அடூர் கோபாலகிருஷ்ணன், மலையாள திரையுலகின் புதிய அலை சினிமா இயக்கத்திலும் ஃபிலிம் சொசைட்டி இயக்கத்திலும் முக்கியப் பங்கு வகித்தவர். 11 முழு நீளப்படங்கள் மற்றும் 30 குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை இயக்கியவர். தாதாசாகிப் பால்கே விருது உட்பட பல தேசிய, சர்வதேச விருதுகளைப் பெற்றவர். அண்மையில், டெல்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் நடத்திய ஐடியா எக்ஸ்சேஞ் நிகழ்ச்சியில் பங்கேற்று பார்வையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அந்த உரையாடல் நிகழ்வு முழுவதும்.
கேள்வி: டெல்லி மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளுக்கு வரும்போது, இங்குள்ள பார்வையாளர்களிடம் கேரளாவிலிருந்து வரும் படங்களுக்கு முன்பைவிட நல்ல வரவேற்பு இருப்பதாக உணர்கிறீர்களா?
அவை நிச்சயம், பக்கா கமர்ஷியல் படங்களாகத்தான் இருக்கிறது. எனக்கு அவர்களைப்பற்றி அக்கறையில்லை. அவர்களால் மலையாள சினிமாவுக்கு எந்தவகையிலும் உதவ முடியாது. பாலிவுட் தயாரிப்பதைப்போன்ற கமர்ஷியல் படங்கள் அவை. இது எல்லாம் மலையாள படங்கள் இல்லை. அதில் உள்ள கதாபாத்திரங்கள் மலையாளம் பேசுகிறார்கள். அது எனக்கு நம்பிக்கை அளிப்பதில்லை.
நம்பிக்கை அளிப்பதில்லையா?
இல்லை. உண்மையில், சில சுவாரஸ்யமான சில கூறுகள் இத்தகைய படங்களில் இருக்கிறது. ஆனால், அவை தவறாகச் சித்தரிக்கப்படுகிறது. கடினமான வடிவத்துக்குள் அவர்கள் (மலையாள இயக்குநர்கள்) எல்லாவற்றையும் பொருத்த நினைக்கிறார்கள். பல சுவாரஸ்யமான கதைகள், நாவல்கள் திரைப்படமாக்கப்படுகிறது. ஆனால், அதை நீங்கள் கூர்ந்துகவனித்தால் அவை சுயத்தன்மையை இழந்து நிற்பதை உணரமுடியும். இதற்குக்காரணம், இயக்குநர்கள் கமர்ஷியல் ஃபார்முலாவை பின்பற்றுவதே. சினிமா என்றால் அதில் இதெல்லாம் இருக்கவேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். குறைந்தது 5 அல்லது 6 பாடல்கள். ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் அவர்கள் இங்கும் அங்கும் போய்க்கொண்டிருப்பார்கள். கூடவே இரண்டு காமெடியன்கள் இப்படி நிறைய…
70-80 காலகட்டம் கேரள சினிமாவின் பொற்காலம். அதுபோன்ற படங்கள் இனி உருவாக வாய்ப்பில்லையா?
கேரளாவில்கூட வழக்கத்துக்கு மாறான ஒரு சினிமா எடுப்பது மிகவும் கடினமானது. பிரபலமான நடிகர்கள் நடித்திருந்தால்கூட அவர்களால் அந்தப் படத்தை ரிலீஸ் செய்யமுடியாது. முன்பென்றால், ஒரு சினிமா ஹாலை புக் செய்து படத்தைக்காட்டி கொஞ்சம் தாக்குப்பிடிக்க முடியும். இப்போதோ, தியேட்டர் ஓனர்கள் இதுபோன்ற படங்களை சந்தேகிக்கின்றனர். பிரபலங்கள் இல்லாமல் நல்ல படம் எடுத்தால் உங்களால் தேசிய விருது வாங்க முடியும். தேசிய விருது கிடைக்கிறதென்றால் அதை யாரும் பார்க்கவில்லை என்றுதான் அர்த்தம்.
ஆனால், நீங்கள் இயக்கிய அனைத்துப் படங்களுமே தேசிய விருது வாங்கியுள்ளதே. அப்படியென்றால் அவை எதுவுமே ரிலீஸ் ஆகவில்லையா?
ஸ்வயம்வரம் படத்துக்காக நான் தேசிய விருது வாங்கியபோது, அவார்டும் அதுகுறித்த செய்தியும் கேரளாவில் இருந்த பார்வையாளர்களை தியேட்டருக்கு ஈர்த்தது. சில வருடங்கள் கழித்து அனந்தரம், கதபுருஷன் படங்களுக்காக நான் தேசிய விருது வாங்கியபோது பார்வையாளர்களின் வரவேற்பு மந்தமாகவே இருந்தது. அநேகமாக அந்த நேரத்தில், பார்வையாளர்களிடமும் தியேட்டர் ஓனர்களிடமும் தேசிய விருதுபெற்ற படங்கள் தியேட்டரை விட்டு விலக்கிவைக்கப்பட வேண்டியவை என்ற எண்ணம் உருவாகியிருக்கக்கூடும். பிறகு, அவர்கள் குப்பையான படங்களைக்காட்டி பல ரசிகர்களை தியேட்டருக்குக் கொண்டு வந்தார்கள். அதற்காக ரசிகர்களை குறைசொல்ல முடியாது.
நீங்கள் வழக்கத்துக்கு மாறானவை என்று அழைக்கிற பல இந்திப் படங்கள் அண்மையில் பாக்ஸ் ஆபிசிலும் வெற்றிபெற்றது. அதில் ஏதாவது படங்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
சில ஹிந்திப் படங்களை பார்த்திருக்கிறேன். உண்மையில், இந்தி சினிமாவில் தற்போது நிறைய சுவாரஸ்யமான விஷயங்கள் நடந்துவருகிறது. ஆனால், அது எல்லாவற்றையுமே நாம் பாலிவுட்டுக்குக்கீழே கொண்டுவர முடியாது. ஏனென்றால், அவர்களின் (நல்ல சினிமா இயக்குநர்களின்) படங்கள் ஹிந்தியில் எடுக்கப்படுகிறது. மேலும், அவர்கள் மல்டிபிளக்ஸ்களில் திரையிடுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. உண்மையில், இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திலும், எந்த மொழியாக இருந்தாலும் ஒரு படத்தை தேர்ந்தெடுக்கக்கூடிய தைரியமான விநியோகஸ்தர் இந்தியாவில் இல்லை. பல மொழிகளில் வரும் நல்ல படங்களை வாங்கி, சப்-டைட்டில்களோடு மல்டிபிளக்சில் திரையிடலாம். இதில் நல்ல லாபமும் கிடைக்கும். ஆனால், அவர்களுக்கு அந்த அளவுக்கு தைரியம் இல்லை.
முன்பு கேரளாவில் இடதுசாரி சிந்தனையின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் அது முற்போக்கான சமூகமாகக் காட்சியளித்தது. ஆனால் இப்போது, அந்த விவாதத்தின் தரம் குறைந்துவிட்டதாகக் கருதுகிறீர்களா?
உண்மையில், கேரளாவில் 100 சதவிகித கல்வியறிவு இருப்பதை தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம். கேரளாவில் உள்ள கலாச்சார நிகழ்வுகளைப் பாருங்கள். அரங்க இயக்கமே (theatre movement) இங்கு இல்லை. நாடக ஆசிரியராவதற்கான திறமையும் ரசனையும் கொண்ட பலர் அங்கு இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் பணத்துக்காக அபத்தமான சீரியல் ஸ்கிரிப்ட்டுகளை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நாம் மிகவும் அபாயமான ஒரு காலகட்டத்தில் இருக்கிறோம். இப்படிப்பட்டவைதான் இங்கு ஆடம்பரமாக நுகரப்படுகிறது. 30க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள் இருக்கிறது. ஆனால், அது எதுவுமே தேசிய விருதுபெற்ற ஒரு திரைப்படத்தை எப்போதும் காட்டியதே கிடையாது. இதனால் ரசிகர்கள் கெட்ட படங்களை பார்ப்பதற்கு திட்டமிட்ட முறையில் தயார்படுத்தப்படுகிறார்கள். இதனால் கலாச்சாரம் மற்றும் ரசனைகுறித்த மதிப்பீடுகள், திட்டமிட்ட சீரழிவை சந்தித்து வருகிறது. இதுவெல்லாம் சேர்ந்து ஒரு சமுக அச்சுறுத்தலாக ஆகிவிட்டது. நம்மால் அதிலிருந்து வெளியேற முடியாது. நாம் இந்த வலையில் சிக்கவைக்கப்பட்டிருக்கிறோம்.
(தொடரும்)
நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்
