ADVERTISEMENT

ஜெயலலிதா நினைவிடம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

Published On:

| By Balaji

ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு பணத்தில் நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 3) உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, 50 கோடி ரூபாய் செலவில் நினைவிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் தேசிய மக்கள் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

ADVERTISEMENT

அந்த மனுவில், “சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவிற்கு, அரசு பணத்தில் நினைவிடம் அமைக்க கூடாது.

மேலும், மக்களின் வரிப் பணத்தை பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகள் ஏற்படுத்துவது உள்ளிட்ட முதன்மையான பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டுமே தவிர, ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு நினைவிடம் அமைக்க கூடாது எனவும், அப்படி நினைவிடம் அமைப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே மெரினாவில் நினைவிடம் அமைப்பது தொடர்பான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டதால் இந்த வழக்கை தொடுத்துள்ளதாக” மனுவில் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த வழக்கு நீதிபதிகள் குலுவாடி ஜி ரமேஷ், கே.கல்யாணசுந்தரம் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக வரும் 18ஆம் தேதி தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share