அரசுப் பேருந்தில் பயணிகளின் தாகத்தைத் தீர்ப்பதற்காக ஓட்டுநர் நடத்துநர் இணைந்து மினரல் வாட்டர் கேன்களை பேருந்தில் வைத்துள்ளது தஞ்சை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் கோடைக்கால வெப்பத்தைச் சமாளிக்க அதிக அளவு தண்ணீர் பருக வேண்டியுள்ளது. ஆனால் பயண நேரங்களில் போதிய நீர் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. இந்நிலையில், பயணத்தின்போது பயணிகளின் தாகத்தைத் தீர்க்க தஞ்சை அரசு பேருந்தின் ஓட்டுநரும் நடத்துநரும் புதிய முறையைக் கையிலெடுத்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியிலிருந்து கல்லணைக்கு ஒருமுறையும் மற்ற நேரங்களில் செங்கிப்பட்டியிலிருந்து திருக்காட்டுப்பள்ளி வழியாகச் சுரக்குப்பட்டி என்ற ஊருக்கு 88 என்ற எண் கொண்ட அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது.
இந்தப் பேருந்தின் ஓட்டுநராக செல்வராஜும், நடத்துநராக முத்தமிழ் செல்வனும் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் தாகத்தைத் தீர்க்க தங்களது சொந்த செலவில் மினரல் வாட்டர் கேன்களை வாங்கிப் பேருந்தில் வைத்துள்ளனர்.
ஓட்டுநர் இருக்கையின் பின்புறத்தில் சிறிய அளவில் உள்ள சிறிய நாற்காலியின் மேல் தண்ணீர் கேன்களை வைத்து, கீழே விழாமல் இருக்கக் கயிறு கொண்டு கட்டியுள்ளனர். இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். இதனால் அந்தப் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் தாகமின்றி பயணம் மேற்கொள்கின்றனர்.
“நாங்கள் பாட்டில்களில் வைத்துள்ள தண்ணீரை குடிக்கும்போது எங்களுக்கும் தண்ணீர் கொடுங்கள் என பயணிகள் கேட்பார்கள். நாங்களும் கொடுப்போம். அப்போதுதான் இந்த யோசனை வந்தது. அனைவரும் தண்ணீர் குடிக்கும் வகையில் பேருந்திலேயே தண்ணீர் வைக்க முடிவு செய்தோம்” என்று ஓட்டுநரும் நடத்துநரும் தெரிவித்துள்ளனர்.
இவர்களின் செயல் தஞ்சை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
