சிறப்புத் தொடர்: 2017இல் 1.3 கோடி வேலைவாய்ப்புகள் உருவாயிற்றா?

Published On:

| By Balaji

அமித் பசோலே மற்றும் ஆனந்த் ஸ்ரீவஸ்தவா

ADVERTISEMENT

*(இந்தியாவின் வேலைவாய்ப்பு சவாலைப் பற்றிய ஐந்து பகுதிகள் கொண்ட தொடரில் இது இரண்டாவது பகுதி. [முதல் பகுதி]( https://minnambalam.com/k/2018/10/04/8) இந்தியாவின் வேலைவாய்ப்பு அரங்கில் மைய அரசியல் பொருளாதார சவாலை விளக்கியது.)*

பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் கவுன்சிலுக்கான ஒரு பின்புல அறிக்கையாகத் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையில், சுர்ஜித் பல்லா மற்றும் தீர்த்ததன்மாய் தாஸ் ஆகிய பொருளாதார வல்லுநர்கள் 2017இல் 1.28 கோடி (பிரதான நிலை) வேலைவாய்ப்புகளை இந்தியப் பொருளாதாரம் உருவாக்கியதாகக் கூறியுள்ளனர். 2013க்கும் 2017க்குமிடையே இந்தியாவில் 2.21 கோடி நிகர வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்றும் 2004–05க்கும் 2011–12க்குமிடையே 1.1 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்ட நிலையைவிட இது மிகவும் சிறந்தது என்றும் கோருகின்றனர். அதாவது வேலைவாய்ப்பு உருவாக்குவதில் தற்போதைய அரசாங்கம் முந்தைய அரசாங்கத்தைவிட சிறப்பாக செயல்பட்டுள்ளதாக இது காட்டுகிறது.

ADVERTISEMENT

இந்தக் கண்டுபிடிப்புகள் 2016–17இல் வேலைவாய்ப்பு 0.14 கோடி மட்டுமே அதிகரித்தது எனக் காட்டும் தனியார் ஆதாரங்களான இந்திய பொருளாதாரத்தைக் கண்காணிக்கும் மையம் (CMIE) போன்றவற்றின் புள்ளிவிவரங்களோடு முற்றிலும் மாறுபட்டுள்ளன. 2019 தேர்தல்களை நோக்கி முன்னேறிச்செல்லும் காலகட்டத்தில் வேலைவாய்ப்பு குறித்த விவாதம் மைய விவாதமாக இருப்பதால் வேலைவாய்ப்பு உருவாக்கம் பற்றிய மதிப்பீடுகளில் இந்த அளவுக்கு வேறுபாடு இருப்பது பெரும் புதிராக உள்ளது.

இந்திய வேலைவாய்ப்பு குறித்த மாபெரும் விவாதத்தில் இந்த இரு மதிப்பீடுகளுமே இறுதியானதாக எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இந்தியாவில் வேலைவாய்ப்பு குறித்த நம்பத்தக்க ஆராய்ச்சிகள் அனைத்துமே NSSO நடத்தும் வேலைவாய்ப்பு – வேலையின்மை ஆய்வுகளை (employment-unemployment surveys/EUS) அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுள் கடைசி ஆய்வு 2011–12இல் நடத்தப்பட்டதால், தற்போதைய அரசாங்கத்தின்கீழ் எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை மதிப்பீடு செய்ய நம்பத்தக்க வழி வேறு எதுவும் இல்லை. “2017–18க்கான NSSO ஆய்வு எங்களுடைய மதிப்பீடுகளை உறுதி செய்கிறதா (அல்லது நிராகரிக்கிறதா) எனபதைக் காண நாங்கள் இப்போது ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறோம்” என பல்லா, தாஸ் ஆகியோரே ஒப்புக்கொள்கின்றனர்.

ADVERTISEMENT

இந்த நிபந்தனைக்குட்பட்டு அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளைத் தெரியப்படுத்தினாலும், அவர்களுடைய முடிவுகள் தங்கள் வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்துக்கொண்ட விவரங்களையும் அடிப்படையற்ற அனுமானங்களையும் ஆதாரமாகக் கொண்டவை என நாங்கள் நம்புகிறோம்.

இந்தியாவில் வேலைவாய்ப்புப் புள்ளிவிவரங்கள் இரு முக்கிய வகையினங்களை அடிப்படையாகக் கொண்டு பெறப்படுகின்றன. அவற்றுள் ஒன்று உழைப்பாளர் சக்தியில் பங்கெடுக்கும் விகிதம் (Labour Force participation Rate/LFPR), மற்றொன்று வேலையில்லாதோர் விகிதம் (Unemployment Rate/UR). இரண்டுமே வேலைக்குப் போகத்தக்க வயதுடையோர் (15இல் இருந்து 59 வயது வரையிலானவர்கள்) மக்கள்தொகை அடிப்படையில் கணக்கிடப்படுகின்றன.

**வேலைவாய்ப்பு மதிப்பீடுகளில் நிலவும் மாறுபாடுகள்**

**பல்லா மற்றும் தாஸ் மதிப்பீடுகள்**

**CMIE மதிப்பீடுகள்**

*ஆதாரங்கள்: 2011 தேசிய மாதிரி ஆய்வு, 2013 மற்றும் 2015ல் லேபர் பீரோ, 2016 மற்றும் 2017 CMIE.*

(அனுமானம் செய்துகொள்ளப்பட்ட (அளவிடப்பட்டவை அல்ல) உழைப்பாளர் சக்தி பங்கெடுப்பு விவரங்களை அடிப்படையாகக் கொண்டது.)

LFPR என்பது வேலைபார்க்கத்தக்க வயதிலுள்ள மக்களில் எவ்வளவு சதவிகிதம் பேர் வேலைபார்க்கின்றனர் அல்லது வேலைபார்க்கத் தயாராக உள்ளனர் என்பதன் சதவிகிதமாகும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலவும் மொத்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை வேலைபார்க்கும் வயதிலுள்ள மொத்த மக்கள்தொகையில் தொழிலாளர் பங்கெடுப்பு விகிதத்தை (work force participation ratio—அதாவது உழைப்பாளர் பங்கெடுப்பு விகிதத்திலிருந்து (labour force participation rate) வேலையில்லாதோர் விகிதத்தை [unemployment rate/UR] கழித்தால் வரும் மீதி) வைத்து கணக்கிடப்படுகிறது. LFPR மற்றும் UR விகிதங்கள் EUS கண்டுபிடிப்புகளிலிருந்து தெரியவருகையில் வேலைசெய்யத்தக்க வயதிலுள்ள மக்கள்தொகை சென்சஸ் புள்ளிவிவரங்களிலிருந்து கிடைக்கிறது. வேலைபார்க்கும் வயதிலுள்ள ஒரு குறிப்பிட்ட பிரிவினரைப் பொறுத்தவரை LFPR அதிகமாகவும் UR குறைவாகவும் இருந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் மொத்த வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்; LFPR குறைவாகவும் UR அதிகமாகவும் இருந்தால் மொத்த வேலைவாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

மக்கள்தொகை எவ்வளவு என்பது சென்சஸ் புள்ளிவிவரங்களிலிருந்து பெறப்படுவதால் அதைக் குறித்து எந்த விவாதமும் இல்லாதிருப்பினும், ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிலவும் வேலைவாய்ப்பு குறித்த மதிப்பீடுகள் LFPR, UR எவ்வளவு என்பதை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றன.

LFPR, UR குறித்த NSSO மதிப்பீடுகள் 2011–12 வரை மட்டுமே இருந்தாலும், லேபர் பீரோவால் ஆண்டுதோறும் நடத்தப்படும் வேலைவாய்ப்பு-வேலையின்மை ஆய்வுகள் 2015 வரையிலான LFPR மற்றும் UR விகிதங்களை அளிக்கின்றன. இந்த ஆய்வுகள் NSSO ஆய்வுகளைப்போல அந்த அளவுக்கு விவரம் தெரிவிப்பவையாகவோ அல்லது அதிகாரபூர்வமானவையாகவோ இல்லாமலிருந்தாலும் அடிப்படை தொழிலாளர் புள்ளிவிவரங்களை அளிக்கின்றன.

2016, 2017க்கான பல்லா மற்றும் தாஸ் மதிப்பீடுகள் CMIE மதிப்பீடுகளிலிருந்து அவ்வளவு தீவிரமாக வேறுபடுவதற்குக் காரணம் அவர்கள் CMIE எணிக்கைகளோடு ஒப்பிடுகையில் அதிக LFPR விகிதத்தையும் குறைந்த UR விகிதத்தையும் அனுமானம் செய்துகொண்டுள்ளனர். இந்த வேறுபாடு பெண்களுக்கான LFPR விகிதத்தில் மிக அதிகமாக உள்ளது. 2016 மற்றும் 2017 ஆண்டுகளுக்கு CMIE எண்ணிக்கைகளைவிட பல்லா மற்றும் தாஸ் பயன்படுத்தும் விகிதங்கள் முறையே 1.8 மடங்கும் 1.4 மடங்கும் அதிகமாக உள்ளன.

பல்லாவும் தாஸும் LFPR எண்ணிக்கைகளை எவ்வாறு கணக்கிட்டனர்? 2014க்கும் 2016க்குமிடையிலான LFPR மாற்றத்தின் விகிதங்கள் 2013க்கும் 2014க்குமிடையே என்னவாக இருந்ததோ அதேபோல இருக்கும் என அனுமானம் செய்துகொள்வதன் மூலம் இதை செய்தனர். அதாவது LFPR மதிப்புகள் மாறாமல் நிலையாக இருக்கும் என அனுமானம் செய்துகொண்டனர். சுவாரசியமான விஷயம் என்னவென்றால், பல்லாவும் தாஸும் தங்கள் வழிமுறையை நியாயப்படுத்த CMIE புள்ளிவிவரங்களை தம் வசதிக்கேற்ப தேர்ந்தெடுத்த வகையில் பயன்படுத்திக்கொள்கின்றனர். UR விகிதம் குறைந்துள்ளது என்ற CMIE புள்ளிவிவரத்தைப் பொருளாதார நிலைமைகளில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது என்பதற்கான ஒரு நிரூபணமாகக் காட்ட அதைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால் அதே புள்ளிவிவரத் தொகுப்பில் LFPR உம் குறைந்துள்ளது என்ற புள்ளிவிவரத்தை கணக்கிலெடுக்க மறுக்கின்றனர்.

CMIEயின் பெண்களுக்கான LFPR எண்ணிக்கைகள் முந்தைய NSSO மற்றும் லேபர் பீரோ எண்ணிக்கைகளிலிருந்து மிகவும் குறைவாக இருப்பது உண்மைதான். இருப்பினும், பல்லாவும் தாஸும் பயன்படுத்தியிருக்கும் 2016 மற்றும் 2017 ஆண்டுகளுக்கான LFPR எண்ணிக்கைகள் துல்லியமாகவே இருந்தாக வேண்டும் என இது காட்டவில்லை. ரொக்க மதிப்பழிப்பு ஜிஎஸ்டி போன்ற கொள்கைரீதியான மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும் காலகட்டத்தில் LFPR மாறாமலேயே இருந்திருக்கும் என அனுமானம் செய்துகொள்வது பிரச்சனைக்குரிய விஷயம். LFPR இரண்டு சதவிகிதம் தவறாகக் கணக்கிடப்பட்டிருந்தாலும் அது மதிப்பிடப்பட்ட வேலைவாய்ப்பை 2 கோடி வரை மாற்றிக் காண்பிக்கும்.

LFPR விஷயத்தைப் போலின்றி கணக்கிடுவதில் பயன்படுத்தப்பட்ட UR விகிதங்களை பல்லா மற்றும் தாஸ் விவாதிக்கக்கூட இல்லை. 2017 ஆம் ஆண்டுக்கு அவர்கள் தெரிவித்திருக்கும் தொழிலாளர்சக்தி (workforce) மற்றும் அதே ஆண்டிற்கான மதிப்பிடப்பட்டுள்ள உழைப்பாளர் சக்தி (labour force) ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட வேலையில்லாதோர் விகிதம் 3.8% ஆகும். இது CMIE மதிப்பிடும் 4.5% இலிருந்து மிகவும் குறைவு ஆகும்.

பல்லாவும் தாஸும் தங்கள் முடிவுக்கு ஆதரவாக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்பதற்கான துணை ஆதாரங்களை இரு வெவ்வேறு வழிகளில் காட்டுவதன் மூலம் அம்முடிவுக்கு வலுசேர்க்கப்பார்க்கின்றனர். முதற்கண், லேபர் பீரோவின் காலாண்டு வேலைவாய்ப்பு ஆய்வு (QES) மற்றும் தொழிலாளர் பிராவிடெண்ட் ஃபண்ட் அமைப்பு (EPFO) போன்ற இதர ஆதாரங்களிலிருந்து புள்ளிவிவரங்களைக் காட்டுவதன் மூலமும் இரண்டாவதாக பல்வேறு அரசாங்க திட்டங்களின் வேலைவாய்ப்பு உருவாக்குவதற்கான ஆற்றலைச் சுட்டிக்காட்டுவதன் மூலமும் இங்கனம் செய்கின்றனர்.

EPFO புள்ளிவிவரங்களை வைத்து புதிய வேலைவாய்ப்புகளை மதிப்பிடுவது பிரச்சனைக்குரிய விஷயம். 2017 ஆம் ஆண்டு 70 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டன என்று மதிப்பிட்ட புலக் கோஷ் மற்றும் சௌம்யா கான்தி கோஷ் ஆகியோர் இந்த ஆண்டில் முன்னதாக நடத்திய ஆராய்ச்சியை அடுத்து இது பரவலாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி கையாண்ட முறை மற்றும் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்பதை மதிப்பிட இந்த வகை புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவதன் பொருத்தப்பாடு ஆகியவை பரவலான விமர்சனத்துக்குள்ளாகியுள்ளன. பல்லாவும் தாஸும் 18 வயதிலிருந்து 21 வயதுவரை உள்ள தொழிலாளர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட புதிய பிராவிடெண்ட் ஃபண்ட் கணக்குகளைக் கணக்கில் சேர்ப்பதன் மூலம் இந்தப் பகுப்பாய்வை முன்னேற்றப் பார்க்கின்றனர்.

இந்த வயதுவரம்புக்குட்பட்ட தொழிலாளர்களில் 80% புதிய தொழிலாளர்கள் என பல்லாவும் தாஸும் அனுமானம் செய்துகொள்கின்றனர். இந்த அனுமானமும் நியாயமல்ல. இந்த அடிப்படையில் இந்த வயதுவரம்பில் இந்தப்பிரிவில் 18 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற கணக்கிற்கு அவர்கள் வருகின்றனர். இது உண்மையென்றால் இந்த குறிப்பிட்ட தொழிலாளர்களைப் பொறுத்தவரை இது நற்செய்தியே. ஆனால் எஞ்சிய பொருளாதாரத்தில் எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன அல்லது அழிக்கப்பட்டன என்பது நமக்குத் தெரியாததால் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு சூழ்நிலையை கணக்கிட இது நமக்குப் பெரிதும் உதவாது. தேசிய அளவில் பிரதிநிதித்துவதன்மை வாய்ந்த குடும்ப ஆய்வுகளை போன்றோ தொழிற்சாலை ஆய்வுகளைப் போன்றோ அல்லாமல் இந்த வழிமுறை உருவாக்கப்பட்ட புதிய நிகர வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையை நமக்குக் கொடுப்பதில்லை.

QES புள்ளிவிவரங்களைப் பொறுத்தவரை இந்த ஆய்வு 2 கோடி தொழிலாளர்களை மட்டுமே உள்ளடக்கும் ஆய்வு, எனவே மொத்தப் பொருளாதாரத்துக்குமான இனங்காட்டியாக இது செல்லுபடியாகாது என பல்லாவும் தாஸுமே குறிப்பிடுகின்றனர். ஆனால் இப்படிக் குறிப்பிட்ட போதிலும் இந்தப்புள்ளிவிவரத்தில் காணப்பட்ட வேலைவாய்ப்பு உருவாக்க விகிதமான 2.85% ஐ (2017 இல்) மொத்த 35 கோடி வேளாண்சாரா தொழிலாளர்சக்திக்கும் பொருத்திப்பார்த்து 1 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்பட்டுள்ளதாக அனுமானம் செய்கின்றனர். இது முற்றிலும் ஆதாரமற்ற அனுமானம். இதை நியாயப்படுத்த இந்த ஆராய்ச்சியாளர்கள் எந்த முயற்சியும் எடுப்பதில்லை.

பல்வேறு அரசாங்கத் திட்டங்களைப் பொருத்தவரை, இந்த ஆராய்ச்சியாளர்களின் முயற்சிகள் கறாரானதாகத் தென்படவில்லை. எடுத்துக்காட்டாக, முத்ரா கடன் திட்டத்தை விவாதிக்கையில் ரூ.20 லட்சம் கடன் ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கும், எனவே 80 லட்சம் புதிதாக வழங்கப்பட்டுள்ள கடன்கள் 40 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாகியிருப்பதாக அனுமானம் செய்துகொள்ளலாம் என அவர்கள் அறுதியிடுகின்றனர். அதேபோல, கட்டுமானப் பணிகளில் காணப்படும் அதிகரிப்பு இத்துறையில் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதைக் காட்டுவதாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இவையனைத்தும் உண்மையாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். சுருங்கக் கூறுவதானால், இந்த வாதங்கள் எதுவுமே பொருளாதாரத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறதா இல்லையா என்பதற்கான ஸ்தூலமான ஆதாரத்தைக் கொடுக்க முடியாது.

பள்ளிக்கூடம் அல்லது கல்லூரியில் சேர்ந்திருப்பவர்கள் அனைவருமே உழைப்பாளர் சக்தியின் ஒரு பகுதியாகக் கணக்கிடப்படவேண்டும் என அறுதியிடுவதன் மூலம் LFPR ருக்கே ஒரு புதிய வரையறையை இவர்களது ஆராய்ச்சி கொடுக்கிறது. இப்படி மறுவரையறை செய்வதன் மூலம் இவர்கள் சாதிப்பது என்ன என்பதில் தெளிவில்லை. LFPR இல் சமீபத்தில் காணப்படும் குறைவுகள் கல்விநிறுவனங்களில் சேருவதற்காக உழைப்பாளர் சக்தியிலிருந்து விலகுபவர்கள் விரைவிலேயே வேலைதேடுவோர் தொகுப்பில் சேருவார்கள் என்பதற்கான ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்க வேண்டும் என இந்த ஆராய்ச்சியாளர்கள் கூற விரும்புகிறார்கள் போலும். ஆனால் அதை அவர்கள் வெளிப்படையாகக் கூறவில்லை.

இந்தியத் தொழிலாளர் சந்தையைப் பற்றி இப்போது வரத் தொடங்கும் புதிய ஆராய்ச்சிகளோடு பல்லாவும் தாஸும் ஒத்துப்போகும் ஒரு விஷயம் என்னவென்றால் மக்கள்தொகை வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள குறைவு ஒவ்வொரு ஆண்டும் உழைப்பாளர் சக்தியில் சேரும் இளம் வயதினரின் எண்ணிக்கையையும் குறைக்கிறது என்பதாகும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான அழுத்தத்தை இது குறைக்கிறது.ஆனால் இந்த விஷயத்தில், இந்தியாவில் கட்டமைப்பு ரீதியான மாற்றம் இன்னும் பூர்த்தியடையவில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். எனவே புதிதாக உழைப்பாளர் சந்தையில் சேருபவர்களுக்கு மட்டுமே வேலை வழங்குவது என்பது வேலைவாய்ப்பு அரங்கில் நிலவும் சவால் அல்ல. விவசாயத் துறையை விட்டு வெளியேறுபவர்களுக்கு வேலைகள் உருவாக்கப்பட வேண்டும். இவர்களது எண்ணிக்கை புதிதாக உழைப்பாளர் சந்தையில் சேருபவர்களது எண்ணிக்கை அளவுக்குக்கோ அல்லது அதைவிட அதிகமாகவோ இருக்கலாம். இது அவர்களது பகுப்பாய்வில் தென்படவில்லை.

NSSO, லேபர் பீரோ மற்றும் CMIE ஆகியவற்றுக்கிடையே ஒப்பீட்டளவிலான வேலைவாய்ப்பு வரையறையை வளர்த்தெடுப்பது போன்ற சில தொழில்நுட்பரீதியான பங்களிப்புகளை இந்த ஆராய்ச்சியாளர்கள் செய்திருந்தாலும் 2017 இல் வலுவான வேலைவாய்ப்பு வளர்ச்சி நிலவியது என்ற அவர்களது முக்கிய முடிவு தங்கள் வசதிக்கேற்ப எண்ணிக்கைகளைத் தேர்ந்தெடுத்துக்கொள்வது அல்லது கேள்விக்குரித்தாகக்கூடிய அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டது என்ற குற்றச்சாட்டிலிருந்து அவர்களைத் தப்பிக்க வைப்பதில்லை.

குறைந்த GDP வளர்ச்சியே நீடிப்பது, முதலீடுகள் பலவீனமாக இருப்பது மற்றும் ஜிஎஸ்டி, ரொக்க மதிப்பழிப்பு போன்ற அதிர்ச்சிகள் தாக்கம் ஆகியவற்றின் பின்னணியில் வலுவான வேலைவாய்ப்பு வளர்ச்சி சாத்தியமில்லை என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டும். ஆனால், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண இந்த ஆராய்ச்சியாளர்களைப் போலவே நாங்களும் NSSOவின் அடுத்த EUS ஆய்வின் முடிவுகளுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம்.

**(பசோலே, ஸ்ரீவஸ்தவா ஆகியோர் பெங்களூர் அஜிம் ப்ரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரவியல் போதிக்கின்றனர்.)**

*(இந்தியாவின் வேலைவாய்ப்பு பிரச்சினை ஊதியத்துக்கான போராட்டத்தைவிட எளிதில் தீர்க்க வல்லதா? நாளை ஆராய்வோம்).*

**நன்றி: [இந்துஸ்தான் டைம்ஸ்](https://www.hindustantimes.com/india-news/india-s-job-challenge-options-aplenty-but-well-paying-ones-elude-workforce/story-I46QCXJpCtrDvuSadouJdK.html)**

**தமிழில்: பா.சிவராமன்**

*

[வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!](https://minnambalam.com/k/2018/10/02/92)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share