நரேஷ்
சென்னைக்குச் செய்ய வேண்டியது என்ன? – 9
United Nations Environment Program (UNEP) – Low elevation coastal zone என்கிற ஒரு தீர்மானத்தை முன்வைத்திருக்கிறார்கள். அதன்படி கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர்களுக்கு உள்ளிருக்கும் அனைத்துமே ‘லோ எலிவேட்டட் கோஸ்டல் ஜோன்கள்’தான். ஆனால், சென்னையின் கடற்கரையைப் பொறுத்தவரை 10 மீட்டர் எல்லாம் வேண்டாம், வெறும் 5 மீட்டர்களுக்குள்ளேயே மக்கள் வசிக்கிறார்கள். அதுவும் கூட்டமாகவும், நெருக்கமாகவும் வசித்துவருகிறார்கள். அரசாங்கத்துக்கு இந்தக் கட்டுப்பாடுகள் பற்றியெல்லாம் கவலையில்லை. குடியிருப்புகள் அமைத்துக் கொடுத்தால் போதும் என்றுதான் செயல்பட்டு வருகிறது. மெரினா கடற்கரையின் கரைகளில் நின்று பார்த்தால், அரசாங்கம் அமைத்துக்கொடுத்த அடுக்குமாடிக் குடியிருப்புகள் யாவும் நிற்கக் கூடாத இடத்தில் நின்றுகொண்டிருப்பதை அறியலாம்.
**கரைகள் மூழ்கடிக்கப்படும் அபாயம்**
நாம் மழை வெள்ளம் பற்றி மட்டும்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். இன்னும் கடல்மட்ட உயர்வு குறித்த சிந்தனைக்கே வரவில்லை. மழை வந்தால் ஆறுகள் வழியாக வெள்ளம் வடிந்த நிகழ்வை மட்டும்தான் பார்த்திருப்போம். நாம் நினைத்துப்பார்க்க முடியாதபடி, கடல் நிறைந்து ஆறுகள் வழி வந்து நிலத்தை நிறைக்கும் நிகழ்வு வெகு விரைவில் நடக்கவிருக்கிறது. பனிப்பாறைகள் அதிவேகமாக உருகிக்கொண்டிருக்கின்றன எனும் செய்தி அனைவரும் அறிந்ததுதான். ஆனால், இன்னும் 20 ஆண்டுகளில் குறைந்தது ஒரு மீட்டர் அளவுக்காவது கடல் நீர் மட்டம் உயரும் என்பது உறுதி. அப்படி உயர்ந்தால் மெரினாவும், பெசன்ட் நகரும் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போகும். கரைகளே மூழ்கடிக்கப்படும் என்றால் கட்டுமானங்கள் பற்றிச் சொல்லவா வேண்டும்?!
இந்தியாவின் மக்கள்தொகையில் 35 சதவிகிதம் பேர் கடற்கரையில் வசிக்கிறார்கள். கடல் நீர் மட்டம் உயர்ந்தால், இம்மக்கள் யாவரும் பருவநிலை அகதிகளாக (Climate refugees) மாறுவர். நாம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்தாலும், ஏற்கெனவே செய்த தவறுகளுக்கான வினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

கடல் மட்ட உயர்வு என்பதெல்லாம் அதீதக் கற்பனை என்று சொல்லும் அறிவியல்வாதிகளுக்கு ஒரு தகவல். 1997இல் இருந்து 2014 வரைக்குமான காலகட்டத்துக்குள் மட்டும், பிச்சாவரத்திலிருந்து நாகப்பட்டினம் வரையிலான கடற்கரைப் பகுதியில் 4800 ஏக்கர் நிலப்பரப்பைக் கடல் அரிப்பினால் நாம் இழந்திருக்கிறோம்! இது ஏற்கெனவே தொடங்கப்பட்ட அழிவு.
**நவீன ராட்சசன்**
தற்போதைய கற்காலத்தின் தொடக்கத்திலிருந்து உறை நிலையிலேயே இருந்த ஆர்டிக் ஷீட் (Arctic sheet) உருகிவிட்டது. இந்தப் பனித் துருவங்களானவை மிகப் பெரிய ராட்சசனைத் தன்னுள் ஒளித்து வைத்திருக்கிறது. கொள்ளிவாய் பிசாசாக, கொடும் வெம்மையுடன் வெளிப்படும் மீத்தேன் வாயுதான் அந்த ராட்சசன். அதுவும் பூமியின் ஆதி மீத்தேன் படலத்தை, அடக்கி அழுத்திச் சிறை வைத்திருப்பவை இந்தப் பனிப்படலங்கள்தான். இவை உருகினால் கடல் நீர் மட்டம் உயர்வதுடன், மீத்தேன் வாயுவின் வெளிப்பாடு புவியின் வெப்பத்தைக் கட்டுக்கடங்காமல் உயர்த்திவிடும்.
இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், இந்த ராட்சசன்தான் புவியின் ‘Breaking point’. இதைத் தாண்டிவிட்டால், பேரழிவைச் சந்திப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த ‘Breaking point’-ஐ நாம் கிட்டத்தட்ட தொட்டுவிட்டோம். ஏனெனில், நாம் வெளியிடும் கார்பனின் அளவை ஜீரணிக்கும் காரணிகளை அழித்துவருகிறோம். அதுபோலவே, அதிகமான கார்பனையும் வெளியிடுகிறோம். ‘Ideal state’ என்ற ஒரு நிலை உண்டு. கிட்டத்தட்ட மேற்சொன்ன ப்ரேக்கிங் பாயின்ட்டின் பொருள் கொண்ட வேறு நிலைபாடு இது.

பூமியின் இயல்பான கார்பன் கொள்ளளவு 250 ppm. மனிதச் செயல்களால் இக்கொள்ளளவு உயர்ந்துவருகிறது என்றால், இதற்கு ஒரு கட்டுப்பாடு உண்டு. அதாவது இயல்பைத் தாண்டி குறிப்பிட்ட அளவு உயரலாம் எனும் கட்டுபாடு. உணவில் குறிப்பிட்ட அளவு பூச்சிக்கொல்லி இருந்தால் நமக்குப் பாதிப்பில்லை என்று அளவீடை முன்வைக்கிறார்கள் அல்லவா? அதுபோலவே, சுற்றுச்சூழலில் அதிகபட்சமாக கார்பனின் கொள்ளளவு 360 ppm வரை எட்டலாம். இது அதிகபட்ச அளவு. ஆனால், தற்போதைய சூழலில் கார்பனின் கொள்ளளவு எவ்வளவு தெரியுமா? 410 ppm. அபாயக் கட்டத்தையும் தாண்டிய அளவு. இது எதுவரை போகலாம் என்றால், 440 ppm என்பதுதான் ‘Breaking point’. இந்த அளவைத் தொட்டுவிட்டால், அதற்கு பிறகு ‘தப்பிக்கும் வழி’ என்று எதுவும் இல்லை.
தற்போது வருடத்துக்கு 2 ppm அளவுக்கு கார்பன் கொள்ளளவு கூடி வருகிறது. இதைக் கொண்டு கணக்கிட்டால், சரியாக இன்னும் 15 வருடங்களில் உலகம் மிகப் பெரிய பேரழிவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதைத்தான் உலக நாடுகளால் பருவ நிலை மாற்றத்தைக் கண்டறிய நியமிக்கப்பட்ட விஞ்ஞானிகள் குழுவான ஐபிசிசி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்தது.
**காலநிலை அகதிகள்**
இந்தப் பேரழிவிலிருந்து விடுபட உலக நாடுகள் அனைத்தும் ஒருசேர ஒப்புக்கொண்டு முன்வைத்த தீர்வு – ‘Mass Migration’. காலநிலை அகதியாதலின் சுய முன்வடிவம் இது. அதாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களிலிருந்து நகர்ந்து குறைந்த மக்கள்தொகை கொண்ட சமநிலப் பகுதிகளில் குடியேறுதல். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், ‘ஊர் திரும்புதல்’. மாநகரங்களில் பொருளாதாரத்திற்காகப் பெயர்ந்து வரும் மக்கள், தங்கள் வேர்களைத் தேடித் திரும்பப் பயணிப்பதே தீர்வாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, 2016ஆம் ஆண்டு தனது கடைசி ஐநா உரையைப் பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் கவனப்படுத்தப் பயன்படுத்திக்கொண்டார். நுகர்வு சந்தையை விட்டொழித்து, சமநிலங்களை நோக்கி மொத்தமாக நகர்வதையே முழுமையான தீர்வாக முன்வைத்தார். “நாமாக நகரங்களைவிட்டு நகராவிட்டால், அகதிகளாக நகர்த்தப்படுவோம்” என்றார்.
சென்னைக்காகச் செய்ய வேண்டியவற்றில் முதலில் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை, சென்னையை விட்டு வெளியேறுவதுதான். சென்னையின் வரலாற்றை வைத்துப்பார்த்தாலும், இதுதான் முழுமையான தீர்வாக முன் நிற்கிறது.
வரலாற்றை வரும் நாட்களில் பார்ப்போம். இப்போது இந்த ‘மாஸ் மைக்ரேஷ’னின் தேவையைத் தெரிந்துகொள்வோம்.
ஏன் நகரத்தை விட்டு நகர வேண்டும்?
(தீர்வை நோக்கிய தேடல் தொடரும்..!)
[பகுதி 1](https://minnambalam.com/k/2018/10/06/36)
[பகுதி 2](https://minnambalam.com/k/2018/10/07/28)
[பகுதி 3](https://minnambalam.com/k/2018/10/09/34)
[பகுதி 4](https://minnambalam.com/k/2018/10/11/19)
[பகுதி 5](https://minnambalam.com/k/2018/10/13/22)
[பகுதி 6](https://minnambalam.com/k/2018/10/15/9)
[பகுதி 7](https://minnambalam.com/k/2018/10/17/16)
[பகுதி 8](https://minnambalam.com/k/2018/10/23/33)
