மும்பை காவல்துறைக்கு ஏப்ரல் 15 சனிக்கிழமையன்று பெண் ஒருவர் அனுப்பிய மின்னஞ்சலில், 6 பேர் கொண்ட ஒரு குழுவினர், சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களில் இருந்து விமானங்களைக் கடத்தப் போவதகாகப் பேசிக்கொண்டதை நான் கேட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். மும்பை காவல்துறை இந்த மின்னஞ்சல் தகவலை புலனாய்வு அமைப்புகளுடன் பகிர்ந்துகொண்டு ஆலோசனை நடத்தியது. இதையடுத்து ஏப்ரல் 16 ஞாயிற்றுக்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, மும்பை, ஹைதராபாத் ஆகிய விமான நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்களும் மோப்ப நாய்களும் விமான நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களுக்கு வரும் பயணிகள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள். அதே போல, விமான நிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகிறது. விமானப் பயணிகள் கடைசி நிமிடத்தில் வருவதைத் தவிர்க்க வேண்டும். பயணிகள் இந்த பாதுகாப்பு சோதனைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று விமான நிலைய நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. பாதுகாப்பு கருதி ஏப்ரல் 16 ஞாயிற்றுக்கிழமை மட்டும் விமானநிலையத்தில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான நபர்களின் நடமாட்டம் உள்ளதா என்று கண்காணிப்புக் கேமிரா மற்றும் ரோந்து பணிகள் மூலம் போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதே போல மும்பை, ஹைதராபாத் விமான நிலையங்களிலும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
