தமிழக மீனவர்களிடம் இலங்கை கடற்படையினர் அத்துமீறல்!

Published On:

| By Balaji

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வேண்டும் எனவும், தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை திரும்பப்பெற மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

ADVERTISEMENT

போராட்டம் தீவிரமானதை தொடர்ந்து, நடைபெற்ற சமரச பேச்சு வார்த்தையால் மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இதையடுத்து, 4 நாட்களுக்குப் பிறகு நேற்று 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

கச்சத்தீவு அருகே நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் வந்து மீன் பிடிக்கக்கூடாது என்று கூறினார்கள். பின்பு உடனே இங்கிருந்து செல்லுங்கள் என்று மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.

ADVERTISEMENT

இதைதொடர்ந்து, சில படகுகளுக்குள் புகுந்த இலங்கை கடற்படையினர் அங்கிருந்த மீன்பிடி சாதனங்களை அடித்து உடைத்துச் சேதப்படுத்தினர். மீனவர்கள் சிலர் மீது தாக்குதலும் நடத்தியதால், அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் அங்கிருந்து அச்சத்துடன் இன்று(பிப்ரவரி 18) காலை கரை திரும்பினர்.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களிடம் அத்துமீறி நடந்துகொள்கின்றனர். மீனவர்களைத் தாக்குவது, பொருட்களைச் சேதப்படுத்துவது போன்ற வன்முறைகளில் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து மாநில, மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share