சிறப்புப் பார்வை: வேளாண் துறையில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

Published On:

| By Balaji

ஸ்ரவ்ய வேமுரி

விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களை மேம்படுத்தும்விதமாக மத்திய விவசாயம் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் சார்பில் கடந்த மாதம் 21ஆம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நாட்டிலுள்ள 690 கேந்திராக்கள் மூலமாக விவசாயம் தொடர்பான பயிற்சி வகுப்புகள் எடுக்கப்பட உள்ளன. விவசாயத் தொழிலாளர்களுக்கு எடுக்கப்படும் இந்தப் பயிற்சி வகுப்புகள் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டு வேகத்தைத் தீவிரப்படுத்த முடியும் என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ளார்.

கிராமப்புறங்களில் விவசாயம் சார்புடைய தொழிற்சாலைகள் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளன. எனவே அங்கு வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது. கேந்திராக்கள் என்பது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் உருவாக்கப்பட்ட வேளாண் விரிவாக்க மையங்கள். மாவட்ட அளவில் இத்துடன் இணைந்த நிறுவனங்கள் விவசாயத்துக்கு பல்வேறு வகையிலும் உதவிகள் புரிந்துவருகின்றன. மேலும், இந்நிறுவனங்கள் மூலமாக விவசாயம் சார்பான செயல்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக நவீன விவசாயக் கருவிகளை விவசாயிகள் மத்தியில் அறிமுகப்படுத்துதல், பயிற்சி வகுப்புகள் நடத்துதல், விவசாயம் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்வுகள் ஆகியவற்றை நடத்திவருகின்றன.

ADVERTISEMENT

மத்திய அரசின் நடப்பு பட்ஜெட்டின் (2018-19) முக்கிய இலக்குகளில் ஒன்றாக விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களை வேளாண் துறையில் பயன்படுத்துவதால் மட்டுமே திறன் மேம்பாட்டை அதிகப்படுத்த முடியும். இதன் மூலமாகத்தான் விவசாய வருமானத்தை இரட்டிப்பாக்குவதைச் சாத்தியப்படுத்த முடியும். விவசாயத் துறையை மேம்படுத்தத் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதன்மூலம் இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்கலாம் என்றும் வேளாண் துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

**இந்தியாவில் விவசாயத் துறை**

ADVERTISEMENT

இந்தியப் பொருளாதாரத்தில் வேளாண் துறை முக்கியப் பங்கு வகிக்கும் அதேவேளையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் முக்கிய இடத்தில் உள்ளது. மேலும், இந்திய மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேருக்கு வாழ்வாதாரத்தையும் வழங்கிவருகிறது. ஆனால், சில ஆண்டுகளாக விவசாயத்தின் உள்நாட்டு உற்பத்தி சதவிகிதமானது தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. தற்போதைய உள்நாட்டு உற்பத்தி சதவிகிதம் 13.9 சதவிகிதமாக இருந்துவருகிறது.

ஆனால் 60களில் நம் உள்நாட்டு உற்பத்தி சதவிகிதமானது 50 சதவிகிதமாக இருந்தது என்பது கவனிக்கத்தக்கது. விவசாய உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டி மத்தியில் ஆட்சிக்கு வந்த அடுத்தடுத்த அரசுகளால் பல்வேறு சீர்திருத்த முறைகள் உருவாக்கப்பட்டன. ஆனாலும், அதில் சில முறைகள் மட்டும் நிதி ஆயோக்கால் செயல்படுத்தப்பட்டன.

ADVERTISEMENT

வேளாண் சந்தைப்படுத்துதலைச் சீர்திருத்த நிதி ஆயோக் பல பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. வேளாண் ஒப்பந்தங்களை தாராளமயமாக்குதல், விவசாய உற்பத்திப் பொருள்களை விவசாயிகளிடமிருந்து தனியார்கள் நேரடியாக வாங்க அனுமதித்தல், வாடிக்கையாளர்கள் விவசாயிகளிடம் விளைபொருள்களை நேரடியாக வாங்குதல், தங்களுடைய பொருள்களைச் சந்தைப்படுத்த வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவின் மூலம் உரிமம் பெறுதல், ஒற்றைச் சாளர வரி முறைகளை அமல்படுத்துதல், காய்கறி மற்றும் பழங்களுக்கு வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவிலிருந்து விலக்கு அளித்தல் வாங்குதல், வேளாண் பொருள்களுக்கான வரிகளைச் சீரமைத்தல், தேசிய வேளாண் சந்தைமுறையைச் செயல்படுத்துதல், வேளாண் உற்பத்தி சந்தைக் குழுவில் ஒரு கடை வைத்திருந்தால்தான் அங்கே வர்த்தகராகப் பதிவு செய்து கொள்ள முடியும் என்னும் விதியை நீக்குதல் உள்ளிட்ட பரிந்துரைகளை நிதி ஆயோக் முன்வைத்துள்ளது.

**விவசாயம் தனியார் மயமாக்கப்பட வேண்டுமா?**

விவசாயத் துறையிலுள்ள பிரச்சினைகளைப் பல்வேறு துறையின் வல்லுநர்களும் உன்னிப்பாகக் கவனித்துவருகின்றனர். பலவீனமான விவசாய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்த முடியாது, இது நம்முடைய பலவீனமான விவசாய யுக்திகளில் ஒன்று. எனவே, வேளாண் சந்தைப்படுத்தலைத் தனியார்மயமாக்குவதால் ஒரு புதிய மாற்றம் கொண்டு வரப்படும். இன்னும் சில கிராமங்களில் வேளாண் சந்தைப்படுத்துதலில் இடைத் தரகர்களின் தலையீடு உள்ளது. பல்வேறு நடவடிக்கைகள் மூலம் இடைத் தரகர்களின் தலையீடுகளை அகற்ற மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால், பல விவசாயிகளுக்கு இதனால் ஏற்படும் நன்மைகள் குறித்துத் தெரியாது.

எப்போது இத்துறையில் தனியார்கள் நுழைகின்றனரோ, அப்போது தங்களுடைய பணியாளர்களை அறிமுகப்படுத்துவார்கள். இந்த நிலையில் விவசாயிகள் பணத்தைச் செலுத்தி தங்களுக்கான வேலைகளுக்கு அப்பணியாளர்களைப் பயன்படுத்திக்கொள்வார்கள். இது இத்துறையை ஒழுங்குபடுத்துவதோடு மட்டுமல்லாமல், வேலையில்லாத பல இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பையும் உருவாக்கும். ஆனாலும், இத்தகையை முடிவுகளை எடுக்கும்போது இதன் சேவைகளுக்கு ஏற்படும் செலவுகளையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.

வருமானம் அதிகரிக்க வேண்டும் என்றால் விவசாயிகள் இத்துறையில் மாறிவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக்கொள்ள வேண்டும். பாசன வசதிகள், இயற்கை வேளாண்மை முறைகள் மற்றும் இதுபோன்ற இதர சேவைகளைப் பெறுதல் ஆகியவை விவசாயிகளுக்குக் குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய வேண்டும். கிராமப்புற வேளாண்மையைப் பன்முகத்தன்மை கொண்டதாக மாற்றி, விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி என்பது வரவேற்கத்தக்க ஓர் முனைப்பு. சீர்திருத்தங்களை மேற்கொள்வதுடன், குடிசைத் தொழில்கள் போன்ற சிறு உற்பத்திக் கூடங்களுக்கு ஊக்கமளித்தால் நீண்ட காலப் பலன்களை எட்ட முடியும்.

நன்றி: https://qrius.com/skill-development-gets-a-major-push-in-the-indian-agriculture-sector/

தமிழில்: எழிலரசன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share