தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை நகரங்கள் பட்டியலில் முன்னிலை பெறும்விதமாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலுள்ள கழிவறைகளின் தூய்மையைச் சென்னை மாநகராட்சி உறுதி செய்துவருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின், ‘சுவச் பாரத்’ எனப்படும் தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் நாட்டின் பல பகுதிகள் தூய்மை அடைந்துள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ‘தூய்மையான நகரங்கள்’ குறித்து நகரங்களில் ஆய்வு செய்து பட்டியலை மத்திய அரசு வெளியிடுகிறது. இதற்கான கணக்கெடுப்பு நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் முதல் 4,000 நகரங்களில் நடந்துவருகிறது.
கடந்த ஆண்டு செய்யப்பட்ட மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சிக்கு 235ஆவது இடம் கிடைத்தது. இவ்வளவு பின்தங்கிய இடம் கிடைத்ததற்குக் காரணம் என்னவென்று சென்னை மாநகராட்சி சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு சந்தை மற்றும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த கழிப்பறைகள் உரிய பராமரிப்பின்றி தூய்மையற்ற நிலையில் இருந்தன.
மேலும், திறந்தவெளியில் மலம் கழிப்பதும் பரவலாக இருந்ததனால்தான், சென்னை மாநகராட்சி 235ஆவது இடத்துக்கு வர முக்கியக் காரணமாக இருந்தது என அறியப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி நிர்வாகம், இந்த ஆண்டுக்கான தூய்மை நகரங்களுக்கான பட்டியலில் முன்னிலை பெற பல தீவிர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
பொது இடங்களில் உள்ள கழிவறைகளைத் தூய்மையாக வைத்திருக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருவதோடு, நேரில் சென்று கண்காணித்தும் வருகிறது. மாநகராட்சி பராமரிக்கும் கழிப்பறைகளில் 100 சதவிகிதம் தூய்மையாக இருக்க வேண்டும் என்று அந்தந்த பகுதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியில் உள்ள 303 பெட்ரோல் பங்குகளிலும் உள்ள கழிப்பறைகளைப் பொதுமக்கள் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதுகுறித்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்குத் தெரிவித்து, அங்கும் விழிப்புணர்வு பேனர்களை மாநகராட்சி நிர்வாகம் வைத்து வருகிறது.
