் கூட்டாக அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை ஆகஸ்டு 30ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.’’ என்று கூறப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share