1996-ல் மூப்பனார், காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து, தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியை தொடங்கிய தினம். தேர்தல்காலப் பழக்கத்தில் ஒன்றாக, மூப்பனார் அறிவிப்பைத் தொடர்ந்து, அன்று மாலையே சென்னை முதல் கன்னியாகுமரி வரை அரசு மற்றும் தனியார் பேருந்தில் பயணித்த தினம். திரும்பும்வழியில், விடுபட்டுப்போன முக்கிய மேற்கு மாவட்ட நகரங்களுக்கும் விஜயம். வழியில், முக்கிய நகரங்களிலிருந்து பேருந்து மாறி, பேருந்து நிலையங்களிலும், டீ கடைகளிலும் அரசியல் மற்றும் தேர்தல்குறித்து மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்? என்று, தள்ளிநின்று மனக்குறிப்பு எடுக்கும்விதம்…
முன்பு எப்போதுமில்லாதவகையில், சுவாசிக்கும் காற்றில்கூட ஒரு இறுக்கம், நம்பிக்கையின்மை தெரிந்தது. ஒவ்வொரு ஊரிலும் ஆண்களில் குறிப்பாக, ஒவ்வொருவரிடமும் அன்றைய தினசரிப் பத்திரிகைகளில் ஏதாவது ஒன்று பளிச்சிட்டது. அதோடு, மாலைநேரப் பத்திரிகைகளிலும் பளிச்சிட்டது. அவற்றில் ஒரு சில, அவர்களது அரசியல் பின்புலத்தை உணர்த்துவதாகவும் இருந்தன. அந்தப் பத்திரிகைகளை வாங்கி அவர்கள் படித்திருந்தமை நன்றாகவே புலப்பட்டது. ஆனால், அவர்களது பேச்சோ, அரசியல் நெடியே இல்லாமல் குடும்பம் மற்றும் ஊர் விடயங்கள் பற்றியதாகவே இருந்தது.
அவர்களில் பலரும் ஒருவருக்கு ஒருவர் உறவினர் அல்லது நெருங்கிய நண்பர்கள். அவர்கள்சார்ந்த கட்சிக் கரை வேஷ்டிகள் அவர்களை அடையாளம் காட்டியது. ஆனால், ஓயாமல் அரசியல் பேசிவந்த தமிழ்நாட்டு மக்கள் முதன்முறையாக, பொது இடங்களில் மௌனம் காத்தது. மனதில் ஒரு நெருடலாகவே பதிந்தது. வெட்டுண்ட மௌனம்.
அந்தத் தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கைமூலம் முடிவு அறிவிக்கும் தினம். அன்று, பெங்களூர்-சென்னை பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் டிரெய்னில் பயணித்தபோதும், வாக்காளர்களின் அந்த மௌனம் கத்தியால் வெட்டப்படும் நிலையை எட்டியிருந்தது. ஆளும் அஇஅதிமுக படு தோல்வியைச் சந்தித்திருந்தது. முதல்வர் ஜெயலலிதாவே தர்மபுரி மாவட்டம், பர்கூர் தொகுதியில் தோல்வியுற்றிருந்தார். அனைத்துச் செய்திகளும் அந்தப் புகைவண்டியினுள் கசிந்திருந்தது என்பதும் நன்றாகவே புரிந்தது.
ஆனால், அன்று பயணித்த ஒருவர்கூட வாய்திறந்து தேர்தல் குறித்தோ, தேர்தல் முடிவுகள் குறித்தோ, பேசாதது ஆச்சரியமாக இருந்தது. இதுவே இடைப்பட்ட காலங்களில், மாநிலம் முழுவதும் அந்த காலகட்டத்தின் அனுபவமாக இருந்தது. டெல்லி விமான நிலையத்தில், ஆற அமர அரசியல் பேசிய தமிழர்கள், சென்னை விமான நிலையத்தை அடைந்ததும், அப்பாவிகளாக தங்களை மாற்றிக்கொண்டது வினோதமாக இருந்தது.
இதுவே, தமிழ்நாட்டு மக்கள் எங்கே தேர்தல்களையும், அரசியல் கட்சிகளையும் வெறுக்க ஆரம்பித்து விட்டனரோ என்ற நியாயமான, ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் தோற்றுவித்தது. பின்னர், ஆற அமர்ந்து ஆராய்ந்ததில் உண்மை புரிய ஆரம்பித்தது.
முந்தைய 1971ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர், தமிழ்நாட்டு மக்கள் தங்களது உயிர் மற்றும் உடல் பாதுகாப்பு குறித்து அச்சப்பட்ட முதல் தேர்தல் அது (1996) எனலாம். அதற்கென்று தனிக் காரணங்கள் எதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், அந்தக் காலகட்டத்தில் தங்களைச் சுற்றி அரங்கேறிவந்த அன்றாட நிகழ்ச்சிகளுடன், சாதாரண மக்கள் தங்களை நன்றாகவே ஐக்கியப்படுத்திக் கொண்டிருந்தனர்.
அதனால்தான், பொது இடங்களில் அரசியல் மற்றும் தேர்தல் குறித்து மக்கள் பேசுவதற்கான தயக்கத்தின் காரணம். ஆனாலும் அடுத்தவர்கள் குறிப்பாக, கரை வேஷ்டிகள் ஏதாவது பேச மாட்டார்களா, அதிலிருந்து தங்களது ‘அறிவு’ (?) பெருகிவிடாதா, என்ற அங்கலாய்ப்பு அவர்களின் முகங்களில் நிதர்சனமாகத் தெரிந்தது.
அந்தவிதத்தில் 1996ம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதா, தனது சொந்தத் தொகுதியில் தோல்வியடைவார் என்பதும், சுமார் பத்து நாள்களுக்கு முந்தைய களநிலையில் நன்றாகவே புரிந்தது. எதிர்பார்த்த சுமார் 3000 ஓட்டு வித்தியாசத்துக்குப் பதிலாக 8000 ஓட்டு வித்தியாசத்தில் அவர் தோற்றதே, எதிர்பாராத விஷயமாக முடிந்தது. ஆனால், களநிலை விவரங்கள் சென்றடைய வேண்டியவர்களை, சரியான நேரத்தில் சென்றடைந்ததா என்பது, இன்னமும் புரியாத புதிர்.
இவ்வாறுதான், தமிழ்நாட்டிலேயே முந்தைய 1967ம் ஆண்டுத் தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் (காமராஜ்) மற்றும் அன்றைய முதல்வர் மு.பக்தவத்சலம் (திருபெரும்புதூர்) போன்ற தலைவர்களின் களநிலவரம் அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. பின்னர், அவசரநிலை சட்டத்துக்குப் பின்னர், 1977ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தியும், அவரது மகன் சஞ்சய் காந்தியும் மக்கள் மனநிலை அறியாமலேயே தேர்தலில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினர்.
தமிழ்நாட்டு மக்களின் அரசியல் மற்றும் தேர்தல் நுண்ணறிவு குறித்து 1996ம் ஆண்டுத் தேர்தல் பல பாடங்களைப் படிப்பித்தது. ஒன்று, நமது வாக்காளர்கள் மௌனப் புரட்சியாளர்கள். அரசியல்வாதிகள் பொதுவாகவும், ஆளும் கட்சியினர் குறிப்பாகவும், ஐந்து ஆண்டுக் காலத்தில் என்னவெல்லாம் ஆட்டம் ஆடினாலும், மறுபடியும் தங்களிடம்தான் வரவேண்டும். அப்போது அவர்களுக்குச் சரியான பாடம் படிப்பித்துக் கொள்வோம்.
அதேசமயம், அந்தத் தேர்தலிலும் சரி, பிற்காலத் தேர்தல்களிலும் சரி, வெற்றிபெற்ற கட்சிகளின் தேர்தல்கால வெற்றி ஊர்வலங்களில் வாக்களித்த மக்களிப்பின் பங்களிப்பு சுத்தமாக இல்லை. அவற்றை சுற்றிநின்று வேடிக்கை பார்க்கக்கூட மக்கள் தயாராக இல்லை. இன்னும் சொல்லப்போனால், அத்ததைய வெற்றி ஊர்வலங்களால் தாங்கள் அடையும் பாதிப்புகளை தங்கள் முகங்களில் மக்கள் வெளிப்படையாகவே தாங்கிச் சென்றனர், செல்கின்றனர்.
பிரச்சினைகளின் முக்கியத்துவம்
இதுபோன்றே அல்லது இதைவிட முக்கியமான ஒரு வாக்காளர் நிலைப்பாடும், 1996ம் ஆண்டுத் தேர்தலில் வெளிப்பாடானது. குறிப்பாக, எம்ஜிஆர் காலத்துக்குப்பின்னர், தமிழ்நாட்டின் புதிய தலைமுறை வாக்காளர்கள் அதிகப்படியான எண்ணிக்கைகளில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும், தலைவர்களுக்கும் தங்களை அடகு வைத்துவிடவில்லை. மாறாக, ஒவ்வொரு தேர்தலிலும் அவ்வப்போதைய பிரச்சினைகளின் முக்கியத்துவத்தைப் பொறுத்தே அவர்கள் வாக்களித்தனர்.
இதன் காரணமாகவே, ஆளும் திமுக, ‘டான்சி ஊழல்’ குறித்து எல்லாம் கரடியாகக் கத்தியும், 2001ம் ஆண்டு, தமிழ்நாட்டு மக்கள் அஇஅதிமுக அணியையே ஆட்சிக்குக் கொண்டுவந்தனர். அதுபோன்றே, 2011ம் ஆண்டு, மறக்கடிக்கப்பட்ட அஇஅதிமுக-வுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளைவிட, நாடு தழுவிய 2-ஜி ஊழல் தமிழ்நாட்டின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்துவிட்டதாக அவர்கள் கருதினர்.
இடைப்பட்ட காலத்தில், 2004 மற்றும் 2009 மக்களவை மற்றும் 2006 சட்டப்பேரவைத் தேர்தல்களில் திமுக அணியையே வெற்றிபெற வைத்தனர். ‘இலங்கை இனப்போர்’ உச்சகட்டத்தில் இருந்த 2009ம் ஆண்டுத் தேர்தலில், தமிழ்நாடு, உள்நாட்டு அரசியல் பிரச்சினைகளை முன்வைத்தே வாக்களித்தது. காரணம் எதுவாயினும், விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்த ஆதரவுக் கட்சிகளும், தலைவர்களும் அந்தத் தேர்தலில் வெற்றி பெறவில்லை.
இன்னும் சொல்லப்போனால், எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில்கூட, தமிழ்நாட்டு மக்கள், தங்கள் மனதில் தெளிவாகவே இருந்தனர். அதனால்தான், மாநிலத்தில் நல்லாட்சி கொடுத்துக் கொண்டிருந்த வேளையிலும், அஇஅதிமுக, 1980ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு எதிராக படுதோல்வியைத் தழுவியது. ஆனால், ஆறு மாதங்கள்சென்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், தமிழ்நாட்டு வாக்காளர்கள், எம்ஜிஆர்-ஐ முதல்வராகத் தேர்ந்தெடுத்தார்கள்.
கடந்த தொண்ணூறுகளில் இருந்தே, தமிழ்நாட்டில், கட்சிசாராத வாக்காளர்களே அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அன்று, சுமார் 40-45 சதவிகித வாக்காளர்கள் ‘ஊசலாடும் வாக்காளர்கள்’ பட்டியலில் இடம் பிடித்திருந்தனர். தற்போதைய காலகட்டத்தில், அந்த எண்ணிக்கை 25-35 சதவிகிதம் வரை இருக்கும் என்று கருதலாம். இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், இந்த உண்மையை சில கருத்துக் கணிப்புகள் இப்போதுதான் கண்டறியத் தொடங்கியுள்ளன.
சமூக வலைதளம் சார்ந்திருக்கும் அவர்களில் ஒரு முக்கிய சாரார், அரசியல்பற்றி தங்கள் முடிவுகளை தெளிவாகவே எடுத்துள்ளனர். ஆனால், அதுகுறித்து அனல் பறக்கும் விவாதங்களில் அவர்கள் ஈடுபடுவதில்லை. அவ்வாறு செய்பவர்கள், பெரும்பாலும் கட்சி சார்ந்தவர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் விளம்பர ஏஜன்சிகளில் பணிபுரிவோர் எனலாம்.
‘எதிர்மறை வாக்காளர்கள்’
இந்த ‘ஊசலாடும் வாக்காளர்கள்’ எண்ணிக்கையில், ‘எதிர்மறை வாக்காளர்கள்’ சிலசமயம் அடங்குவார்கள்.முக்கிய அரசியல் கட்சிகளை நம்பாமலும், கடைசிவரை ஊசலாடிக் கொண்டே முக்கியக் கட்சிகளில் ஏதாவது ஒன்றுக்கு வாக்களிக்காதவர்களும் இவர்களில் அடங்குவர். சமகால அரசு மற்றும் அரசியல் தாக்கம் அதிகமாகும் காலகட்டங்களில் மட்டும் இவர்கள் கட்சிசார்ந்து வாக்களிப்பார்கள்.
நாடு சுதந்திரம் அடைந்த காலம்தொட்டு, இத்தகைய ‘எதிர்மறை வாக்காளர்கள்’ தமிழ்நாட்டில் இருந்தே வந்துள்ளனர். சுமார், பத்து சதவிகித வாக்களர்களை உள்ளடக்கிய இந்த சாரார், ஏதாவது மாறுதலாகச் செய்யவேண்டுமென்றோ அல்லது புதிதாகச் செய்யவேண்டும் என்ற உள்ளுணர்வால் உந்தப்படுகிறார்கள் எனலாம்.
முதலாவது பொதுத் தேர்தலில், காங்கிரஸ் மற்றும் அதற்கு அன்றைய மாற்றான ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட் கட்சிகளை நம்பாமல், சிறு கட்சிகளுக்கு இந்த சாரார் வாக்களித்தனர். அந்தத் தேர்தலில் குறிப்பாக, வட மாவட்டங்களில் வன்னியர் சமுதாயம் சார்ந்த கட்சிகளுக்கு இவர்கள் வாக்கு சென்றது. அந்த இரு கட்சிகளும் ஆளும் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானபின்னர், அந்த வாக்குகள் 1957ம் ஆண்டு தேர்தலில் முதன்முதலில் களம் கண்ட திமுக-வுக்குச் சென்றது எனலாம்.
அறுபதுகளில் திமுக வெற்றிகளுக்கும், எழுபதுகளில் அது புளித்துப்போய், எம்ஜிஆர்-அ இஅதிமுக வெற்றிகளுக்கும் சுமார், பத்து சதவிகித வாக்குகள் முகாந்திரமாயின. எம்ஜிஆர் காலத்துக்குப்பின்னர், ஜா-அணி மற்றும் சிவாஜி கணேசன் கட்சி கூட்டணிக்கு இந்த வாக்கு தஞ்சம் ஆகின. ராஜீவ் காந்தி மரணத்துக்கு அப்பால் சென்று, பாமக, 1991ம் ஆண்டுத் தேர்தலில் கணிசமான வாக்கு பெற்றதும் இதனால்தான். அதோடு, ஜெ-எதிர் அலைக்கும் எதிராக, மதிமுக-வும் 1996ம் ஆண்டு இந்த வாக்குகளில் பங்கெடுத்தது.
பின்னர், 1999ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் மூப்பனார் அணியும், 2006-ம் ஆண்டு விஜய்காந்த்-தின் தேமுதிக பெற்ற வாக்குகளும் இதுவே. இன்னும் சொல்லப்போனால், முன்பு கூறப்பட்ட பிற கட்சிகளின் வாக்கு சதவிகிதமும் பின்னர் குறைந்தமைக்கும் இந்த ‘எதிர்மறை வாக்காளர்கள்’ தொடர்ந்து எதிர்மறையாகவே வாக்களித்தமையால்தான்.
சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்காமல் இருந்தால் மட்டுமே, இவர்களுடைய வாக்குகள் அந்தச் சிறிய கட்சிகளுக்கு போய்ச் சேரும் என்று கூறலாம். எப்போது, அந்த சிறிய கட்சிகள் தங்களது தனித்தன்மையை இழக்கிறதோ அல்லது மக்களின் நம்பிக்கையை இழக்கத் தொடங்குகிறதோ, அப்போதே இந்த வாக்காளர்கள் ‘அடுத்தது எவன் கிடைப்பான், ஆதரிப்பதற்கு?’ என்று தேடத் தொடங்கிவிடுவார்கள்.இப்போது புரிகிறதா! ஏன், விஜய்காந்த்தின் வாக்குவங்கி குறைந்துவிட்டது என, பிற கட்சிகள் கூறுவதற்கான காரணம்?
(மூத்த பத்திரிகையாளர் மற்றும் அரசியல் நோக்கரான கட்டுரை ஆசிரியர், தற்போது அப்சர்வர் சர்ச் பௌண்டேஷன், சென்னை கிளையின் இயக்குநராகப் பணிபுரிந்து வருகிறார்)