“அடுப்புக்கு மேலதான் புத்தக காட்சி அரங்கம் அமைச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன், அனல் தாங்க முடியல”
“என்ன செய்ய…செல்ஃபி எடுத்துத்தான் கண்காட்சியில் நேரத்தை கடத்த வேண்டியிருக்கு…” -புத்தக காட்சி அரங்கு குறித்தும், வாசகர்களே இல்லாமல் தவிப்பது குறித்தும் ஸ்டேடஸ்கள், கமெண்டுகள் பறப்பது அநேகமாக இந்த புத்தகக் காட்சியில்தான்.
நேரில் சென்று, வழக்கமான நல விசாரிப்புகள் முடிந்த பிறகு சேல் பரவால்லயா என்று விசாரித்தால், ஒருவர் “ஏன் நீ ஒரு பத்தாயிரத்துக்கு புக் வாங்குறது” என்று நிதானமாகக் கூறுகிறார். இன்னொருவரோ எரிச்சல் தாங்க முடியாம வீட்ல இருந்து ஃபேன எடுத்துட்டு வந்து வச்சிருக்கேன் தோழா என்கிறார். சில ‘அம்மா’ மின்விசிறிகளைக் கூட பார்க்க முடிந்தது.
நான் போனது வார இறுதி நாளான சனிக்கிழமை(4 ஆம் தேதி) வழக்கமாக ஜனவரி மாதம் நடக்கும் புத்தக காட்சியில் வார நாட்களில் வரும் கூட்டம் கூட அன்று இல்லை. ஆனால்‘இதுவே பரவாயில்லங்க’ என்று பதிப்பாளர்கள் சொல்லும் அளவுக்குதான் வாசகர்களின் வருகை இருக்கிறது. தமிழகத்தையே புரட்டிப் போட்ட சென்னை வெள்ளத்தின் காரணமாக தள்ளிப் போய்க் கொண்டே இருந்த தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் நடத்தும் 39-வது சென்னை புத்தகக் கண்காட்சி கடந்த 1 ஆம் தேதி தீவுத்திடலில் தொடங்கியது.
புத்தகக்காட்சி குறித்து கிழக்கு பதிப்பகத்தின் பதிப்பாசிரியரும், பதிப்பாளருமான பத்ரி சேஷாத்திரி தொலைபேசியில்(3 ஆம் தேதி மாலை) உரையாடுகையில், ‘அதிகாரப்பூர்வமாக இது குறித்து பபாசியின் செயலாளர்தான் சொல்ல முடியும். ஒரு பதிப்பாளராக மட்டும் என்னுடைய கருத்துக்களை நான் பகிர்ந்து கொள்கிறேன்’ என்றவர், ஜூன் மாதத்தில் புத்தக காட்சி நடப்பது குறித்தும், இன்னும் ஆறு மாதத்தில் அடுத்த புத்தக காட்சி நடக்குமா? நடக்கும் என்றால் அதற்கான வரவேற்பு எப்படி இருக்கும் என்று கேட்டதற்கு, “அடுத்த புத்தகக் காட்சி ஜனவரியில் எப்படியும் நடந்து விடும். தற்போது நடப்பதை விட்டுப்போன புத்தகக் காட்சிக்கான மாற்றாகவே கருத வேண்டும். மேலும் ஒரு விநோதமான சூழலில்தானே இந்த புத்தகக் கண்காட்சி ஆரம்பித்திருக்கிறது.
ஜனவரி மாதம் புத்தகக் காட்சியை நடத்த முடியாமல் போனவுடன் பிப்ரவரியில் நடத்தலாம் என்று திட்டமிட்டோம், மார்ச் மாதம் தேர்வுக்காலம் என்பதால் தயங்கினோம். ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தேர்தலுக்கு முன்பாக நடத்தி விட வேண்டும் என்றும் பலர் தெரிவித்தார்கள். ஆனால், சரியான இடம் கிடைக்காததாலே இந்த தாமதம் ஏற்பட்டது. நந்தம்பாக்கம் டிரேட் சென்டரை முயற்சி செய்து பார்த்தோம். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தவும் முயற்சித்துப் பார்த்தோம். ஆனால் எங்குமே இடங்கள் கிடைக்காததால்தான் தீவுத்திடலில் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஜனவரில வர்ற அளவுக்கு இந்த முறை கூட்டம் வரும்னு நான் நினைக்கல. விற்பனை எப்படி இருக்கும் என்பதை இவ்வளவு சீக்கிரம் சொல்ல முடியாது. முதலில் பொங்கல் சமயத்தில் சேர்ந்தாற்போல் விடுமுறை வரும் என்பதால் பெரும்பாலான மக்கள் வருவார்கள். இரண்டாவது வெதர், ஜனவரி மாதம் இருந்த சாதகமான பருவநிலை இப்போது இல்லை. ஜூன் மாதம் யாரும் வெளியே வர மாட்டார்கள். புத்தகக்காட்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்கள் நன்றாக இருந்தது. இன்றைக்கு(ஜூன் 3) ஆம் தேதி வெயில் அதிகமாக இருக்கிறது. இதற்கிடையில் மழை வேறு வரும் என்று சொல்கிறார்கள். விநோதமான நேரம். பள்ளி, கல்லூரிகள் தொடங்கி விட்டதால் அவற்றின் தாக்கமும் எப்படி இருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும். காயிதேமில்லத், செயின்ட் ஜோசப், பச்சையப்பா கல்லூரி, நந்தனம் என்று ஒவ்வொரு முறை இடம் மாற்றும் போதும் விற்பனை குறைந்ததில்லை. ஆனால் தீவுத்திடலில் முதல் முறையாக இப்போதுதான் புத்தக காட்சி நடக்கிறது.
ஒரு புத்தக காட்சியை நிர்ணயிப்பது, முதல் சனி ஞாயிறு தான். என்னைப் பொறுத்தவரை சீரியசான வாசகர்கள் நிச்சயம் வந்து விடுவார்கள். வெளிநாடுகளில் இருப்பவர்கள் இந்த முறை வருவது சிரமம். சாதாரண வாசகர்கள் பத்திரிகைகள் தொலைக்காட்சிகளைப் பார்த்து எந்தளவுக்கு வருவார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் சீரியஸ் விசிட்டர்ஸ் ஓரளவுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம். விற்பனை நிச்சயமாகக் குறையும். சிலருக்கு வேண்டுமானால் ஜனவரியை விட அதிகமாக விற்பனை நடக்கலாம். ஒட்டு மொத்தமாக நீங்கள் கணக்கில் எடுத்தால் விற்பனை குறையத்தான் செய்யும். அது 20 முதல் 25 சதவீதம் வரை இருந்தால் ஓ.ஏ. கொஞ்சம் ஒரு மாதிரி பொழச்சுக்குவோம். டிபிகல் ஜனவரி புக் ஃபேர்ல 10 லட்சம் வரக்கூடிய பதிப்பாளருக்கு 7 லட்சம் வந்தால் ஓகே. 2- 3 லட்சம் வந்தால் பிரச்சனைதான். அதேபோல் ஒரு லட்சம் வரக்கூடிய ஒரு பதிப்பாளருக்கு ஓரளவுக்கு நடந்து விடும்.
ஜனவரி மாதம் ராயப்பேட்டையில் தமிழ்நூல் விற்பனை மேம்பாட்டுக் குழுமத்துடன் இணைந்து திராவிடர் கழகத்தினர் நடத்திய புத்தக காட்சி குறித்து கேட்ட போது, “ வழக்கமாக இதை ஏப்ரல் மாதம் நடத்துவார்கள். பீச்சுக்கு எதிரே, பெரியார் திடல் என்று பல்வேறு இடத்தில் நடத்துவார்கள். ராயப்பேட்டையில் இது தான் முதல் முறை. மேலும், பொங்கல் சமயத்தில் மெயின் புக் ஃபேர் நடக்காது. இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு செய்தார்கள். தங்களுக்கு கிடைத்த அந்த குறைவான நேரத்தில் சிறப்பாகவே நடத்தினார்கள். ஆனால், அதில் நிறைய பேருக்கு இடம் கொடுக்க முடியவில்லை. இங்க(தீவுத்திடல்) 700 பேருக்கு ஸ்டால் கொடுக்க முடிந்தது. ஆனால் அங்கு 200-க்கும் குறைவாகத்தான் ஸ்டால் இருந்தது. அதே நேரம் வருமானமே இல்லாததற்கு அந்த புத்தகக் காட்சி பதிப்பாளர்களுக்கு வரப்பிரசாதம்தான்.
என்னைப் பொறுத்தவரை, சென்னையில் 3 மாதத்திற்கு ஒரு முறை வெவ்வேறு இடங்களை தேர்வு செய்து வருடத்திற்கு 4 புத்தக காட்சி நடத்தலாம். ஜனவரி மாதத்தில் பபாசி பெரிய அளவில் இதை செய்வதால் அதை யாரும் பீட் பண்ண முடியாது. ஏப்ரல் மாதம் வெயில் அதிகமாக இருந்தாலும் ராயப்பேட்டை போன்ற இடங்களில் நடத்தலாம் . செப்டம்பர், அக்டோபர் மாதிரி சமயத்தில் தாம்பரம், ஆவடி அம்பத்தூர் பக்கம் கூட ஒரு புத்தகக் காட்சி நடத்தலாம். பபாசி இதை கையில் எடுப்பது கடினமாக இருக்கும். எனவே வேறு யாராவது இதை செய்தால் புவியியல் ரீதியாக சென்னை புத்தகக் காட்சி இன்னும் பரவலாக சென்றடையும்” என்றார்.
அடுத்த ஆறு மாதத்தில் அடுத்த புத்தக காட்சி வருவதால் அப்போது விற்பனை பாதிக்கப்படுமா? என்ற கேள்விக்கு, வழக்கத்தை விட 10 சதவீதம் விற்பனை குறைவாக இருக்கும்” என்பதே அவரது பதிலாக இருந்தது.
தற்போது தீவுத்திடலில் வெயிலுக்கான மாற்று ஏற்பாடுகள் ஏதும் செய்யப்படாததால் பதிப்பாளர்கள், பணியாளர்கள் அவதிப்படுவது குறித்துக் கேட்டபோது, “வேற என்ன ஆப்ஷன் இருக்கு. சென்னையில் ரெண்டு மாசம் மழை, ரெண்டு மாசம் குளிர். மீதமுள்ள 8 மாசம் வெயில். சபிக்கப்பட ஒரு இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நந்தம்பாக்கம் டிரேட் சென்டர் போயிருக்கலாம். ஆனால் அங்கு நடுவில் 2 நாள் வேறு விழா நடப்பதால் எங்களுக்கு இடம் கிடைக்கவில்லை. இங்கு ஏசி போட்டா அது இன்னும் பயங்கரமா போய்டும், அந்த பணத்த கொடுக்கவும் பதிப்பாளர்கள் ஒத்துக்க மாட்டாங்க. எனவே, வேறு வழியில்லாமல்தான் இங்கு நடத்த வேண்டியிருக்கிறது. இந்த முறை ஸ்டால் போடாம யாரும் இருக்க மாட்டாங்க. ஏன்னா, ஏற்கனவே வெள்ளத்துனால ஸ்டாக் பாதிப்பு மட்டுமில்லாம ரெகுலர் புக் ஷாப் ரெவன்யூவே அடி வாங்கிடுச்சு. யாருமே இத விட மாட்டாங்க. சொல்லப் போன நிறைய பேர ரிஜக்ட் பண்ண வேண்டியிருந்தது.
உயிர்மை பதிப்பகத்தின் நிறுவனரும் பிரபல விமர்சகருமான மனுஷ்யபுத்திரனை, மே 4 ஆம் தேதி இரவு புத்தக காட்சியில் உள்ள உயிர்மை அரங்கில் சந்தித்து பேசிய போது, “என்னைப் பொறுத்தவரை புத்தகக் காட்சியில் சின்ன பதிப்பாளர்களுக்கு சலுகை விலையில் ஸ்டால்களைக் கொடுத்திருக்கலாம். பழைய புத்தகங்களை புத்தக காட்சியில் அனுமதிக்க வேண்டும். இந்த முறை கூட்டம் இருக்காது என்பது முன்னரே தெரியும் என்பதால் ஸ்டால்களைக் குறைத்திருக்கலாம். பள்ளி கல்லூரிகளை ஒருங்கிணைத்து புத்தக கண்காட்சியை இன்னும் பரவலாக கொண்டு சென்றிருக்கலாம். மீடியாக்களை தேடிப்போய் அப்ரோச் செய்திருக்கலாம். புத்தகக் காட்சி குறித்த விளம்பரங்கள் பெரிய அளவில் மக்களைச் சென்றடையவில்லை என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. பலருக்கு புத்தகக் காட்சி நடப்பதே தெரியவில்லை.
இந்த முறை அதிக விளம்பரமும் செய்யப்படவில்லை. இதனால் மக்களுக்கு இந்த புத்தகல் காட்சி நடப்பது தெரியாததால் சாதாரண பார்வையாளர்கள் குறைந்துவிட்டனர். உயிர்மையை பொறுத்தவரை மொத்தம் 45 புதிய புத்தகங்களைக் கொண்டு வந்திருக்கிறோம். கடந்த 2 மாதங்களில் 12 புத்தக வெளியீட்டு நிகழ்வுகளை நடத்தியிருக்கிறோம். ஆனால், சிறிய பதிப்பாளர்களால் புதிய புத்தகங்களை கொண்டு வர முடியவில்லை. இதனால் எப்போதும் பார்க்கும் புத்தகங்களையே, இந்த புத்தகக் காட்சியிலும் பார்ப்பதால் வாசகர்கள் ஏமாற்றமடைகின்றனர்” என்றார்.
கருப்பு பிரதிகள் பதிப்பகத்தின் பதிப்பாசிரியரான நீலகண்டனுடன் இன்று(05.06.2016) காலை தொலைபேசியில் உரையாடுகையில், “இன்றைய சூழலில் 2 லட்சம் பிசினஸ் பண்ணா போதும்னு நினைக்குற அளவுக்குதான் பதிப்பாளர்களோட மனநிலை இருக்கு. வாசகர்களை சந்திக்க முடியவில்லை. அதனால் கிடைச்ச இந்த வாய்ப்பை பயன்படுத்ததான் எல்லாரும் நினைப்பாங்க. நானும் அப்படித்தான் இங்க வந்து உக்காந்துருக்கேன். இது நல்ல முயற்சிதான் அதில் தவறு எதுவும் இல்லை. வருஷத்துக்கு 2 கண்காட்சி கூட நடத்தலாம்.
ஆனால், கல்வி, ஜோசியம் சமையலை தவிர்த்து, இலக்கியம், புனைவு, அபுனைவு, அரசியல் புத்தகங்களின் பதிப்பாளர்கள் எல்லாம் பயங்கரமான பொருளாதார நெருக்கடியில் இருக்கிறார்கள். வெயிலால் வெளியே வரவே பலர் யோசிக்கிறாங்க. தீவுத்திடலுக்கு வண்டியில் வந்து போவதற்கே சிரமாக இருக்கிறது. கடற்கரை மணல்ல ஓட்ற மாதிரி இருப்பதால் நிறைய வண்டிகள் மணலில் மாட்டி விழுந்து விடுகிறது.. எனக்கே இரண்டு முறை இப்படி ஸ்லிப் ஆகி இருக்கிறது. ஒருங்கிணைப்பில் சில சிக்கல்கள் இருக்கிறது. புது புத்தகங்கள் வராதது பதிப்பாளர்களுக்கு பலவீனமாகி போய்விட்டது. ஜனவரியில் சென்னை மக்களும் சரி, சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் சரி பொங்கலோட சேர்ந்து புத்தகமும் வாங்க பழகிவிட்டார்கள். அதனால், அடுத்த முறை புத்தகங்கள் விற்பனை கூடத்தான் செய்யும். இந்த புத்தகக் கண்காட்சி நடக்குமா நடக்காதா? விற்பனை எப்படி இருக்கும்? என பதிப்பாளர்கள் தயக்கத்தோடே இந்த புத்தக கண்காட்சியை எதிர் கொண்டார்கள். வாசகர்கள் தரப்பில் பள்ளி திறக்கும் காலம் என்பதும் பிரச்சனை. ஜனவரியில் புத்தகம் வாங்கும் மன நிலையை 30 வருஷமா உருவாக்கியாச்சு. புத்தாண்டுக்கு விடிய விடிய புத்தக காட்சி நடத்தலாமா என்று பேசிய காலமும் உண்டுதானே. இடமாற்றம் ஒரு பிரச்சனையில்லை. உண்மையில் அரசோட ஒத்துழைப்பு இல்லை அதுதான் பிரச்சனை. தனி நபராக அரசுக்கு எதிராக கருத்து சொல்லலாம். ஆனால் ஒரு அமைப்பாக அரசை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் இருப்பதுதான் இங்கு பிரச்சனை.
வம்சி பதிப்பகத்தைச் சேர்ந்தவரும் பபாசியின் உறுப்பினருமான ஷைலஜாவிடம் புத்தக காட்சி குறித்து தொலைபேசியில் பேசும் போது, “வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டதால் அவர்கள் துக்கத்தில் பங்கேற்க நினைத்தோம். விற்பனை குறைவாகத்தான் இருக்கிறது. வாசகர்கள் ஏமாற்றம் கொள்ளக் கூடாது என்பதால்தான் பணக்கஷ்டத்தையும் மீறி இதை நடத்துகிறோம். எவ்வளவு நன்றாக செய்தாலும் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இன்னும் அரங்குகளை முழுமையாகப் பார்க்கவில்லை. முடிந்தளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
