ஒரு தொழில்நகரம் உருவாக்கப்படும்போதெல்லாம் அங்கு மக்கள் குடியேற்றம் நடைபெறும். மக்கள் தொகை அதிகரிக்க, அதிகரிக்க வாகன நெரிசலும் அதிகரிக்கும். குறிப்பாக பைக். போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட சைக்கிள்களெல்லாம் ஒரு சக்கரத்தை பறிகொடுத்துவிட்டு, உடற்பயிற்சி சாதனங்களாக ஜிம், ஃபிட்னஸ் சென்டர்களின் ஓரங்களில் ஓய்வெடுக்கின்றன. தவிர்க்கமுடியாத போக்குவரத்துச் சாதனமாக மாறிவிட்ட பைக்குகள் ஏதோ ஒன்று என்றரீதியில் வாங்கப்படுபவை அல்ல. 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மைலேஜ், 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஸ்டைல், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேகம் என்றரீதியாக பிரிக்கப்பட்டு வாங்கப்படுகின்றன. சமயங்களில், இந்த ஆர்டர் மாறலாம். 35 வயதைக் கடந்தவர்கள் வேகமான பைக் வாங்குவார்கள். ஆனால், அந்த பைக்கிலும் வேகமாகச் செல்லாமல் மெதுவாகச் சென்று ஒரு தோரணையுடன் இறங்குவதை மரியாதையாக நினைக்கும் பக்குவம்வந்தவர்களாக இருப்பார்கள். மக்களின் மனது எப்படி இருக்கிறது? அவர்களுக்கு என்ன தேவை? என்பதை சரியாகக் கணித்து, தங்களது மோட்டார் பைக்கை தயாரித்து வெளியிடுவதில்தான் ஒவ்வொரு பைக் கம்பெனியின் வெற்றியும் தோல்வியும் இருக்கிறது. மோட்டார் கம்பெனி நிறுவனங்கள் எந்தளவுக்கு மக்களின் மனப்போக்கை கவனிக்கிறார்கள் என்றால், மழைக்காலம் தொடங்கும்போது ஸ்கூட்டர் மாடல் பைக்குகளை அறிமுகப்படுத்தி ‘இதிலேயே ஈரமான ரெயின்கோட், ஹெல்மெட் எல்லாம் வைத்துவிட்டு அலுவலகத்துக்கு இயல்பாகச் செல்லலாம்’ என்று விளம்பரப்படுத்துவார்கள். இது ஒரு உதாரணம். இதோ வருடத்தின் தொடக்கத்தில் மார்க்கெட்டுக்கு கொண்டுவராமல் நான்கு புதிய, ஸ்டைலான, வேகமான பைக்குகளை இளைஞர்கள் கல்லூரியை முடித்துவிட்டு வேலைக்குச்சேர்ந்த மூன்று மாதங்கள் கழித்து அதாவது செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 4 பைக்குகளை அறிமுகப்படுத்துகிறது பஜாஜ் நிறுவனம்.
பஜாஜ் பல்சர் 200cc பைக்கை பல்சர் 200NS என்று சிலவருடங்களுக்கு முன்பு ரிலீஸ் செய்து, மார்கெட்டைக் கைப்பற்றியதைப்போலவே, 150cc பைக்கிலும் 150NS என்று இந்த வருட இறுதியில் கொண்டுவருகிறார்கள். அதிக CC பைக் ஓட்டினால், வேகமாகச் சென்று விபத்து ஏற்பட்டுவிடக்கூடும் என்று குறைந்த CCயில் பைக் வாங்கித்தரும் பெற்றோர்கள், சமீபத்திய அதிக விபத்துகளின் காரணமாக அதிகமாகிவிட்டார்கள். ‘குறைந்த CC, மொக்கையான ஸ்டைலில் எனக்கு பைக்கே வேண்டாம்’ என்று, இளம் ரத்தங்கள் முடிவெடுத்துவிடுவதை உணர்ந்து, அட்டகாசமான 200NS (Naked Sport) ஸ்டைலில் 150CC பைக்கை ரிலீஸ் செய்கிறார்கள். 149.5CC-யாக இருந்தாலும், 16.8bhpயில் சிறப்பாகச் செயல்படக்கூடிய பைக் 150CC தான். 220CC பைக் வரும்வரை சாலைகளில் சீறிப்பாய்ந்த பைக் 150CC என்பது குறிப்பிடத்தக்கது. 160CC-யில் சீறிப்பாய்ந்த Apache பைக்குகளுக்கு சமமாகச் சென்று, தனது சிறப்பை நிரூபித்த 150CC பல்சர் பைக் 13Nm Torqueஉடன் 2016 இறுதியில், ரூ 70,000க்கு விலை நிர்ணயிக்கப்பட்டு வெளியாகிறது. இதேபோல, Bajaj Pulsar CS400 1.6 லட்சத்துக்கு மார்க்கெட்டை செப்டம்பரில் ஆக்கிரமிக்கிறது.
லட்சங்களில் பைக் வாங்குவது தற்போது சாதாரணமாகிவிட்டது. பேங் லோன், குறைந்த வட்டி EMI என்று சாலையில் செல்பவர்களையெல்லாம் ஷோரூமுக்குள் இழுத்து பைக் வாங்க வைத்துவிடுகிறார்கள். 373CCயில் fuel injected இஞ்சின், 40 bhp சக்தி என பெர்ஃபாமென்ஸில் மட்டுமல்ல; முரட்டு லுக், LED ஹெட்லைட், இரண்டு ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம் என லுக்கிலும் மிரட்டுகிறது Pulsar CS400. சமீபத்தில், Pulsar CS400 டெஸ்ட்-டிரைவ் செய்யப்பட்ட போது எடுத்த வீடியோ யூடியூபில் வெளியானது. 200CC KTM DUKE 200cc பைக்கை சொற்ப நொடிகளில் பின்னுக்குத் தள்ளியது Pulsar CS400. இரண்டு பைக்குகளுக்கும் உள்ள வேறுபாடு அதிகமாக இருந்தாலும், பல்சரின் பிக்-அப் வேகம், அடுத்தடுத்த கியர்களுக்கு அந்த பைக் கொடுத்த அவுட்புட் என, ஸ்போர்ட்ஸ் பைக்குகள்மீது தீராக்காதல் கொண்டவர்கள் Pulsar CS400க்காக காத்திருக்கின்றனர். 2014ல் நடைபெற்ற Auto Expoவில் அறிமுகப்படுத்தப்பட்ட Pulsar CS400க்கு இரண்டு வருடங்களாகக் காத்திருந்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை என நினைக்க வைத்திருக்கிறது Pulsar CS400-ன் செயல்பாடு. இருந்தாலும், 1.6 லட்சம் கொடுக்கணுமா? என்று யோசிப்பவர்களுக்காகவே பஜாஜ் வெளியிடும் இன்னொரு பைக் Bajaj Pulsar RS400. வெறும் 1.8 லட்சங்கள் என இதன் விலை சொல்லப்படுகிறது.
இரண்டு பைக்குகளுக்கும் செயல்பாட்டளவில் எந்த மாற்றமும் இல்லை. இஞ்சின், சிலிண்டர், வால்வ் என எல்லாம் ஒரே மாதிரிதான். ஆனால் Bajaj Pulsar RS400 பைக்கில் Metzeler SPORTEC M5 டயர் பயன்படுத்தப்படுகிறது. ரேஸிங் ட்ராக்கில் பயன்படுத்தப்படும் இந்த டயரைப் பொருத்திய பைக் அற்புதமான ஹேண்ட்லிங் கொண்டிருக்கிறது. போர்ச்சுக்கல் ரேஸிங் ட்ராக்கில் இந்த டயர் பொருத்தி டெஸ்ட் டிரைவ் செய்தபோது, காய்ந்த தார்ச் சாலையில் சென்றபோது இருந்த ஹேண்ட்லிங்கும், வேகமும் ஈர தார்ச் சாலையில் செல்லும்போதும் கிடைத்து பெரிதும் பாராட்டப்பட்டது. அதனால், இந்த டயரை Pulsar RS400 பைக்கில் பயன்படுத்தியிருக்கிறார்கள். ரேஸிங் டிராக்குக்கு ஓ.கே. நம்ம இந்திய சாலைக்கு பொருந்துமா? என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்கிறது. நியாயமான கேள்விதான். ஆனால் நமக்குத் தெரிவது வண்டியை உருவாக்குபவர்களுக்கோ, விற்பனைசெய்ய அனுமதிப்பவர்களுக்கோ தெரியவில்லையே. நல்ல சாலைகள் இருந்தால் இந்த பைக்குகள் அதிகம் பயன்படும். 5 சிக்னலில் 10 முறை ஏற்படும் இந்திய சாலைகளின் டிராஃபிக்கில் 20 முறை கிளட்ச் பிடித்துவிட்டதும் 1 லிட்டர் பெட்ரோல் இந்த பைக்குகளில் காலியாகிவிடும். இதுபோன்ற மக்களின் பிரச்னைகளைப்பற்றி எண்ணாமல், தங்களுக்குள் இருக்கும் போட்டிகளை மட்டும் மனதில்கொண்டு பைக்குகளை உருவாக்கிவரும் மோட்டார் கம்பெனிகளை என்ன செய்வது?
-சிவா









