டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் காலமானார்!

Published On:

| By Balaji

இந்திய தலைநகர் டெல்லியில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்தவரும், இந்தியாவின் சிறந்த முதல்வர் என்று பெயர் பெற்றவருமான ஷீலா தீட்சித் இன்று (ஜூலை 20) காலமானார். அவரது மறைவு டெல்லி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உடல் நலக் குறைவால் இன்று காலை 10 மணியளவில் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷீலா தீட்சித் மதியம் 3.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது இறப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஷீலா தீட்சித்தின் மறைவு டெல்லிக்கு பெரும் இழப்பு எனக் கூறி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

காங்கிரஸ் தனது அன்பான மகளை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ள ராகுல் காந்தி, ”அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர், அவருடன் தனிப்பட்ட பிணைப்பு உள்ளது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் காபுர்தாலாவில் ஷீலா தீட்சித் 1938ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி பிறந்தார். டெல்லி பல்கலைக் கழகத்தின் மிராந்தா ஹவுஸ் கல்லூரியில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றார். டெல்லி பல்கலைக் கழகத்தில் தத்துவத்துக்கான முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அவரது நிர்வாகத் திறனைப் பார்த்து முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, அவரை ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் இந்தியப் பிரதிநிதியாகப் பரிந்துரைத்தார். அதன்படி 1984-1989 வரை ஐக்கிய நாடுகள் ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக செயல்பட்டார். ராஜீவ்காந்தி ஆட்சிக் காலத்தின் போது, 1984ஆம் ஆண்டில் அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மத்திய அமைச்சராக 1986-1989ஆம் ஆண்டுகளில் பணியாற்றினார். முதலில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் சார் அமைச்சராகவும், பிறகு பிரதமர் அலுவலகத்தின் சார் அமைச்சராகவும் பணியாற்றினார். 1990ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டு 23 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

ADVERTISEMENT

1998ஆம் ஆண்டுமுதல் 2013ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகள் டெல்லியின் முதலமைச்சராகப் பதவி வகித்தவர். இந்தியாவிலேயே அதிக காலம் தொடர்ந்து முதல்வர் பதவி வகித்த பெண் தலைவர் ஷீலா தீட்சித். 2008 ஆம் ஆண்டில் இந்தியப் பத்திரிகையாளர் சங்கம், ‘இந்தியாவின் சிறந்த முதலமைச்சர்’ என்ற பட்டத்தை அவருக்கு வழங்கியது. 2009 ஆம் ஆண்டின் சிறந்த அரசியல்வாதி விருதை என்டிடிவி அவருக்கு வழங்கியது. டெல்லியில் மூன்று முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித், 2014ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியை தழுவினார். பின்னர் 2014 மார்ச் மாதம் கேரள ஆளுநராகப் பொறுப்பேற்று 5 மாதங்கள் பதவிவகித்தார். இவ்வாறு ஆளுநர், முதல்வர், அமைச்சர் என பல பொறுப்புகளை வகித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஷீலா தீட்சித் இன்று காலமானார். இவரது இழப்பு காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்ற போது, ராகுல் காந்தியைச் சந்தித்து, தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று பலமுறை வலியுறுத்தியவர் ஷீலா தீட்சித். அவரது தலைமையில் தர்ணா போராட்டங்களும் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

**

மேலும் படிக்க

**

**[ தமிழ் பேசினால் தமிழ்ப் படமா?](https://minnambalam.com/k/2019/07/20/20)**

**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**

**[ஆகஸ்டில் இங்கிலாந்து பறக்கும் தனுஷ்](https://minnambalam.com/k/2019/07/20/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share