இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சினர் ஒன்று ஜெயிலில் இருக்கின்றனர் இல்லையென்றால் பெயிலில் இருக்கின்றனர் என்று பாஜக தேசிய தலைவர் நட்டா கடுமையாக விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு வருகைத் தந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இன்று ஒரே நாளில் சிதம்பரம் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, கரூர் வேட்பாளர் செந்தில்நாதன், விருதுநகர் வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆகியோரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
சிதம்பரம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து அரியலூரில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய ஜே.பி.நட்டா, “சனாதன தர்மம் மற்றும் தமிழ் கலாச்சாரத்தை ஒழிக்க திமுகவும் காங்கிரஸும் முயற்சிக்கின்றன. இவற்றின் நம்பிக்கைகள் மீதான திட்டமிட்ட தாக்குதலுடன், தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை கடுமையாக சீர்குலைத்துள்ளனர்.
ஆனால், புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை நிறுவி தமிழ் கலாச்சாரத்தை பாதுகாத்து புத்துயிர் கொடுத்திருப்பது பாஜக அரசு ஆகும்.
தொலைநோக்கு பார்வை கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், தமிழகத்தின் வளர்ச்சியால் மட்டுமே இந்தியாவின் வளர்ச்சி சாத்தியப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார்.
இந்தியா கூட்டணி கட்சிகள் குறித்து பேசிய அவர், “ஊழல் செய்த கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்திருக்கின்றன. ஊழலை ஒழிப்போம் என்று பிரதமர் மோடி சொல்கிறார். மறுபக்கம் இந்தியா கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊழல் செய்தவர்களை பாதுகாப்போம் என்கிறார்கள்.
இதுதான் இருவருக்கும் இடையே உள்ள வித்தியாசம்” என்று கூறினார்.
மேலும் அவர், “பருக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா, முப்தி முகமது, மெகபூபா முப்தி, முலாயம் சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், டிம்ப்ள் யாதவ், லாலு பிராசாத், ராப்ரி தேவி, தேஜஸ்வி, மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, கேசிஆர், கேடிஆர், கவிதா, கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், உத்தவ் தாக்ரே, ஆதித்யா தாக்ரே, சோனியா காந்தி, ராகுல் காந்தி பிரியங்கா காந்தி” என எதிர்க்கட்சிகளை குறிப்பிட்டு இவர்கள் எல்லாம் குடும்பக்கட்சிகளை சேர்ந்தவர்கள்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக பணத்தை கொள்ளை அடிக்கும், கட்டப்பஞ்சாயத்து செய்யும், வாரிசு அரசியல் செய்யும் கட்சியாக உள்ளது. ( “Dynasty, Money Swindling and Katta Panchayat).
ஸ்டாலினும் அவரது மகன் உதயநிதியும் ஊழல் செய்து வருமானத்துக்கு அதிகமாக ‘சொத்துக்களை குவித்துள்ளனர். திமுக ஆட்சியில்” தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக இருக்கிறது. திமுக அரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிய வேண்டும்” என்றார்.
எதிர்க்கட்சிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பேசிய அவர், “கிரிக்கெட் சங்கத்தில் முறைகேடு செய்ததாக பரூக் அப்துல்லா மீது ஊழல் வழக்கு உள்ளது. லாலு பிரசாத் மீது வேலை வாங்கித் தருவதாக பணமோசடி வழக்கு,
அகிலேஷ் யாதவ் மீது லேப்டாப் ஊழல், கெஜ்ரிவால் மீது மதுபான கொள்கை ஊழல் வழக்கு உள்ளது. ஸ்டாலின் மற்றும் உதயநிதி குடும்பமும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து ஊழல் செய்துள்ளது.
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சி தலைவர்கள் ஒன்று ஜெயிலில் உள்ளனர் அல்லது பெயிலில் உள்ளனர்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, பி.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், சஞ்சய் சிங் என பலரும் பெயிலில் தான் இருக்கின்றனர்.
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதா, மணிஷ் சிசோடியா ஆகியோர் ஜெயிலில் உள்ளனர்” என விமர்சித்தார்.
இதுபோன்று விருதுநகரிலும், கரூரிலும் எதிர்கட்சிகளை விமர்சித்து ஜே.பி.நட்டா பிரச்சாரம் செய்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
மாநிலத்துக்கு எதிரான சட்டங்களை அதிமுக எதிர்க்காதது ஏன்? : எடப்பாடி ஓபன் டாக்!