திருப்பரங்குன்றம் தீப சர்ச்சை.. மதவாத சக்திகளுக்கு செக் வைத்த தமிழக அரசு: வரவேற்கும் சிபிஎம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

Thiruparankundram

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் மதவாத சக்திகளின் நிர்ப்பந்தத்திற்கு இடம் கொடுக்காமல், மக்கள் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் குறித்த உறுதியான நிலையைத் தமிழக அரசு தொடர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணையில் இருந்து வருகிறது. முந்தைய திமுக அரசு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசு தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக மனுதாரர் ராம ரவிக்குமார் உயர்நீதி மன்றத்தில் ஜூன் 4ம் தேதி நடந்த வழக்கு விசாரணையின்போது தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, “தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்” என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசு தெளிவாக உள்ளது. அங்குள்ள மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். இதுதான் அரசின் கொள்கையும் கூட. இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

பெரும்பாலான மக்கள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இருந்த அதே அமைதியான சூழலையே விரும்புகிறார்கள். அதுவே தொடர வேண்டும் என்றுதான் அரசும் நினைக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பாக என்ன சூழல் இருந்ததோ, அதே நிலை தொடர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். எந்தவொரு மதவாத சக்தியும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100 விழுக்காடு அனுமதிக்க மாட்டோம்” என்று கூறினார்.

ADVERTISEMENT

அமைச்சரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று (ஜூன் 7) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் தமிழக அரசின் முடிவை வரவேற்றுப் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், “திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் முந்தைய நிலையே தொடரும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

ADVERTISEMENT

மதவாத சக்திகளின் நிர்ப்பந்தத்திற்கு இடம் கொடுக்காமல், மக்கள் ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் குறித்த உறுதியான நிலையைத் தமிழக அரசு தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share