டெல்லியின் திடீர் பாசம்
மொபைலில் டேட்டா ஆன் செய்துவிட்டுக் காத்திருந்தோம். வாட்ஸ் அப் ஆன்லைனில் வந்தது.

டெல்லியில் போராட்டம் நடத்திவிட்டு நேற்று (அக்டோபர் 25) சென்னைக்குத் திரும்பினார் விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு. முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கக் கோட்டைக்குப் போகப்போகிறார் என முதலில் தகவல் பரவ, காவல் துறை உஷாரானது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து அய்யாக்கண்ணுவையும் அவருடன் வந்தவர்களையும் மடக்கிவிட்டது போலீஸ். ஐ.ஜி., டி.ஐ.ஜி. என போலீஸ் பட்டாளமே ரயில் நிலையத்தில் குவிந்திருந்தது.
அய்யாகண்ணு ரயிலை விட்டு இறங்கியதும் அவர்களை போலீஸ் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு போனார்கள். கோட்டைக்கு மனு கொடுக்கப் போக வேண்டும் என்றனர் அய்யாக்கண்ணு தரப்பினர். போலீஸ் பாதுகாப்புடன் 10 பேரை மட்டும் அழைத்துப் போனார்கள். முதல்வர் நேற்று கோட்டைக்கு வரவில்லை. அதனால், வேளாண்மைத் துறைச் செயலாளரிடம் மட்டும் மனு கொடுத்தார் அய்யாக்கண்ணு.
கோட்டையில் இருந்து அவரைக் கிளப்பி மதியம் 3.40 மணிக்குப் பல்லவன் எக்ஸ்பிரஸில் திருச்சிக்கு அனுப்பிய பிறகுதான் போலீஸ் நிம்மதிப் பெருமூச்சுவிட்டது. பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் நின்றபோது அய்யாக்கண்ணு அங்கே இறங்கப் பார்த்திருக்கிறார். மஃப்டியில் இருந்த போலீஸ் அவரைத் தடுத்து இறங்க விடவே இல்லை. ‘ஓ நீங்க இன்னும் இங்கேதான் இருக்கீங்களா…’ எனச் சிரித்தபடியே அமர்ந்துகொண்டாராம் அய்யாக்கண்ணு.
இந்தத் தகவல் எல்லாம் முதல்வர் பழனிசாமிக்கு மாலையில் சொல்லப்பட்டிருக்கிறது. ‘ அவர் என்னை பார்க்க வர்றாரு என்று முன்கூட்டியே சொல்லி இருந்தால் பார்த்து இருக்கலாமே… ஏன் என்கிட்ட சொல்லலை?’ என அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார் எடப்பாடி. அவர்களோ, ‘அவரு அப்பாயின்மென்ட் எதுவும் கேட்கவே இல்லை சார்… திடீர்னு ரோட்டுக்கு வந்து போராட்டம்னு உட்கார்ந்து விடுவார்னுதான் திருப்பி அனுப்பினோம்’ எனச் சொன்னார்களாம்.
‘இனி அவங்க எப்போ பார்க்கணும்னு கேட்டாலும் உடனே எனக்கு சொல்லுங்க…’ எனச் சொல்லி இருக்கிறார் எடப்பாடி.” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
தொடர்ந்து அடுத்த மெசேஜும் வந்தது.
“டெல்லியில் உள்ள பிஜேபி பிரமுகர் ஒருவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசையுடன் பேசியிருக்கிறார். ‘மெர்சல் படத்துக்கு எதிராக நீங்கதான் ஆரம்பிச்சு வெச்சீங்க. அந்த படத்தில் வந்த வசனத்தை அப்படியே விட்டிருந்தால், ஆட்சிக்கு எதுவும் கெட்ட பெயர் வந்திருக்காது. நீங்க உட்பட தமிழக பாஜகவில் சிலர் மெர்சல் பற்றி பேசினது தேவையில்லாமல் நிறைய குழப்பங்களை உண்டாக்கிடுச்சு. விஜய் எப்பவும் நமக்கு எதிராகச் செயல்பட்டதில்லை. அவரை விமர்சனம் செய்து உங்களுக்குக் கெட்ட பெயர் வந்ததுதான் மிச்சம். இனி பேசுறதுக்கு முன்னாடி எங்களோடு கலந்துக்கிட்டு பேசுங்க…’ என அட்வைஸ் செய்திருக்கிறார்.
இதற்கு பதிலாக தமிழிசையும் சில விளக்கங்கள் கொடுத்திருக்கிறார். ஆனாலும் பேசியவர் சமாதானம் ஆகவில்லையாம்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது.�,”