சிறப்புப் பார்வை: சீரழிந்துவரும் ஏழைகளின் ஊட்டி!

Published On:

| By Balaji

ஆரோன்

‘ஏழைகளின் ஊட்டி’ என்று அழைக்கப்படும் கண்கவர் ஏலகிரி மலை தமிழ்நாட்டின் முக்கியமான ஒரு சுற்றுலாத்தலமாகும். ஆனால், பார்க்கும் இடமெல்லாம் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் குப்பைகள் என சுகாதாரச் சீர்கேடுகளால் பாதிக்கப்பட்டு, மிகுந்த எதிர்பார்ப்போடு வரும் சுற்றுலாப் பயணிகளைச் சோகத்தில் ஆழ்த்திவிடுகிறது.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரி மலை, 30 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்டது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கும் இந்த மலை 14 கிராமங்களைக் கொண்டுள்ளது. இந்த மலைக்குச் செல்லும்போது ஏற்காடு, கொல்லிமலை போன்ற மலைகளில் காணப்படும் சிறப்பம்சத்தைவிட, இங்குப் பயணிக்கும்போது அடி முதல், மேல் பகுதி வரை உள்ள 14 வளைவுகளிலும் மலையின் அழகை உச்சியிலிருந்து காண முடியும்.

ADVERTISEMENT

இந்த மலையில் உள்ள நிலாவூர் ஏரி, இயற்கைப் பூங்கா, சிறுவருக்கான பூங்கா, புங்கானூர் ஏரி, முருகன் கோயில், தொலைநோக்கு இல்லம் உள்ளிட்ட இடங்களைச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் ரசிக்கின்றனர்.

**கோடைத் திருவிழாவின் வசீகரம்**

ADVERTISEMENT

அமைதியை விரும்புபவர்கள், அழகிய இயற்கைச் சூழ்நிலையை ரசிக்க விரும்புபவர்கள் இங்கு இரண்டு, மூன்று நாள்கள் தங்கலாம். இங்கு சுத்தமான தேன், பலாப்பழம் போன்ற உணவுப் பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கின்றன. இதற்காக பெங்களூரு, சென்னை போன்ற இடங்களிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அதிக குளிரும் இல்லாமல் அதிக வெயிலும் இல்லாமல் இருக்கும் இங்கு ஏப்ரல், மே மாதங்களில் வருடம் தவறாமல் கோடைத் திருவிழாவும் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பரந்திருக்கும் ஏலகிரி மலையில் ஏராளமான பழத்தோட்டங்கள், பூந்தோட்டங்கள் உள்ளன. மலையேறும் பயிற்சி பெறுபவர்கள், மலையேற்றத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு ஏலகிரி மலை அருமையான இடம். அதற்கான வசதிகள் இங்கே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மிகக்குறைந்த செலவில், விடுமுறை நாள்களை மலைப் பிரதேசங்களில் கழிக்க விரும்பும் ஏழை, நடுத்தர மக்களுக்கு இந்த ஏலகிரி மலை ஒரு வரப்பிரசாதமாகும்.

மலைப்பகுதி ஆயிற்றே, சாப்பிட நல்ல உணவகங்கள் இருக்குமா என்ற சந்தேகமே வேண்டாம். நல்ல தரமான ஓட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் அதிகமாக உள்ளன.

**பயணிகளை வருந்த வைக்கும் மாற்றம்**

கண்கவர் அழகு, நல்ல காலநிலை, உணவு முதலான வசதிகள் ஆகியவை இருந்தாலும் தற்போது ஏலகிரி மலையில் பல்வேறு வசதிகள் குறைந்து வருவதாலும், சுகாதாரச் சீர்கேட்டினாலும் அதன் அழகு மாசடைந்து வருவதாகவும் இதனால் பல்வேறு வகையான தொற்றுநோய்கள் ஏற்படும் என்பதால் இங்கு வர யோசிக்க வேண்டியதாக இருக்கிறது என்று சுற்றுலாப் பயணிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, ஏலகிரி குறிஞ்சி வானவில் அறக்கட்டளை நிறுவனர் பொன்.கதிரிடம் பேசினோம். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஏலகிரி மலைக்கு ஒவ்வோர் ஆண்டும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். ஆனால், கடந்த ஆண்டைப் பார்க்கும்போது இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வரத்துக் மிகக் குறைவு. இதற்கு முக்கியக் காரணம், சுகாதாரச் சீர்கேடும், சுற்றுலாப் பயணிகளுக்குக் கிடைக்கும் வசதிக் குறைவுமே. சுற்றுலாப் பயணிகளை அதிக கவர்ந்த ஏலகிரி மலையைச் சுகாதார சீர்கேட்டிலிருந்து மீட்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்தும் சரியாக கவனிக்கப்படவில்லை” என்கிறார்.

மேலும், “இதனால் ஏலகிரி மலை அதன் பொலிவை இழந்து காணப்படுகிறது. பொதுக் கழிப்பிடம் திறக்கப்படாததால் சுற்றுலாப் பயணிகள் திறந்தவெளியைப் பயன்படுத்துகின்றனர். இதனால் பெண்கள் பலர் அவதியுறுகின்றனர். அதேபோல், டாஸ்மாக் கடை பொது இடத்தில் இருப்பதால், மதுப் பிரியர்கள் மது அருந்திய பாட்டில்களை நடைபாதையில் வீசிவிட்டுச் செல்கின்றனர். மேலும், இங்கு பிளாஸ்டிக் பயன்பாடு அதிக அளவில் இருப்பதால், பொது இடங்களில் கொட்டப்படுகிறது. இதனால் டெங்கு பரப்பும் கொசு உற்பத்தியாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவற்றை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் கதிர் கோரிக்கை விடுக்கிறார்.

படகு சவாரி செய்யப்படும் இடங்களில் பழுதடைந்த பல்வேறு படகுகள் கண்காணிக்கப்படாமல் உள்ளன. அப்பகுதிக்கு வரும் வழியில் உள்ள சாலைகள் சரிசெய்யப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால், பயணிகளுக்கு மிகவும் தொந்தரவாக இருப்பதைக் காண முடிகிறது.

“ஆண்டுதோறும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் கோடை விழாவின்போது மட்டும் ஏலகிரி மலையை அழகுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்” என்கிறார் கதிர். ஏலகிரி மலைப் பாதையில் பயணிக்கும் பேருந்துக் கண்ணாடிகளில் பல்வேறு விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளதால் பயணிகளால் மலையின் அழகை ரசிக்க முடியவில்லை.

அங்குள்ள மரங்களில் ஆணி அடித்து, விளம்பரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் அகற்றுவதோடு, சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து இழுக்கக்கூடிய பல ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.

அதேபோல், ஏலகிரி முதல் அருகேயுள்ள அத்தனாவூர் வரை அமைக்கப்பட்டு வரும் சாலை தடுப்புச் சுவர் கான்கிரீட்டால் கட்டப்பட்டுள்ளது. அதை, பூச்செடிகளுடன் கூடிய சாலைத் தடுப்பாக உருவாக்க வேண்டும் என்னும் கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தாமரை மலர்களால் பூத்துக் குலுங்கிய மங்களம் ஏரி தற்போது களையிழந்து காணப்படுகிறது.

அதேபோல், இங்குள்ள கூட்டுரான் ஏரி, மஞ்சள் கொல்லை புதூர் ஏரி, அத்தனாவூர் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. அங்கு தற்போது ஏரிகளைச் சீரமைத்தால், மழைக் காலங்களில் மழைநீரைச் சேமிக்க உதவியாக இருக்கும். மழைநீர் தேக்கங்கள் உரிய முறையில் பராமரிக்கப்படாததால் மழைநீர் வீணாகி, அருகில் உள்ள ஜலகாம்பாறை அருவிக்குச் செல்கிறது. இதனால், இங்குள்ள விவசாயிகள் வறட்சி ஏற்பட்டு பாதிப்படைகின்றனர்.

**சீரமைப்புப் பணிகள் அவசியம்**

“கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டியும், பூங்காக்களைச் சீரமைக்க வேண்டியும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” எனக் கதிர் தெரிவிக்கிறார்.

மேலும், ஏலகிரி மலையில் சில கின்னஸ் சாதனைகளைச் செய்து உலக அரங்கில் ஏலகிரியின் பெருமையைக்கொண்டு செல்ல வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. தற்போது ஐந்து ஏக்கர் பரப்பளவில் திருக்குறள் தோட்டம் அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

“பல்வேறு மக்களின் முயற்சியாலும், ஏலகிரி குறிஞ்சி வானவில் அறக்கட்டளை சார்பிலும் ஏலகிரி மலையைச் சீர்செய்ய முயற்சி செய்து வருகிறோம். ஏலகிரி மலைக்குத் தமிழக அரசு உதவி செய்து மலையின் பசுமையை மீட்க வேண்டும்” என்றார் பொன்.கதிர்.

ஏலகிரி மக்களின் வாழ்வாதாரத்துக்குப் பயன்படும் வகையிலும், சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையிலும், அங்குள்ள குறைபாடுகளை நீக்கிப் பயனடையும் வகையில், தமிழக அரசு எப்போது நடவடிக்கை என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

**ஏழைகளின் ஊட்டியைத் தமிழக அரசு கவனிக்குமா?**,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share