வைபை ஆன் செய்ததும் சட்டமன்றத்தில் மூத்த அமைச்சர் துரைமுருகன் பேசும் வீடியோக் காட்சிகள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன.
அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாடு சட்டமன்றத்தில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆளுநர் உரையை மையப்படுத்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் ஆளுநர் ஆர்.என் ரவி. இது தொடர்பாக சட்டமன்றத்தில் அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டமன்றத்தில் கலந்து கொள்வதற்காகவே அமைச்சர் துரைமுருகன் டெல்லியில் இருந்து அவசர அவசரமாக நேற்று (ஜனவரி 5) இரவே சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகனிடம், “அமலாக்கத்துறை ரெய்டு தொடர்பாகத்தான் டெல்லி சென்றீர்களா,?’ என்று கேட்க…. ‘நான் இலாகா ரீதியாக சென்று வந்தேன். நீங்கள் எழுதும் கதைகளுக்கெல்லாம் நான் ஆள் அல்ல’ என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.
ஆனால், கதிர் ஆனந்த் விஷயத்தில் அமலாக்கத்துறை க்ளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்ற அலர்ட்டின் அடிப்படையில் தான் நேற்று டெல்லியில் முகாமிட்டு சட்டரீதியான ஏற்பாடுகளை ஆலோசித்து வந்திருக்கிறார் துரைமுருகன்.
இதற்கிடையில், குடும்பத்தோடு துபாய் சென்றிருந்த அவரது மகனும் வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்த் நாளை (ஜனவரி 7) சென்னை திரும்புகிறார் என்கிறார்கள் வேலூர் வட்டாரத்தில்.

அமலாக்கத்துறை வட்டாரத்தில் விசாரித்த போது…
‘2019 மக்களவைத் தேர்தலின் போது துரைமுருகனுக்கு நெருக்கமான நபர்களாக கருதப்படும் பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் தொடர்பான இடங்களில் சுமார் 11 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அந்தப் பணத்துக்கு முழுமையான முறையான கணக்கு இல்லை என்ற காரணத்தால்தான் இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை நுழைந்தது.
கைப்பற்றப்பட்ட அந்த 11 கோடி ரூபாய்களில் பெரும்பாலும் புதிதாக அச்சடிக்கப்பட்ட 200 ரூபாய் நோட்டுகள். இதுபற்றி விசாரித்த போது தான் காட்பாடியில் துரைமுருகன் இல்லத்தில் இருந்து சுமார் முக்கால் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் கனரா பேங்க் செஸ்ட் வங்கியில் இருந்து இந்த பணம் தருவிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது.
கனரா வங்கியின் சீனியர் மேனேஜர் தயாநிதியிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீது வங்கியும் நடவடிக்கை எடுத்தது.
அதாவது செஸ்ட் வங்கி என்றால் வங்கிகளுக்கான வங்கி என அர்த்தம். ரிசர்வ் வங்கியிடமிருந்து பணத்தைப் பெற்று வங்கிகளுக்கு தருவது… வங்கிகளிடமிருந்து பணத்தைப் பெற்று ரிசர்வ் வங்கிக்கு அனுப்புவது என்பதுதான் செஸ்ட் வங்கியின் வேலை. இப்படிப்பட்ட கனரா செஸ்ட் வங்கியில் இருந்து துரைமுருகனுக்கு வேண்டப்பட்டவர் என்ற காரணத்திற்காக சீனியர் மேனேஜர் கோடிக்கணக்கான ரூபாய் அளவுக்கு 200 ரூபாய் நோட்டுக்களை கொடுத்து இருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும், மூன்று மாதங்களுக்கு முன்பு கூட பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோர் அமலாக்கத் துறைக்கு தங்களது இறுதி பதில்களை அனுப்பி விட்டார்கள். வங்கி அதிகாரி, பணம் கைப்பற்றப்பட்ட இடத்தோடு தொடர்புடைய பூஞ்சோலை சீனிவாசன், தாமோதரன் ஆகியோரிடம் விசாரணை முடிந்துவிட்ட நிலையில், கதிர் ஆனந்திடம் மட்டும்தான் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது.
இதற்காகத்தான் ஏழு முறை சம்மன்கள் அனுப்பியும் கதிர் ஆனந்த் அவற்றுக்கு முறையான பதில் அளிக்கவில்லை என்கிறார்கள் அமலாக்கத்துறை வட்டாரங்களே. ஆனால், கதிர் ஆனந்த் தரப்பில், ‘நீங்கள் கேள்விகளை அனுப்புங்கள். நான் பதில்களை அனுப்புகிறேன்’ என்று அமலாக்கத்துறைக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது எப்படி சரியாக வரும் என்று தான் நேரடியாக கதிர் ஆனந்தின் வீட்டுக்கே வந்திருக்கிறது அமலாக்கத்துறை.
அமலாக்கத் துறை கதிர் ஆனந்திடம் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தீவிரமாக இருக்கிறது. இந்த நிலையில் தான் உச்ச நீதிமன்றத்தில் கதிர் ஆனந்தின் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைக்கிறோம். ஆனால், கைது செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டு மனு செய்வதற்கான ஏற்பாடுகள் துரைமுருகன் தரப்பில் தீவிரமாக நடந்து வருகின்றன.
அமலாக்கத்துறை கதிர் ஆனந்திடம் விசாரணை நடத்துவதற்கு தீவிரமாக இருக்க… துரைமுருகன் தரப்பினரோ, சட்ட ரீதியான தற்காப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்” என்ற மெசேஜ்க்கு சென்ட் கொடுத்து ஆஃப்லைன் போனது வாட்ஸப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிரான்ஸ்ஃபருக்கு இப்படி ஒரு காரணமா? வில்லங்க சர்ச்சையில் டிஐஜி… கொதிக்கும் பெண் போலீசார்!
“கருப்புக்கு பயந்து மோடிக்கு வெள்ளை குடை”: ஸ்டாலின் மீது அதிமுக மாணவரணிசெயலாளர் தாக்கு!