சிறப்புத் தொடர்: இந்தியாவில் வேலைவாய்ப்பு என்னும் சவால்!

Published On:

| By Balaji

ரோஷன் கிஷோர்

ADVERTISEMENT

வேலைவாய்ப்பை உருவாக்குவதே இந்தியாவின் மிகப் பெரிய அரசியல்-பொருளாதாரச் சவால் என்று அனைவருமே ஒப்புக்கொள்கின்றனர். அது அநேகமாக இந்தியாவின் 2019 நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியப் பிரச்சினையாக இருக்கக்கூடும். ஆனால், இதில் அடங்கியுள்ள நுட்பமான விஷயங்களைப் பலர் புரிந்துகொள்வதில்லை. இந்தியாவின் வேலைவாய்ப்பு பிரச்சினை இந்தியர்களுக்கு வேலைகளே இல்லை என்பது இல்லை. நல்ல ஊதியமளிக்கும் வேலைகள் இல்லை என்பதேயாகும்.

ADVERTISEMENT

இதற்கான மிகப்பெரும் காரணம் விவசாயத்தில் வேலைவாய்ப்புக்கும் வருமானத்துக்கும் பொருத்தப்பாடு இல்லாமலிருப்பதுதான். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயத்தின் பங்கு குறைந்துகொண்டே வருகையில் மொத்த வேலைவாய்ப்பில் அதன் பங்கு ஒப்பீட்டளவில் நிலையாகவே உள்ளது. இதன் விளைவு என்னவென்றால் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள உழைப்போரின் வருவாயின் பங்கு குறைந்துள்ளது.

இந்தியப் பொருளாதாரத்தின் மூன்று பரந்த உட்பிரிவுகளில் ஈடுபட்டுள்ள உழைப்பாளர்களின் வருவாயுடைய ஒப்பீட்டு பங்கின் விகிதத்தைக் காட்டுகிறது. ஒப்பீட்டு பங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அப்பிரிவின் பங்கை வேலைவாய்ப்பில் அப்பிரிவின் பங்கைக் கொண்டு வகுத்தால் கிடைக்கும் எண்ணாக வரையறுக்கலாம். ஒப்பீட்டு பங்கு ஒன்றுக்கும் அதிகமாக இருந்தால் அதன் பொருள் என்னவன்றால் பொருளாதாரத்தில் வருமானத்தில் அப்பிரிவின் பங்கு என்னவாக இருக்கிறதோ அது வேலைவாய்ப்பில் அப்பிரிவின் பங்கு என்னவாக இருக்கிறதோ அதைவிட அதிகம். இதன் மதிப்பு எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக அப்பிரிவிலுள்ள உழைப்பாளர்களின் நல்வாழ்க்கை அமைந்திருக்கும். கீழே காணப்படுவதுபடி, வருமானத்தில் விவசாயத்தின் ஒப்பீட்டளவிலான பங்கு 1990கள் முதற்கொண்டே கிட்டத்தட்ட 0.4 என்ற அளவிலேயே தேங்கியிருக்கிறது.

ADVERTISEMENT

விவசாயம் இன்னமும் இந்தியாவின் மொத்த உழைப்பு சக்தியில் 40% ஐ ஈடுபடுத்தியுள்ளது. தொழில்துறை மற்றும் சேவைத் துறையைப் பொறுத்தவரை இந்தக் காலகட்டத்தில் வருவாயின் ஒப்பீட்டளவிலான பங்கு ஒன்றைவிட அதிகமாக இருந்தது.

இந்தக் கணக்கீடுகளில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆண்டுவாரியான வேலைவாய்ப்பின் பங்குக்கான எண்ணிக்கைகள் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டவை. இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து நமக்குத் தெரியவரும் முக்கிய விஷயம் என்னவென்றால் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் இந்தியாவின் வேலைவாய்ப்புச் சந்தையில் நிலவும் இந்த மிகப்பெரும் கட்டமைப்புரீதியான ஏற்றத் தாழ்வைத் தீர்க்க முடியவில்லை.

(பொருளாதார வளர்ச்சி போதிய வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை.

துறைவாரியாக உற்பத்தி-வேலைவாய்ப்பு விகிதம் (employment elasticity)–1999–2000 முதல் 2011–12 வரையிலான கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம்

விவசாயம்

பொருளுற்பத்தி

சுரங்கம் மற்றும் குவாரித் தொழில்

பயன்பாடுகள் துறை

கட்டுமானம்

வர்த்தகம், போக்குவரத்து, ஹோட்டல்

நிதி, ரியல் எஸ்டேட்

இதர சேவைத் துறைகள்

அனைத்துத் துறைகளும்

ஆதாரம்: இந்தியப் பொருளாதாரத்தில் வளர்ச்சிக்கேற்ற வேலைவாய்ப்பு விகிதத்தை மதிப்பீடு செய்தல், சங்கீதா மிஸ்ரா மற்றும் அனூப் கே சுரேஷ், ரிசர்வ் வங்கி பணி நிமித்தமான ஆராய்ச்சிக் கட்டுரை 2014.)

வருவாயின் ஒப்பீட்டளவிலான பங்கில் இந்தத் துறைவாரியான ஏற்றத்தாழ்வு தொடர்ந்து நீடிப்பதன் காரணம் என்ன? இதைப் புரிந்துகொள்ள வருவாயை ஒட்டிய வேலைவாய்ப்பு விகிதம் என்ற கருத்து இங்கு பயனுள்ளதாக இருக்கும். எளிமையாகக் கூறுவதானால், வேலைவாய்ப்பு விகிதத்தைப் பொறுத்தவரை மொத்த உள்நாட்டுப் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட அளவீடு அதிகரிப்பதற்கேற்ப வேலைவாய்ப்பு எவ்வுளவு அதிகரிக்கிறது என அதை வரையறுக்கலாம். அது பொருளாதார வளர்ச்சியோடு சம்பந்தப்பட்டு வேலைவாய்ப்பு உருவாக்கப்படுவதை (அல்லது அது இல்லாமலாலிருப்பதை) அளவிடுகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 2014ஆம் ஆண்டின் பணிநிமித்த ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்று 1999-2000 லிருந்து 2011-12ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரத்தில் துறைவாரியான வளர்ச்சிக்கேற்ற வேலைவாய்ப்பு விகிதத்திற்கான மதிப்பீடுகளைக் கொடுத்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் முழுமைக்குமாகப் பார்த்தால் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கேற்ற வேலைவாய்ப்பு விகிதம் 0.2 ஆக இருந்தது. இதன் பொருள் என்னவென்றால், இந்தக் காலகட்டத்தில் மொத்த உள்நாட்டுப் பொருளாதாரம் எந்த விகிதத்தில் அதிகரித்ததோ அதில் ஐந்தில் ஒரு பங்கு விகிதத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்தது. இந்திய வேலைவாய்ப்பு பற்றிய மாபெரும் விவாதத்தில் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி என்ற சொற்றொடர் இந்தப் புள்ளிவிவரங்களில்தான் தனது தோற்றுவாயைக் கொண்டிருக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சிக்கேற்ற வேலைவாய்ப்பு விகிதத்தில் துறைவாரியாக முக்கிய மாறுபாடுகள் இருப்பது உண்மைதான் (கீழ்க்கண்ட அட்டவணையைப் பார்க்கவும்). விவசாயத் துறையில் வளர்ச்சிக்கேற்ற வேலைவாய்ப்பு விகிதத்தின் மதிப்பு எதிர்மறையாக உள்ளது. இது எதைக் காட்டுகிறது என்றால் விவசாய வளர்ச்சி பாதிக்காமல் விவசாயத் துறையிலிருந்து வரவேற்கத்தக்க அளவில் உழைப்பாளர் வெளியேறுவதைக் குறிக்கிறது. இதன் மதிப்பு ஒன்றை விடக் கூடுதலாக இருக்கும் ஒரே துறைகள் கட்டுமானமும் பயன்பாட்டுத் துறைகளும்தான் (மின்விநியோக, குடிநீர் வழங்குதல் போன்றவை).

கட்டுமானத் துறை இந்தக் காலகட்டத்தில் வேலைவாய்ப்பில் மிக அதிகமான வளர்ச்சியைச் சந்தித்திருக்கிறது என்ற காரணத்தால் இது வரவேற்கத்தக்க நிகழ்வாகும். ஆனால், இந்த ஆண்டில் முன்னதாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரப் பெட்டகத்திலிருந்து பெற்ற புள்ளிவிவரங்கள் இது சம்பந்தமாகக் கவலைதரும் போக்கைக் காட்டுகின்றன. கட்டுமானத் துறையில் தொழிலாளியின் தலையொன்றுக்கு சேர்க்கப்படும் மதிப்பு குறைந்துகொண்டே வருகிறது. விவசாயத்தில் இந்த மதிப்பு என்னவாக உள்ளதோ அதற்கு நிகரானதாக இதுவும் மாறும் நிலையை நோக்கி இது சென்று கொண்டிருக்கிறது.

(வருவாய் மற்றும் வேலைவாய்ப்பின் பங்கில் துறைவாரியான ஏற்றத்தாழ்வு

விவசாயம் தொழில்துறை சேவைத்துறை

ஒப்பீட்டளவிலான வருவாய் பங்கு வருவாயில் ஒரு துறையின் பங்கை வேலைவாய்ப்பில் அதன் பங்கினால் வகுக்கும் போது கிடைக்கிறது

ஆதாரம்: உலக வங்கி)

விவசாயத் துறையில் உழைப்பாளர் சக்தியை தன்பால் உள்வாங்கிக்கொள்வதற்கான கட்டுமானத் துறையின் ஆற்றல் முடிவுக்கு வருவதால் மாற்று வாய்ப்புகள் என்ன? இந்தக் கேள்விக்கு எளிதான பதில்கள் எதுவும் இல்லை. உண்மையில் பார்த்தால், பொதுவாகக் கொடுக்கப்படும் பதில்களால் பயனொன்றுமில்லை. இவற்றுள் மூன்றை இங்கே குறிப்பிடுகிறோம்.

இந்தியாவின் வேலைவாய்ப்பு பற்றாக்குறைக்கு ஒரு தீர்வாக சுயவேலைவாய்ப்பு அடிக்கடி முன்வைக்கப்படுகிறது. சொல்லப்போனால், சுயவேலைவாய்ப்பே பிரச்சினையின் ஒரு பகுதியாகும். ஜனவரி 2013இலிருந்து ஏப்ரல் 2014 வரை நடத்தப்பட்ட சமீபத்திய பொருளாதார சென்சஸ் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சராசரியாக ஒரு பொருளாதார நிறுவனம் உருவாக்கிய வேலைவாய்ப்பு 2.2 மட்டுமே. இந்தப் பொருளாதார நிறுவனங்களில் 30% மட்டுமே ஆறு அல்லது அதற்கு அதிகமான எண்ணிக்கையில் வேலைக்கு அமர்த்தியிருந்தன. எண்ணிக்கை ரீதியில் பெருமளவிலான முறைசார்ந்த துறை உழைப்பாளர் சக்தி நிலவுவதை மறுக்க இந்தப் புள்ளிவிவரங்கள் பயன்படுத்தப்படக் கூடாது என்றாலும், இவை இந்தியப் பொருளாதாரத்தில் குறைந்த வருவாயைத் தரும் சிறுவிகித உற்பத்தி வேலைவாய்ப்புடன்கூடிய முறைசாராத் துறை ஆதிக்கம் செலுத்துவதை படம்பிடித்துக் காட்டுகின்றன.

இந்தியத் தொழிலாளர் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட இந்திய ஊதிய அறிக்கையிலிருந்து கிடைக்கும் எண்ணிக்கைகள் மேற்கண்ட புள்ளிவிவரங்களுக்கு ஒரு பின்புலத்தை அளிக்கின்றன. 2001-12இல் இந்தியாவிலுள்ள 40.2 கோடி உழைப்பாளர்களில் 7.4 கோடி மட்டுமே முறைசார்ந்த/ஊதியம் கிடைக்கும் வேலைகளைக் கொண்டிருந்தனர். 20.6 கோடி பேர் சுயவேலைவாய்ப்பில் ஈடுபட்டவர்கள், மற்றும் 12.1 கோடி பேர் கேஷுவல்/தற்காலிக வேலையில் ஈடுபட்டிருக்கும் கூலித் தொழிலாளர்கள்.

இந்தியாவின் குறைந்த ஊதிய வேலைப் பிரச்சினைகளில் பெரும்பகுதிக்குக் காரணம் நல்ல ஊதியம் அளிக்கும் வேலைகள் போதிய அளவில் இல்லாதிருப்பது. அதோடு, நல்ல ஊதியம் அளிக்கும் வேலைகளுக்குத் தேவையான தகுதிவாய்ந்த தொழிலாளர்கள் இல்லாதிருப்பது ஒரு முக்கியமான தடங்கலாக உருவாகிவரும் சூழ்நிலையை நோக்கி நாம் நிதானமாக ஆனால் உறுதியாகச் சென்று கொண்டிருக்கிறோம்.

இந்தியப் பொறியியல் பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதற்கான தகுதி மிகவும் குறைவாக இருப்பது குறித்த தொழில்துறை ஆய்வுகள் பற்றி இப்போது அனைவரும் அறிவர். செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஏற்படும் தொழில்நுட்ப ஆக்கங்கள் மற்றும் அதிகரித்த அளவில் தானியங்கிமயமாதல் ஆகியன தற்போது நிலவுகின்ற குறைந்த திறனாற்றல் கொண்ட முறைசார்ந்த துறைகளிலுள்ள வேலைகளை அழிக்கும் வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தற்போது நிலவும் அளவைத் தக்கவைக்கக்கூட நமது உழைப்பாளர் சக்தியின் ஆற்றலை மிகவும் அதிகரித்தாக வேண்டும். கல்வி நிறுவனங்களில் சேருபவர்களின் எண்ணிக்கையில் முன்னேற்றம் இருந்தாலும் ஆரம்பக் கல்வியின் பலன் எவ்வாறு உள்ளது என்பதற்கான புள்ளிவிவரங்கள் மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளன.

கல்வியின் நிலை குறித்த வருடாந்தர அறிக்கையின்படி எட்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்களில் பாதிக்கும் குறைவானவர்களால் மட்டுமே எளிய வகுத்தல் கணக்குகளைக்கூடப் போட முடிகிறது. இந்தியா தனது வேலைவாய்ப்பு சவால்களை அறிவுசார் பொருளாதார வழியில் வெற்றிகொள்ள முடியும் என்ற தவறான நம்பிக்கையை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இறுதியாக ஒரு பிரச்சினை பொதுத்துறையின் வேலைவாய்ப்பு உருவாக்கும் ஆற்றலைப் பற்றியது. பொருளாதார சீர்திருத்தங்கள் இந்திய பொருளாதாரத்தில் பெரும்பாலும் பொதுத் துறை வேலைவாய்ப்பு குறைவதோடு சம்பந்தப்பட்டுள்ளது. மைய பொருளாதார நடவடிக்கைகளில் உள்ள பொதுத்துறை வேலைவாய்ப்புகள் விஷயத்தில் இது உண்மையாக இருந்தாலும் பொதுச்சேவைகளை வழங்கும் நடவடிக்கைகளிலும் கூட இது உண்மையாக இருக்கவேண்டிய அவசியமில்லை.

ஆரோக்கியம், கல்வி போன்ற சமூக வசதிகளைப் பொதுத் துறை வாயிலாக அளிப்பதில் இந்தியாவில் ஒரு பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. தனியாருக்கு வெளியே கொடுக்க வாய்ப்பில்லாத போலீஸ் பணி மற்றும் நீதி நிர்வாகத் துறைகளில்கூட நாம் பல நாடுகளைவிடப் பின்தங்கி நிற்கிறோம். எடுத்துக்காட்டாக, 2013இல் இந்தியாவில் லட்சம் பேருக்கு 135 போலீசாரே இருந்தனர். வளர்ந்த நாடுகள் விஷயத்திலும் (இங்கிலாந்தில் 318) வளர்ச்சியுற்றுவரும் நாடுகளிலும் (பிரேசிலில் 262) இந்த எண்ணிக்கை அதிகம்.

ஊதியத்துக்காகவும் பயிற்சிக்காகவும் அரசு செலவினத்தை அதிகரிப்பதன் மூலம் இத்துறைகளில் வேலைவாய்ப்பு கணிசமாக விரிவாக்கப்பட முடியும். இதற்குத் தேவையான பணத்தில் பெரும்பகுதி கூடுதல் வருவாய் கிடைக்கச் செய்வதன் மூலம் மட்டுமே பெறமுடியும் என்றாலும் அதன் வேலைவாய்ப்பு உருவாக்கும் ஆற்றலை அதிகரிக்க அரசு செலவினங்களை மாற்றியமைக்க வேண்டியுள்ளதா என்ற கேள்வியையும் எழுப்ப வேண்டியது அவசியமானது. எடுத்துக்காட்டாக, அரசுக்குச் சொந்தமான விமான சேவையான ஏர் இந்தியா ஆண்டுக்கு ரூ.5000 கோடிக்கும் அதிகமாக நஷ்டத்தைக் காணுகிறது.

இந்தப் பொதுப்பணம் ஆரம்ப சுகாதார நிலையங்களையோ அல்லது பாலிடெக்னிக் நிறுவனங்களையோ நடத்தப் பயன்பட்டிருக்குமேயானால் எவ்வளவு அதிகமாக நிகழ்கால, எதிர்கால வேலைவாய்ப்புகளை உருவாக்கியிருக்க முடியும். அரசு செலவினங்கள் நீடித்த முறையிலும் சமத்துவ அடிப்படையிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குப் பயன்படும் வண்ணம் அவற்றை முதன்மைப்படுத்தவேண்டிய அவசியமுள்ளது என்பதை இது காட்டுகிறது.

(இந்தியப் பொருளாதாரம் 2017இல் 1.28 கோடி வேலைவாய்ப்புகளைக் கூடுதலாக உருவாக்கியதா? நாளை ஆராய்வோம்).

**நன்றி: [இந்துஸ்தான் டைம்ஸ்](https://www.hindustantimes.com/india-news/india-s-job-challenge-options-aplenty-but-well-paying-ones-elude-workforce/story-I46QCXJpCtrDvuSadouJdK.html)**

**தமிழில்: பா.சிவராமன்**

*

[வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!](https://minnambalam.com/k/2018/10/02/92)


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share