ADVERTISEMENT

சுயேச்சையாக போட்டி: அதிமுகவிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ நீக்கம்!

Published On:

| By Balaji

இடைத் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க ரூ.10 கோடி பேரம் பேசியதாக அதிமுக மீது அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ மார்கண்டேயன் குற்றம் சாட்டிய நிலையில், அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

விளாத்திகுளம் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் அதிருப்தியடைந்த அந்த தொகுதியின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மார்கண்டேயன் தனது செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து விலகினார். மேலும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

ADVERTISEMENT

விளாத்திகுளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சின்னப்பனை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிடும் மார்கண்டேயன், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகிறார். இந்த நிலையில் நேற்று நடந்த பிரச்சாரத்தின்போது மக்கள் மத்தியில் பேசிய மார்கண்டேயன், தேர்தலில் போட்டியிடாமல் இருக்க ரூ.10 கோடி பணம் தருகிறோம், தேர்தலுக்குப் பிறகு வாரியத் தலைவர் பதவி தருகிறோம், மாவட்டச் செயலாளர் பொறுப்பு தருகிறோம் என்று என்னிடம் விலைபேசிப் பார்த்தார்கள் என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்தப் பின்னணியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று (ஏப்ரல் 1) வெளியிட்ட அறிவிப்பில், “கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் விளாத்திகுளம் சட்டமன்ற இடைத் தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடுவதோடு வேட்பாளரையும் தலைமையையும் விமர்சித்து பேசிவரும் மார்கண்டேயன், இன்று முதல் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும் மார்கண்டேயனுக்கு தேர்தல் வேலை பார்த்ததாகக் கூறி தூத்துக்குடி மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் தெய்வேந்திரன், கோவில்பட்டி நகர முன்னாள் செயலாளர் சங்கரபாண்டியன் ஆகியோரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக மார்கண்டேயன் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share