கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ஐ.பி.எல். தொடரில் பெரும்பாலான ரசிகர்களின் விருப்பமான அணியாக இருந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, சூதாட்ட பிரச்னையில் சிக்கியதால் இரண்டு ஆண்டுகளுக்கு விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அதன்படி கடந்த இரண்டு வருடங்களும் (2016, 2017) சென்னை அணியும், சூதாட்ட புகாரில் சிக்கிய மற்றொரு அணியான ராஜஸ்தான் அணியும் பங்கேற்கவில்லை. இவ்விரு அணி வீரர்களும் மற்ற அணிகளின் மூலம் ஏலம் பெறப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளும் விளையாடி வந்தனர்.
தற்போது இரண்டாண்டு தடை முடிவடைந்ததைத் தொடர்ந்து இவ்விரு அணிகளும் அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல். போட்டியிலாவது பங்கேற்குமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழத்தொடங்கியது. அதற்கு பதில் தரும் விதத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஜஸ்தான் அணியின் விளம்பரத் தூதுவரான சில்பா ஷெட்டி அளித்த பேட்டியில் **அடுத்த வருடம் ராஜஸ்தான் அணி மீண்டும் களமிறங்கும்** எனத் தெரிவித்தார்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பற்றி எந்தத் தகவலும் தெரியாமல் இருந்தது. சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். தொடரின் முடிவில், அடுத்த சீசனில் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கும் என்று சென்னை அணியின் நிர்வாகத்தினர் தெரிவித்திருந்தனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று (ஜூலை 14) காலை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. அதில் **வந்துட்டோம்னு சொல்லு, திரும்ப வந்துட்டோம்னு சொல்லு@விசில் போடு** எனப் பதிவிடப்பட்டிருந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் நிர்வாகம் சென்னையில் பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டு அது தொடரும் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதன் மூலம் சென்னை அணி அடுத்த ஆண்டு மீண்டும் களமிறங்குகிறது என்ற தகவலை உறுதிசெய்துள்ளது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் நிர்வாகம். இந்தத் தகவல் வெளியானதும் ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன், சமூக வலைதளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

சென்னை அணியின் கேப்டன் தோனி, இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகியதிலிருந்து அவரை மீண்டும் கேப்டனாக காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரிலும் தோனிக்கு கேப்டன் பதவி புனே அணியால் மறுக்கப்பட்டது. அதற்கு தோனியின் மனைவி ஷாக்சி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் ஜெர்சியை அணிந்த புகைப்படத்தை வெளியிட்டது புனே அணியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் இருந்தது. அதை பல்வேறு ரசிகர்களும் வரவேற்று தங்களின் ஆதரவை சமூக வலைதளங்களில் தெரிவித்தனர். ஐ.பி.எல். போட்டிகளில் மட்டுமே தோனி இனி கேப்டனாக தொடர்வது சாத்தியம் என்பதால் சென்னை அணியின் வருகையை தோனியின் ரசிகர்கள் பெரும்பாலும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அதுமட்டுமின்றி இந்தியாவில் கிரிக்கெட்டை அதிகம் விரும்பும் ரசிகர்கள் தமிழகத்தில் அதிகம் என்பதால், சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். எனவே, சென்னை அணியின் வருகைக்காகக் காத்திருக்கும் ரசிகர்களில் தமிழக ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியைப் பொறுத்தவரை, விளையாடிய போட்டிகளில் அதிக வெற்றிகளைப் பெற்ற ஐ.பி.எல். அணி என்ற பெருமையைப் பெற்றிருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகள் சென்னை அணி இல்லாததால் மும்பை அணி இந்தச் சாதனையை முறியடித்துள்ளது. ஆனால், அடுத்த வருடம் முதல் சென்னை அணி மீண்டும் களமிறங்கும் என்பதால் அதன் வெற்றிப்பயணம் தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இரண்டு முறை ஐ.பி.எல். சாம்பியன் பட்டமும், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன்ஸ் பட்டமும் வென்றுள்ளது. இதுவரை நான்கு முறை ஐ.பி.எல் ரன்னர்-அப் ஆகவும், இரண்டு முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளதால் அதிக முறை பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்ற ஒரே அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மீதான தடை நீங்குவதால், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னை அணி அடுத்த வருடம் மீண்டும் களமிறங்குகிறது என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியான பிறகு ஐ.பி.எல். நிர்வாகத் தலைவர் ராஜீவ் சுக்லா வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். அதேபோல் பிசிசிஐ செயலாளர் அமிதாப் சௌத்ரியும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்குவது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என்றால் மிகையில்லை. இருப்பினும் முதலில் இருந்த அணி மீண்டும் இணைந்து விளையாடுமா என்பது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
