ADVERTISEMENT

திப்பு சுல்தான் பிறந்த நாள் விழாவுக்குத் தடை!

Published On:

| By Balaji

திப்பு சுல்தான் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த செவ்வாய் அன்று (நவம்பர் 7) அனுமதி வழங்க மறுத்துள்ளது. மேலும் நான்கு வாரங்களில் இந்த மனு மீதான தனது பதிலை மாநில அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளதாக பிடிஐ வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவிலுள்ள குடகு மாவட்டத்தில் திப்பு சுல்தான் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றால் அது வன்முறைக்கு வழிவகுக்கும்; எனவே அதற்குத் தடைவிதிக்க வேண்டும் என கே.பி.மஞ்சுநாத் என்பவர் மனுசெய்திருந்தார். 2015ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்த பிறந்தநாள் விழா நடந்தபோது வன்முறை வெடித்தது என அதில் குறிப்பிட்டிருந்தார். மேலும் 18ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த இஸ்லாமிய ஆட்சியாளரான திப்பு சுல்தான் குடகிலிருந்த மக்களை இஸ்லாம் மதத்திற்குக் கட்டாயப்படுத்திச் சேர்த்ததாகவும் கூறியுள்ளார். “திப்பு ஒரு படையெடுப்பாளர், சர்வாதிகாரி. அத்தகைய ஒரு நபரை மகிமைப்படுத்துவது அவமானம்” என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

ADVERTISEMENT

நவம்பர் 10ஆம் தேதி நடைபெற இருந்த விழாவில் தான் கலந்துகொள்ளவில்லை என மாநில திறன் மேம்பாட்டுத் துறையின் மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் ஹெக்டே கர்நாடக அரசிடம் கூறியதிலிருந்து இந்த சர்ச்சை ஆரம்பமானது. கர்நாடக முதல்வர் சித்தாராமையா, ஹெக்டே இந்நிகழ்ச்சியைப் புறக்கணித்ததற்கு அவரை விமர்சித்தார். “இது ஒரு அரசியல் பிரச்சினையாக மாறிவருகிறது. திப்பு பிரிட்டிஷ்க்கு எதிராக நான்கு போர்களைப் புரிந்தவர்” என்று அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அக்டோபர் 25ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவையின் வைர விழாவில் கலந்துகொண்டு திப்பு சுல்தானின் சாதனைகளைப் புகழ்ந்து பேசினார். “திப்பு சுல்தான் பிரிட்டிஷாருக்கு எதிரான போரில் வீரமரணம் அடைந்தவர். போரில் அவர் உபயோகித்த தொழில்நுட்பத்தை ஐரோப்பியர்கள் பிற்காலத்தில் பின்பற்றினர்” என்று அவ்விழாவில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share