பிராச்சி சால்வே
இந்தியாவில் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து பல விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுவரும் நிலையிலும், சுகாதாரத்தில் குறிப்பிடும்படியான முன்னேற்றத்தை நாம் அடையவில்லை. நோயின் தாக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலையில், சுகாதார வசதி இல்லாததால் இளம் வயதுப் பெண்கள் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
வாட்டார் எய்ட் என்ற சர்வதேச லாப நோக்கற்ற அமைப்பு, இந்தியாவிலுள்ள சுகாதார வசதி குறித்து அவுட் ஆஃப் ஆர்டர் என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
உலகின் இரண்டாவது மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், அதிகபட்சமாக 732 மில்லியன் மக்கள் கழிவறை வசதி இல்லாமல் இருக்கின்றனர். ‘உலகில் கழிவறைகளின் நிலை 2017இன்படி 355 மில்லியன் பெண்கள் கழிவறை வசதி இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர் என அந்த அறிக்கை கூறுகிறது. இவர்களை ஒரே வரிசையில் நிற்க வைத்தால், பூமியை விட நான்கு மடங்கு அதிகமான சுற்றளவு இருக்கும்.

இந்தியாவில் தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்) திட்டத்தின் மூலம் சுகாதார முன்னேற்றத்துக்காகப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், இன்னும் அதன் இலக்கை அடையும் நிலை வரவில்லை. அரசு அளித்த தகவலின்படி, 2014ஆம் ஆண்டு 39% ஆக இருந்த சுகாதார வசதி பெற்ற பகுதிகளின் எண்ணிக்கை 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 65% ஆக உயர்ந்துள்ளது. இந்தக் காலகட்டத்தில் கிராமப் பகுதிகளில் 52 மில்லியன் வீடுகளில் கழிவறை கட்டப்பட்டது.
தூய்மை பிரசாரம் மூலம் 40% திறந்தவெளிக் கழிவறைப் பயன்பாடு ஒழிக்கப்பட்டது. அதாவது, 100 மில்லியன் மக்கள் கழிவறையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
திறந்தவெளிக் கழிவறைப் பயன்பாட்டைக் குறைக்கவும் அடிப்படை சுகாதாரத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டுவரும் பத்து நாடுகளில் ஆறாவது இடத்தில் உள்ளது இந்தியா. 2000ஆம் ஆண்டில் 78.3% ஆக இருந்த குறைந்தபட்ச சுகாதார வசதிகூட இல்லாத மக்களின் எண்ணிக்கை, 2015ஆம் ஆண்டு 56% ஆகக் குறைந்துள்ளது.
**வயிற்றுப் போக்கு**
வயிற்றுப் போக்கால் ஒவ்வோர் ஆண்டும் ஐந்து வயதுக்குக் கீழுள்ள 60,700 குழந்தைகள் உயிரிழக்கின்றனர். இந்திய குழந்தைகள் அதிகளவில் இறப்பதற்கு இரண்டாவது காரணமாக வயிற்றுப் போக்கு காணப்படுகிறது. 2015ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 321 குழந்தைகள் வயிற்றுப் போக்கால் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தந்த தகவல்களின் அடிப்படையில், ஜூலை 29, 2017 அன்று ‘இந்தியா ஸ்பென்ட்’ என்னும் அமைப்பு அறிக்கை வெளியிட்டது.
திறந்தவெளிக் கழிவறை மூலம் கொக்கிப் புழுக்கள் பரவி, வயிற்றுப் போக்கு, ரத்த சோகை மற்றும் பெண்களுக்கு எடை குறைவு போன்ற நோய்களை ஏற்படுத்துகின்றன. இந்தப் பிரச்னைகள் பிறந்த குழந்தை எடை குறைவு மற்றும் வளர்ச்சிக் குறைவு போன்ற தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இந்தியாவில் ஐந்து வயதுக்குக் கீழுள்ள 38% குழந்தைகள் வளர்ச்சி குன்றிக் காணப்படுகின்றனர் என தேசிய குடும்ப சுகாதார ஆய்வு, 2015-16 தெரிவித்துள்ளது.

சுகாதார வசதி குறைவாக உள்ள பகுதிகளில் வயிற்றுப் போக்கு பாதிப்பு அதிகமாக இருக்கிறது. பீகார், உத்தரப்பிரதேசம், அசாம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இறப்பு விகிதம், வளர்ச்சி குறைவு விகிதம் அதிகம் மற்றும் மோசமான சுகாதாரம் காரணமாக வயிற்றுப் போக்கு நோய் அதிகரித்துள்ளது என இந்தியா ஸ்பென்ட் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுகாதார வசதியுள்ள மாநிலங்களில் பெண்களுக்கு ரத்த சோகை, வயிற்றுப்போக்கு ஆகிய பிரச்னைகள் ஏற்படுவது குறைந்துள்ளது. கேரள மாநிலத்தில் சுகாதார வசதியின் விகிதம் 98.1%. தேசிய சராசரி 48.4%. இங்கே வயிற்றுப் போக்கு நாட்டிலேயே ஆகக் குறைந்த அளவாக 3.4 சதவிகிதமும், பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை 22.6% ஆகவும் உள்ளன.
பீகாரில் 25% வீடுகளில் மட்டுமே கழிவறை வசதியுள்ளது. இங்கு 10.2% மக்கள் வயிற்றுப் போக்கினாலும் 58.3% கர்ப்பிணிப் பெண்கள் ரத்த சோகையாலும் பாதிக்கப்படுகின்றனர்.

**பெண்களின் கல்வியறிவின்மை**
குறைந்த ஆரோக்கியத்தைத் தவிர, கழிவறை வசதி இல்லாத காரணத்தால் 1.1 பில்லியன் இளம் வயதுப் பெண்கள் மற்றும் பெண்கள் குறைந்த கல்வியறிவு பெறுகின்றனர். துன்புறுத்தலுக்கும் ஆளாகுகின்றனர். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் கழிவறை வசதி இல்லாததால் பெண்கள் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிடுகின்றனர்.
பள்ளிப் படிப்பை பாதியிலேயே விடுவதற்கு முக்கியக் காரணமாக மாதவிடாயை முன்வைக்கின்றனர் மாணவிகள். சுத்தமான மற்றும் பாதுகாப்பான கழிவறை இல்லாததால் 28% மாணவிகள் மாதவிடாயின்போது பள்ளிக்குச் செல்வதில்லை எனக் கூறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்படக் கூடியவர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் சுகாதாரக் கொள்கை அமைய வேண்டும் என வாட்டர் எய்ட் அமைப்பின் கொள்கைப் பிரிவுத் தலைவர் வி.ஆர்.ராமன் தெரிவித்தார். மேலும் அவர், ‘பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்தில் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் இருப்பதற்குத் தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களும் உடல் ரீதியான நெருக்கடிகள் கொண்ட முதியோரும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் கழிவறைகளை வடிவமைக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
நன்றி:[thewire.in](https://thewire.in/197455/732-million-india-tops-list-number-people-without-access-toilets-report/)
தமிழில்: ச.வினிதா
