சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு: முற்றுகை போராட்டம்!

By Balaji

|

Published on 31 Mar 2018, 12:00 AM

சுங்கச்சாவடி கட்டண உயர்வு தமிழகத்தில் 20 இடங்களில் இன்று (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது. இந்தக் கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு மாநில மணல் உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று முற்றுகை போராட்டம் நடத்தவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 5,000 கிலோமீட்டர் அளவிலான நெடுஞ்சாலைகள் தமிழகத்தில் உள்ளன. இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 46 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இவற்றைக் கடந்து செல்லும் வாகனங்களிடம் குறிப்பிடத்தகுந்த தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்தச் சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணங்களைத் திருத்தியமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அனுமதியளிக்கிறது.

ADVERTISEMENT

**20 சுங்கச்சாவடிகள்**

1992ஆம் ஆண்டு போடப்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ஆம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 22 சுங்கச்சாவடிகளில் கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. நடப்பாண்டில் முதற்கட்டமாகத் தமிழகத்தில் மீதமுள்ள 20 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

ADVERTISEMENT

கோவை கன்னியூர், திருத்தணி பட்டறை பெரும்புதூர், சூரப்பட்டு, வானகரம், விழுப்புரம் பரனூர், சேலம் ஆத்தூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி சாலைப்புதூர், வேலூர் பள்ளிகொண்டா, வாணியம்பாடி, நெல்லை எட்டூர் வட்டம், கப்பலூர், நாங்குனேரி, புதுக்கோட்டை, திருச்சி சிட்டம்பட்டி, மதுரை பூதக்குடி, சிவகங்கை லெம்பலாக்குடி, லட்சுமணப்பட்டி, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் சென்னசமுத்திரம் ஆகிய 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

**கட்டண உயர்வு**

ADVERTISEMENT

சுங்கக் கட்டணம் குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.20 வரையில் உயருகிறது. அதேபோல, மாதாந்திரக் கட்டணம் ரூ.100 வரையில் உயருகிறது. 52 கிலோமீட்டர் நீளமுள்ள சாலையில் ஒருமுறை செல்ல கார், ஜீப், வேன் ஆகியவற்றுக்கு ரூ.55இல் இருந்து ரூ.60 ஆக கட்டணம் உயர்த்தப்படுகிறது. இலகு ரக வர்த்தக வாகனம், இலகு ரக சரக்கு வாகனம், மினி பஸ் ஆகியவற்றுக்கு ரூ.90இல் இருந்து ரூ.95ஆக உயர்த்தப்பட உள்ளது.

லாரி, ஆம்னி பஸ்களுக்கு ரூ.190இல் இருந்து ரூ.195 ஆகவும் 3 ஆக்ஸில் வர்த்தக வாகனங்களுக்கு ரூ.205இல் இருந்து ரூ.215 ஆகவும் கனரக வாகனங்களுக்கு ரூ.295இல் இருந்து ரூ.305 ஆகவும் பெரிதாக்கப்பட்ட வாகனங்களுக்கு ரூ.360இல் இருந்து ரூ.375 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது.

**முற்றுகை போராட்டம்**

சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மாநில மணல் உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று காலை 10.30 மணியளவில் மதுரவாயல் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் தெரிவிப்பதாவது: “பரனூர், வானகரம் சுங்கச்சாவடிகளில் சாலைப் பராமரிப்பு உட்பட எவ்வித வசதிகளும் வாகன ஓட்டிகளுக்குச் செய்து தரவில்லை. இந்தச் சுங்கச்சாவடிகளை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் காலக்கெடு முடிவுற்ற சுங்கச்சாவடிகளில் இலவசமாகப் பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி மதுரவாயல் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தவுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel