தமிழில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்: தலைமை நீதிபதியிடம் திமுக மனு!

Published On:

| By Balaji

”உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் உடனுக்குடன் மொழி பெயர்க்கப்படும் மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டும்” என்று தலைமை நீதிபதியிடம் திமுக எம்.பி,டி.ஆர்.பாலு மனு அளித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் ஆறு மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாத இறுதியில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இந்தி, தெலுங்கு, அசாமி, கன்னடம், மராத்தி, ஒடியா ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளைத் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்று தமிழகத்திலிருந்து கோரிக்கைகள் வலுத்து வருகிறது.

ADVERTISEMENT

அந்தவகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை உடனுக்குடன் ஏககாலத்தில் மொழி பெயர்ப்பதற்கான தாய்மொழிகளின் உத்தேச முதல் பட்டியலிலேயே தமிழையும் சேர்க்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நேற்று (ஜூலை 12) உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை நேரில் சந்தித்து மனு கொடுத்து வலியுறுத்தியுள்ளார்.

அதில், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மொழி பெயர்ப்பதற்கான தாய்மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்ப்பதன் மூலம் வழக்காடுபவர்கள் வழக்கின் பிரச்சினைகளை எளிதாகப் புரிந்து கொள்வதை நிச்சயமாக எளிதாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் தீர்ப்புகளைத் தமிழில் மொழி பெயர்ப்பதற்கான சில முக்கிய காரணங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், “தமிழ்நாட்டில் பெருமளவில் பேசப்பட்டு வரும் தமிழின் மேன்மையின் காரணமாக அதற்கு 2004 ஆம் ஆண்டு, பிற இந்திய மொழிகளில் முதலாவதாகச் செம்மொழித் தகுதி வழங்கப்பட்டது. அதற்குப் பின்னரே அந்த செம்மொழித் தகுதி, பிற மொழிகளுக்கு வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் அலுவல் மொழியாகவும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளில் ஒன்றாகவும் தமிழ் உள்ளது. யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபார் தீவுகளின் அலுவல் மொழிகளில் ஒன்றாகவும் உள்ளது. சிங்கப்பூரிலும், இலங்கையிலும் அலுவல் மொழிகளில் ஒன்றாகத் தமிழ் உள்ளது., மலேசியா, மியான்மர், கனடா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள ஏராளமான பள்ளிகளில் கற்பிக்கப் பட்டு வருகிறது. தமிழின் முக்கியத்துவம் இதர நாடுகளிலும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மொழித்துறையில் அடையாளம் என்பது ஒரு முக்கியமான கொள்கையாக தற்போது உள்ளது. மொழிப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது ஒரு சமுதாயத்தின் ஒருமைப் பாட்டுக்கு அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கலாச்சாரத்துடன் ஒருங்கிணைந்த மொழியாகவும் அதே போன்று அடையாளத்திற்கு மூலமாகவும் தமிழ் இருப்பதால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மொழி பெயர்ப்பதற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தாய் மொழிகளின் முதல் பட்டியலிலேயே அதை இடம் பெறச் செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

**

மேலும் படிக்க

**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சியைக் கவிழ்க்க ஸ்டாலின் மீண்டும் முயற்சி!](https://minnambalam.com/k/2019/07/12/87)**

**[நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!](https://minnambalam.com/k/2019/07/12/48)**

**[ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!](https://minnambalam.com/k/2019/07/12/19)**

**[நீதிமன்றத்திற்கு சவாலா? தலைமை நீதிபதி கேள்வி!](https://minnambalam.com/k/2019/07/12/57)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share