அதிமுக அரசு மீது புழுதியை வாரித் தூற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் கமலுக்கு உள்ளது என்று மீன் வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் மக்களுக்காக அரசு வழங்கும் இலவசப் பொருட்களை ஊழல் திட்டங்கள் போல சித்தரித்ததால் பல்வேறு சர்ச்சைகள் உருவாகின. இது குறித்து தனது கருத்தைப் பதிவு செய்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இலவசங்கள் பிச்சைக்காரர்களுக்குத்தான் வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
கமலின் பதிவு குறித்து, அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான, நமது அம்மாவில், “இலவசங்கள் பிச்சைக்காரர்களுக்குத்தான் வேண்டுமென்றால் கமல் ஏன் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள் வழங்குகிறார். மக்களின் வரிப்பணமாக அரசுக்கு வருவதை மறுபடியும் மக்களுக்கே கொண்டு செல்வதற்காக இந்தத் திட்டங்கள் அமல்படுத்தப் படுகின்றன.
’கட்சி தொடங்கி விட்டீர்கள், அதை நடத்துவதற்கான பணத்திற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என ஒரு பத்திரிக்கையாளர் கேட்ட போது அதைத் தொண்டர்களிடம் இருந்து பெறுவேன் என கூறிய கமல்ஹாசனை வேண்டுமானால் அரசியல் பிச்சைக்காரர் என அழைக்கலாம்” என நேற்று (நவம்பர் 13) செய்தி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்களின் சந்திப்பின் போது அமைச்சர் ஜெயக்குமாரிடம், “அதிமுக அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில் கமலை பிச்சைக்காரர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. இதனை நாகரீகம் என்று கருதுகிறீர்களா” என்று கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு, தன்னை முன்னிறுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக அதிமுக அரசு மீது புழுதி வாரித் தூற்ற வேண்டும் என்ற எண்ணம்தான் கமலுக்கு உள்ளது என்று விமர்சித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு கட்சிகள் கூட்டணிகள் குறித்து முடிவெடுத்து வரும் நிலையில் பாஜகவுடன், அதிமுக கூட்டணி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், தேர்தல் நேரத்திலேயே கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்தார்.
அதிமுகவில் திறமைக்கு முக்கியத்துவம் கிடைக்காது, சீனியாரிட்டி அடிப்படையில்தான் போஸ்டிங் கொடுப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, அமைச்சரவை விஷயங்களை பொறுத்தவரை முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும், யாருக்கு என்னென்ன தகுதி, திறமை உள்ளது என்பது முதல்வருக்குத் தெரியும் என்று பதிலளித்தார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக பேசிய அவர், தமிழ் இனத்தைச் சார்ந்த தொப்புள் கொடி உறவுகள் அங்குள்ளனர்.மீனவர்கள் அங்கு காலம் காலமாகதொழில் செய்து வருகின்றனர். இவர்களின் நலன்தான் நமக்கு முக்கியம். அங்குள்ள அரசியலில் நாம் தலையிட முடியாது. இலங்கை சூழலை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. எனினும் இலங்கை விவகாரத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழியை தமிழக அரசு பின்பற்றும் என்றார்.
