தமிழ்நாட்டில் 12 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் அறிவியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்கள்தான் நிர்வகிக்க வேண்டும். அதன்படி, அனைத்து பொறியியல் கல்லூரிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் நிர்வகித்து வருகிறது.
இந்நிலையில், அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படாமல் இருப்பதால் பல்கலைக்கழகத்தின் பணிகள் முடங்கியுள்ளன. பாரம்பரியமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஓராண்டுக்கும் மேலாக துணைவேந்தர் இல்லை. துணைவேந்தராக இருந்த தாண்டவன் ஓய்வுபெற்ற பின்னர் அந்தப் பதவிக்கு வேறு யாரும் நியமிக்கப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழகத்திலும் துணைவேந்தர் இடம் காலியாக இருக்கிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 1½ ஆண்டுகளாக துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவி மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பதிவாளர், நிதி அதிகாரி பணியிடங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக காலியாக உள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நிதி அதிகாரி பணியிடம் 2 ஆண்டுகளாக காலியாக உள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் நியமிக்கப்படாததால் அந்தப் பொறுப்பு கூடுதலாக கவனிக்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர், பதிவாளர், நிதி அதிகாரி போன்ற முக்கிய பொறுப்புகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படாமல் நீண்டகாலமாக இருப்பதால் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் சில பல்கலைக்கழகங்களில் உள்ள பதிவாளர்கள் ஜுன் மாதம் ஓய்வு பெறுகிறார்கள்.
எனவே, அதற்குத் தேவையான பதிவாளர்களை நியமிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து, மூன்று மாதத்துக்கு முன்பே புதிய பதிவாளர்களை தேர்வுசெய்ய வேண்டும். ஆனால் அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை என பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநில பொதுச் செயலாளர் என்.பசுபதி தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் நிதி அதிகாரி பதவியும் காலியாக உள்ளதால், நிதி ஒதுக்கீடு செய்ய முடியாமல் பல பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் இல்லாததால் 1½ ஆண்டுகளாக பட்டமளிப்பு விழா நடைபெறவில்லை. இதனால் 15 ஆயிரம் மாணவர்கள் அதிருப்தியில் உள்ளனர். பல்கலைக்கழகங்கள் நடைமுறைப்படி, ஆண்டுக்கு ஒருமுறை வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால் வரவு-செலவு கணக்குகளை சமர்ப்பிக்காமல் துணைவேந்தர்கள் தங்களது பதவிக் காலத்தை முடிக்கிறார்கள். எனவே, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், இது மிகப்பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும்.
